Thursday, October 4, 2012

நெருப்பின் விருப்பு! (நினைவுக் குறிப்புக்கள்:1)


னது நண்பரும் பத்திரிகை உலகின் ஜாம்பவானுமான திரு ராவ் (ராகவேந்திரா கவாலே) அவர்கள் முன்பு ஒரு முறை (1999களில் என்று நினைவு)  ‘தமிழகத்தின்  பிரபலமான வார இதழ் குழுமத்தில் என்னை இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று விரும்பி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

எனக்கு ‘அங்கு பணியாற்றுவது எனது வெகு சுதந்திரக் குறிக்கோளுக்கு விரோதமானது’  என்பது உள்ளங்கையிடை  நெல்லிக் கனி’ எனத் தெளிந்திருந்த போதும், திரு.ராவ் அவர்கள் சொன்னாரே என்பதற்காகவும் அவரது அன்பையும் நம்பிக்கையையும் உதாசீனம் செய்யக் கூடாது என்பதற்காகவும் அந்தப் பிரபல வார இதழ் நிர்வாக இயக்குநனர் அவர்களை,அழைப்பின் பேரில் சந்திக்கச் சென்றேன்.

திரு ராவ் அப்போது அந்த வார இதழின் குழுமப் பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும் பதிப்பாளராகவும்  இருந்தார்.

நான் ’மாதச் சம்பளம் பெற்று ஓரளவேனும் குடும்பம் நடத்தும் வசதியில் இருக்க வேண்டும்’ என்ற அன்பினாலும்  ‘எடுத்த காரியத்தைப் பளிச்சென்று முடிக்கும் திறமையாளனைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்’ என்ற அக்கறையினாலும் உள்ளன்போடு திரு. ராவ் அவர்கள் விரும்பி இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

எனினும் என் மனம் அப்போது அதற்கும் முந்தைய நினைவுகளில் சுழன்றது:

1972களில் இதே வார  இதழில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்று துடியாய்த் துடித்து அலைந்தவன் நான்.

காரணம் கவியரசு கண்ணதாசன்  அவர்களின் கவிதைகள் வாரம் தோறும் அதில் வெளியாகிக் கொண்டிருந்ததால் அதில் பித்துப் பிடித்துப்போன என் மனது அதில் ஒரு உதவி ஆசிரியனாகச் சேர்வது ஒன்றே வாழ்வின் உன்னத நிலை’ என்று கனவு கண்டு வந்திருந்தது. பல நாட்கள் முயன்றும் அந்த வார இதழின் இரும்புக் கேட்டை தாண்டி அப்போது உள்ளே செல்ல முடியவில்லை.

பிறகு மூதறிஞர் இராஜாஜி அவர்களைச் சந்திக்கப் போய்,ஸ்ரீ சதாசிவம் அவர்களிடம் அனுப்பப்பட்டு,அவருக்குச் செயலாளராகவும் கோகுலம் இதழின் ஆசிரியராகவும் இருந்த ’ஆத்மா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் திரு.கே. ஆர்.ஆத்மநாதன் அவர்களின் கீழ் கோகுலம்,கல்கி,ஸ்வராஜ்யா இதழ்களில் சேர்ந்து விட்டேன்.

30 ஆண்டுகளுக்கு முன் எந்த இரும்புக் கதவுகள் எனக்குத் திறக்க மறுத்தனவோ அந்த இரும்புக் கதவுகள் இப்போது மரியாதை கலந்த அன்போடு என்னை வரவேற்றன.(உபயம்: திரு ‘ராவ்’)

ஆனால்,முன்னாளில் இருந்த பித்து அப்போது முற்றிலும் என்னை விட்டுப் போயிருந்தது.

சுறுசுறுப்புக்கும் துணிச்சலுக்கும் பேர்போன அதன் நிர்வாக இயக்குநனர்,என்னை உள்ளே அழைத்ததும், என்னுடன் நீண்ட நாள் பழகிய வாஞ்சையோடு, ‘மிஸ்டர் பாலா, திரு கண்ணன் CEO;அவரிடம் பேசுங்கள்,’என்று சொல்லி அந்த அறைக்கு என்னை அழைத்துச்  செல்ல உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

அந்த முதன்மை அதிகாரி (CEO) என்னை அமரச் செய்து எனது  ‘பயோ டேட்டா’வைப் பார்வையிட்டார்.

அவருக்குப் புரிந்து விட்டது: ‘30 ஆண்டுகளில் 21 இடங்களில் பணியாற்றி முதலாளிகளை அடிக்கடி மாற்றிக் கொள்கிற ஆள் நான்’என்பது.

‘ம்ம்ம்  very rich bio-data' என்றார்.

எனக்கும் புரிந்து விட்டது,அவர்கள் எனக்குரிய சம்பளம் தரும் அளவுக்கு rich ஆன மனம் கொண்டிருக்கவில்லை’ என்பது.

“So what Sir" என்று கேட்டேன்.

‘மிஸ்டர் பாலா,விஷயத்துக்கு நேரிடையாகவே வருகின்றேன். இப்போதெல்லாம் HIRE and FIRE" என்பதுதான் கம்பெனிகளின் பாலிஸி” என்றார்.

அதாவது, நினைத்தால் வேலைக்கு எடுத்துக் கொள்வது;தேவையில்லை என்றால்பணியில் அமர்த்தப் பட்டவர்களை  வெளியில் எப்போது வேண்டுமானாலும் அனுப்பி விடுவது’ என்பதைத்தான் Hire & Fire' என்று சுருக்கமாகச் சொன்னார்.

நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“ஸார்,உங்கள் பாலிஸி என்ன என்பதைச் சுருக்கமாகச் சொன்னதற்கு நன்றி ; ஆனால் என் விஷயத்தில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது: ‘You can not hire the Fire'

மிரட்சியான புன்னகையோடு எழுந்து நின்று கை கொடுத்துப் பின் வணக்கம் சொன்னார்.

எனது சூடான கை அவரைச் சுட்டிருக்குமோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா
Post a Comment