Thursday, October 25, 2012

நானும் அவளும்! (நினைவுக் குறிப்புக்கள்:3)வளுக்கும் எனக்கும் 17 வருடப் பந்தம்.

இந்த 17 வருடங்களில் அவள் என்னை ஒட்டிக் கொண்டும் 
நான் அவளைக்  கட்டிகொண்டும் திரிந்த காலங்கள்......

ம்ம்ம் ....அது ஒரு கனாவில் உலா வந்தது போல்....

நான் இயல்பாகவே நமது சமூகக் கலாச்சாரக் கொள்கைகளில் பற்றுள்ளவன்.அவற்றில் வழுவாதிருக்கும் குடும்பத்தை நடத்தி வர முயன்றவன்.

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இக் கொள்கைகளில் நான் கொண்டுள்ள  கடுமையான அணுகுமுறைகள்  ’அவள் பாதை வேறு’: எனது பாதை வேறு’ என்றாகி எனது பாதையிலிருந்து அவளை .’ஒவ்வாமை’ என்னும் பிடிவாதம் பிரித்து  விட்டது.

ஆம்!

நவீனகால நடைமுறையில் நாட்டம் செலுத்தத் தொடங்கிய அவளுக்கு
நான் வேப்பங்காயாகத் தெரியத் தொடங்கியதால், நான் அவளுக்கும்;
அவள் எனக்குமாக ஒவ்வாதவர்களாக மாறி விட்டோம்.

அதன் விளைவாக ‘17 ஆண்டுகளாக என் உணர்விலும் உள்ளத்திலும் 
இரண்டறக் கலந்து உதிரப் பாசம் கொண்டிருந்த அவளை,மறந்து விடுவது’ 
என்ற வைராக்கியத்துக்கு நானும் இடம் அளிப்பதைத் தவிர வேறு வழி இல்லாது போயிற்று.

அதன்படி நாங்கள் பிரிந்து  7 ஆண்டுகள் சென்றுவிட்டன.
என்றாலும் 

அவ்வப்போது, என் உள்ளத்தில்
அவளைப் பற்றிய உணர்வுகளும்
எண்ணங்களும் தனிமையில்
தோன்றும்;அப்போது, எனது
கட்டுப்பாட்டையும் மீறி,
நீர்த்திவலைகள் தோன்றி
கண்ணையும் நெஞ்சையும்
அடைக்கும்.

அந்த நிலையில் ’எங்கேயாவது.,அவளை, வழியிலாவது பார்க்க வேண்டும்” 
என்கிற தடுமாற்றமும் தான்தோன்றித் தனமாகத் தோன்றும்.

என்னை நெருங்கிப் பழகிய நண்பர்கள்,என்மீது கழிவிரக்கம் கொண்டு
அவள் இருக்கும் இடம் தெரிந்து என்னை அழைத்துப் போகவோ
அல்லது அவளை அவளைக் காண்பதற்கோ விரும்பி என்னை வற்புறுத்திய போதும் ‘ஞானவைராக்கியத்தோடு’ மறுத்து விடுவேன்.

‘நான் அவளை பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? என்று எதிர்வாதம் செய்து
அவர்களையும் பேசாதிருக்கச் செய்து விடும் எனது கோபம்.

இருந்தபோதும்,
எனது புகைப்பட ஆல்பத்தில் அவள் என் தோள்மீது தவ்வித் தொற்றிக்
கொண்டிருப்பதும், எனது பேனாவைப் பிடுங்கி அவள் கர்ம சிரத்தையோடு
எழுதிக் கொண்டிருப்பதும், அவளுடைய பிறந்த நாள் காலப் புகைப் படங்களில் ஒரு தேவதைபோல்  அவள் குதூகலித்துக் கொண்டிருப்பதுமான காட்சிகள் என் கண்ணில் படும்போதெல்லாம் நெஞ்சில் ஓர் ஈரம் இளகி, விழித்திரையை மறைத்துக் கொண்டு,சற்று தடுமாற வைத்து விடும்.

அப்போதெல்லாம்,’வீரன் நீ, விழிநீர் சிந்தலாமா?’ என்று மனச்சாட்சி கேட்கும்; உணர்ச்சிகளிலிருந்து என்னை விடுவிப்பது அதுதான்.

நேர்மைக்கும் நிஜமான உறவுக்கும் பகையாகிவிட்ட குடும்பத்தை விட்டுப் பிரிகின்ற சூழ்நிலை ஏற்பட்டபிறகு தனிமைதான் எனக்கு உறவானது.

அதன் கொடுமை சற்று வித்தியாசமான சூழலை ஏற்படுத்தியபோது அதைத் தவிர்க்கும் காரணியாக முகநூல் எனக்கு வாய்த்தது.

எழுதினேன்;எழுதினேன்...
ஏராளமான விஷயங்களைக் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும். கருத்துக்களாகவும் எழுதினேன்;

ஏராளமான நண்பர்கள் எனக்கு நண்பர்களாக முகநூலிலும் வலைத்தளத்திலும் எனக்குக் கிடைத்தனர்.ஆனாலும் அவள் எனக்குக் கிடைக்கவில்லை;குறைந்த பட்சம் முகநூல் நட்பாகக் கூட.

’இந்தக் கானலிலாவது அவள் தோன்றி தொலைதூர நட்பில்  இருக்கட்டுமே’ என்று மனம் விரும்பியபோது, அவள் பெயரை இணையதளத்தில் – கூகுளில் தேடினேன்.

அதோ-
நன்றி கெட்டவளாக அவள் மாறிப் போயிருந்தாலும் நன்றிமிக்க நாய்களுடன் புகைப்பட ஆல்பத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

’நானே உலகம்; என்ற உயிர்த்துடிப்போடு அவள் என்னுடன் இருந்த காலச் சூழலில் எனது சிந்தனைகள் சுழலத் தொடங்கின....

‘ஏய்...சபா,அதோ ‘சுமதி” (அவள் பெயர் இங்கு மாற்றப்பட்டுள்ளது) என்று அவளுடைய பெயரைச் சொன்னால்போதும்,அந்த நாய் இங்கும் அங்கும் தாவிக் குதித்து, வாசல் கேட்வரை தவ்வி ஓடிப் பார்த்து விட்டு,திரும்பவும் நம்மிடம் வந்து குரைக்கும்.

அந்தக் குரைப்பில் ‘எங்கே தன் எஜமானியை காணவில்லை?’ என்ற அர்த்தம் அவதானித்திருக்கும்..

வீட்டில் இரண்டுகால் நாய்களோடு அந்த நான்குகால் ஜீவன் வளர்ந்து,எல்லோர் மனதிலும் எல்லைமீறிய விசுவாத்தைக் காட்டி பாசம் கொண்டிருந்தது. அதன் அறிவுத்தனத்தைப் பற்றி இன்னொரு தனிப்பதிவுதான் தர வேண்டும்..

சபாபதி’ என்று அதற்குப் பெயரிட்டுக் கொண்டனர் அவளும் அவள் உடன் பிறந்தாரும்.

’வாய் இல்லா ஜீவன்களை வளர்த்தால் நம்மைப் போலவே அவற்றின் தேவைகளை அறிந்து வளர்க்க வேண்டும்’ என்பதில் கண்டிப்புக் காட்டுவேன்.

என்னுடைய Uncompromised Policyகளில் இதுவும் ஒன்று.

பல சமயங்களில் சபாவைக் கட்டிவைத்து விட்டு’அதற்கு என்ன தேவை? என்பதை மறந்து –தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் மெய்ம்மறந்து போய்,அந்த இரண்டுகால் ஜீவன்கள் பொழுது போக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து,பொறுக்காமல் கடுமையாகக் கோபித்து கொண்டு அந்த ‘சபா’வை நண்பர் ஒருவர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்து விட்டேன்.

இதனால் சில நாட்கள் அழுது விரக்தியில் பட்டினி கிடந்து உள்ளிருப்பு ஒத்துழையாமையைக் காட்டி,எனது இறுகிய மனதை இளக வைத்து
சபாவை மீட்டுக் கொண்டவளை அந்த இணைய தளத்தில் பார்த்தபோது,
’அதே சபாவையும் என்னை விட்டுப் பிரிந்த காலத்தில் ’அதுவும் நானும்
ஒன்றுதான்’ என்ற கணக்கில் எனது சொந்த ஊரில் நடு ரோட்டில் விட்டுப்போன அவளுடைய அரக்க மனமும் என்முன் தோன்றிற்று.

‘இப்பொழுது எனது கண்டிப்புக்களிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டு,
தன் போக்குக்கு ஏற்ப, நவநாகரீகமாக வாழ்கிறாள்’என்பதை அந்த இணையதளப் படங்கள் எடுத்துக் காட்டின.

திடீரென்று ஒரு ஞானம் பிறந்தது.

‘இப்பொழுது,தனக்கென்று ஒரு வலைத்தளம்- அதுவும் நாய்களின் பெருமைகளைப் பேசுவதற்கென்று வைத்துக் கொண்டிருக்கும் அவள்,
இந்த முகநூலிலும் இருப்பாளே!; தேடிப் பார்’ என்றது மனம்.

மனம் கட்டளையிட்டவாறே,அவள் பெயரை ‘கிளிக்’ செய்தேன்.

அட... அவள்தான்!

தனது பெயரை மற்றிக் கொள்ளாமல் எனது பெயரின் ‘இனிஷியலுடன்’ அப்ப்டியே முகநூலில் இருந்தாள்.

‘நாம் நமக்குள் அற்றுப்போன பந்தபாச உறவுகளைப் புத்துப்பித்துக் கொள்ள வேண்டாம்;குறைந்த பட்சம் முகநூல் நண்பர்களாகத் தொடர்ந்தால் என்ன?’
என்று ஒரு தகவல் அனுப்பி அவளது நட்பைக் கோரினால் என்ன?

என்று எண்ணிய மனது –
ஒருவகைக் கடமை உணர்வு உறவின் கோடு போட, அவளை எனது முகநூல் நண்பராக்கிக் கொள்ள Friend’s request சொடுக்கியை ‘கிளிக்’ செய்தேன்.

முகநூல் தளத்தின் தானியங்கிச் சொடுக்கி சொல்லிற்று:

‘You can’t contact a stranger’

’அறிமுகமற்ற- அந்நியருடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது’

ஓ...!
அவள் எனக்கு ஒரு Stranger (அந்நியமானவள்) என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிற இந்த கணினிக்கு ’நானும் அவளும் கடந்த 17 வருடங்களாக உதிரத்தாலும் உயிரிப்பிணைப்பாலும்  வாழ்ந்து கொண்டிருந்த ’தந்தை-மகள் உறவு என்ன?’ என்பதுதான் தெரியவில்லை.

தெரியவில்லை என்பது இந்தக் கணினிக்கு மட்டுமா?
அவள் கற்றுக் கொண்ட இந்த நவீனமயக் கல்வி அறிவுக்கும்தான்!

மனம் இறுக்கமானாலும் அதன் நினைவுகள் இளகத்தான் செய்கின்றன!

இவண்.
கிருஷ்ணன்பாலா
Post a Comment