Sunday, October 14, 2012

ஈனருக்குரைக்கும் பாடம்

நண்பர்களே,

வானரம் மழைதனில் நனைந்திடத்  தூக்கனம்
தானொரு நெறிசொலத் தாண்டியே பிய்த்திடும்;
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்குரைத்திடல் இடறுத லாகுமே!


என்று ஒரு பழம் பாடல்.

தமிழில் கிடைத்திருக்கும் பொக்கிஷம் இது.

இதன் விளக்கம்: 

குரங்கு ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தது.
அருகில் தொங்கிக் கொண்டிருந்த கிளையில் கூடுகட்டி அதன் உள்ளே பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்த தூக்கனாங்குருவிநீயும் உனக்கேற்றபடி ஒரு கூட்டைக் கட்டி இருப்பாயானால் மழையில் நனையாமல் இருக்கலாமே!’ என்று குரங்குக்கு ஆலோசனை கூறிற்று.

குரங்குக்கு வந்தது கோபம்.

”எனக்கா புத்தி சொல்கிறாய்? நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?”என்றபடி அந்தக் கிளையில் தாவிக் குதித்து அங்கே தொங்கிக் கொண்டிருந்த கூட்டைப் பிய்த்தெறிந்து விட்டுப் பழையபடி மழையில் நனைந்து நடுங்கத் தொடங்கிற்று.

பண்போடும் பக்குவத்தோடும் வாழ விரும்பாதவர்கள் எவ்வளவுதான் படித்திருந்த போதிலும் ஞானமும் கல்வியும் இல்லாத மூடர்கள்அவர்கள் இந்தக் குரங்கை ஒத்தவர்கள்.


மூடருக்கு நன்னெறியைப் போதித்தால் அவர்கள் நம் மீதே பாய்ந்து பிராண்டிக் காயப்படுத்தி இன்புறும் இயல்புள்ளவர்களாக இருப்பர்களே அன்றி, எண்ணிப்பார்த்துத் தங்களைச் செம்மைப்படுத்தும் சிந்தனை சிறிதும் கொள்ளாதவர்கள் என்பதை அனுபவத்தால் விளங்கிக் கொள்ளலாம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.10.2012

No comments: