Friday, October 5, 2012

நட்பின் கர்வம்! (நினைவுக் குறிப்புக்கள்:2)


'நடுப்பங்கு’ துரை' என்றால் திருப்பூரில் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
நியாயவான்;இலக்கியத் தேனி; நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்லும்  நேர்மையாளர். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து பகட்டில்லாமல் வாழும் எளிய உணர்வாளர்; எனது அன்பிற்குரிய நண்பர்.

இதுதான் திருப்பூர் ’நடுப்பங்கு’ நாச்சிமுத்துக் கவுண்டர் துரைசாமி அவர்களின் விலாசம்.

‘நடுப் பங்கு’ என்பது அவரது பூர்வீகச் சொத்தின் பாகப்பிரிவினையில் கிடைத்த நடுப்பாகத்தின் காரணப் பெயர். துரைசாமி என்ற பெயர் நூற்றுக் கணக்கில் திருப்பூரில் இருக்கலாம். ஆனால் உலகப்பிரசித்தி பெற்ற இப் பனியன் நகரில் ‘நடுப் பங்கு துரை’ என்றால் ஒரே ஒருவர்தான்;அவர்தான்  எனது நண்பர்.

சில மாதங்களுக்கு முன்-  
தான் பங்கேற்றுக் கட்டிவரும் கொங்கு காடை குலத்தவரின் குலதெய்வக் கோவிலான ‘காங்கேயம் கீரனூர் ‘ஸ்ரீ செல்வநாயகி அம்மன் திருக்கோயில் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வரலாம்; நீங்களும் வாருங்கள்’ என்றழைத்தார்.

விலை உயர்ந்த காரை, அவரே ஓட்டி வர நானும் எனது இன்னொரு நண்பரும் மற்றொருவரும் அமர்ந்து கொண்டு திருப்பூரிலிருந்து  காங்கேயத்துக்குப் பயணித்தோம்.

கார் ஓட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டவர் திரு.’நடுப்பங்கு’ துரை என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

வெகு லாவகமாக அவர் காரை ஓட்டிச் சென்றதைப் பார்க்கப் பார்க்க எனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன….

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது வெகு பிரபலமான ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் அதன் நிறுவனத் தலைவருக்குச் செயலாளராகவும் இருந்தேன்.

எனக்கும் அந்த நிறுவனத்தின் தலைவருக்கும் ‘முதலாளி- தொழிலாளி’ பாவ நிலை இல்லாது, உடன்பிறந்தவர்களின் உறவு நிலையையும் தாண்டிய உண்மைமிகுந்த நேசநிலை நிமிர்ந்திருந்த காலம் அது.

உடல்,பொருள்,ஆவி மூன்றும் ஒன்றிணைந்த உயர்வான நட்பின் அடிப்படையில் எங்கள் அன்பும் நட்பும் நம்பிக்கைகளும் சேர்ந்திருக்க,
‘என்கடன் பணி செய்து கிடப்பதே’ என்றிருந்தேன்.

அவருடைய நிறுவனத்தின் வளர்ச்சியில் அவரையும் மிஞ்சிய அக்கறையும் ஆர்வமும் நான் கொண்டிருந்ததை எனக்கு நெருக்கமான பத்திரிகை உலக நண்பர்கள்கூட கிண்டல் அடிப்பார்கள்.

எனது குழந்தைகளை அருகிருந்துக் கவனித்து ‘அவர்களுக்கு என்ன தேவை?’ என்பதை எல்லாம்கூட மறந்து விட்டு, ‘அவரும் அவரது நிறுவனமும் வானுயரப் பேர் கொண்டு நிலைத்திருக்க வேண்டும்’ என்பதில் மட்டுமே எனது கவனம் அப்போது என்னை உணர்வுப்பூர்வமாக ஆட்கொண்டிருந்தது.

எனது உழைப்பை முழுமனதோடு உணர்ந்திருந்த அவர் (நிறுவனத் தலைவர்) தன் உடன்பிறந்த சகோதரர்களுக்குத் தரும் இடத்துக்குச் சற்றும் குறையாத அன்பையும் வாஞ்சையையும் உரிமையையும் எனக்குத் தந்திருந்தார்.

தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளில் இருப்பார். எந்த நாட்டிலிருந்தாலும் தினசரி என்னுடன் பேசிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பார்.

உள்நாட்டில் இருக்கும்போதெல்லாம் என்னைத் தனது காரில்  முன் இருக்கையில் அமர்த்திக் கொண்டு வெளியில் அடிக்கடி பயணிப்பது சகஜமான ஒன்று.

மிக விலை உயர்ந்த கார்; அருமையான டிரைவர். இருந்தும் கூட டிரைவரைப் பின் சீட்டில் உட்கார வைத்து விட்டுக் காரை ஓட்டிச் செல்லும் வழக்கம் அவருடையது.

‘டிரைவர்- முதலாளி’ என்ற பாகுபாடெல்லாம் அவருக்குக் கிடையாது. 
கார் ஓட்டுவதில் அவருக்கிருந்த  அலாதிப் பிரியம்கூட இந்த வேறுபாட்டை அகற்றி இருக்கலாம்.

எங்கள் பயண நேரங்களில் நிறுவன வளர்ச்சிக்கான பணிகள், அரசுத் தொடர்பான வேலைகள் மற்றும் உலக விவகாரங்கள் அனைத்தும் மாறி மாறி அலசப்படும்; மிக ஆழமாகச் சிந்தித்து கடுமையாக உழைத்து அந்தத் தொழிலுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து, இந்தியாவில் மட்டும் இல்லாமல், உலக அளவில் தனது ஏற்றுமதித் தொழிலுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த திறமையும் உழைப்பும் கொண்டவர் அவர்.

இன்று அதே தொழிலில் நேர்மையற்றவர்கள் புகுந்து, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் சக்திகளுடன்  கைகோர்த்துக் கொண்டு அடித்து வரும் கொள்ளைகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இவர் ‘அந்தத் தொழில் என்ன?’ என்பதே தெரியாதிருந்த காலத்தில்.அதை நேர்மையோடும் நிஜமான உழைப்போடும் கட்டுக் கோப்பான நிர்வாகத்தோடும், தன் உடன்பிறந்த சகோதரர்களின் கூட்டுறவாலும் உயர் தொழில் நுட்பங்களைப் புகுத்தி பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி உலக நாடுகள் பலவற்றிலும் இந்த தொழிலுக்கு மரியாதையை ஏற்படுத்தி அதன் ஏற்றுமதியில் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருக்கிறார் என்பது ஒரு வியக்க வைக்கும் உண்மைதான்.

அவரது கடின உழைப்புக்கும் நவீனத் தொழில் நுட்பத்துக்கும் ‘அந்தத் தொழிலுக்கு அவர்தான் இந்தியாவின் முன்னோடி’ என்பதற்கு நானே ஒரு அசைக்க முடியாத சாட்சி. 

இன்று நான் அவருடன் இல்லை என்றாலும் அந்த உண்மையும் நேர்மையும் மறைந்து விடாது.

ஏற்றுமதித் தொழிலில் அவர் நிறுவனம் கொடிகட்டிப் பறந்த சூழ்நிலையில், நான் அவருடைய செயலாளராகவும் அவருடைய நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் இருந்ததும் என்னுடனான பயண நேரங்களும் அதன் கலந்துரையாடல்களும் அவருக்குக் கிடைத்த அறிவார்ந்த வடிகால்; Refreshment. என்பது மிகையல்ல.

இந்தக் கலந்துரையாடல்களின் அடிப்படையில்தான் அவருடைய தொழில்துறை அனுபவம் மற்றும் சிந்தனைகளை அப்போதைய பிரபலமான வார இதழில் தொடர் கட்டுரையாக அவருக்காக,அவர் பெயரில் 52 வாரங்கள் தொடர்ந்து என்னால் எழுத முடிந்தது.
.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நிறுவனத்தின் பணிகள் பொருட்டு அநேகமாக, தினசரி வாடகைக் கார் எடுத்துக் கொண்டு நான் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியவனாயிருந்தேன்.

அப்போதெல்லாம், நிறுவனத் தலைவர் சென்னையில் இருந்தால், அவர் இருக்கும் நாட்களில் தினசரி அவரது இல்லத்துக்குச் சென்று அவர் அலுவலகத்துப் புறப்படத் தயாராகும் வரையில் காத்திருந்து,தயாரானதும் அவருடன் காலை உணவு அருந்தி விட்டு,பின் அலுவலகம் வரை அவருடன் அவரது காரில்  சென்று அலுவலகத்தில் அவரை விட்டு விட்டுப் பிறகு எனது பணிகளை மேற்கொள்வேன்.

இதில்,என்ன வேடிக்கை என்றால். நான் காலையில் வாடகைக்கு எடுத்த கார் அவரது வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வரை எங்கள் பின்னாலேயே வரும்; சில சமயம் நாங்கள் அலுவலகத்துக்குக் காலையில் செல்லாமல் வேறு முக்கியப் பிரமுகர்களைப் பார்பதற்கோ வேறு நிகழ்ச்சிகளுக்கோ செல்ல வேண்டியிருந்தால், நான் எடுத்த வாடகைக் கார் எங்கள்  காருக்கு
பின்னாலேயேதான் வரவேண்டியிருக்கும்.

‘அந்த வாடகைக் கார் எங்கள் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வரவேண்டியிருந்தது தேவை இல்லாத வெட்டிச் செலவுதான்’ என்றாலும் நிறுவனத் தலைவரின் நெருக்கடி மிக்க நேரத்துக்கு முன் அது தவிர்க்க 
முடியாத அவசியச் செலவுபோல் ஆகி விடுவதுண்டு.
  
இது அவருக்கும் தெரியும்;எனக்கும் புரியும்.

இப்படி அடிக்கடி நிகழ்ந்து, அலுவலகப் பணிகளுக்காக எடுக்கப் படும் வாடகைக்காரின் வீண் ஓட்டம் பற்றி அறிந்து வைத்திருந்த அவருடைய மைத்துனர் ஒருவர், ஒருநாள் என்னிடம், ”ஏன் பாலா, நீங்கள் சொந்தமாகவே ஒரு காரை மாமாவிடம் சொல்லி வைத்துக் கொள்ளலாமே? எதற்கு வாடகை காரை எடுத்துக் கொண்டு அது வீணாக ஓட வேண்டும்? என்று (உண்மையான அக்கறையில்தான்) கேட்டார்.


எனக்கும் நிறுவனத் தலைவருக்குமான சந்திப்புக்கள், நான் அவருடன் பயணப் படும் நேரங்களில் எங்களுக்குள் பரஸ்பரம் கலந்து பேசும் கருத்துக்கள், நிர்வாக விஷயங்கள் இவற்றின் பின்னணியில், நான் முன்சீட்டில் அமர்ந்தவாறு நிறுவனத் தலைவரின் எண்ணங்களை மட்டுமல்லாது வெகு லாவகமாகக் கார் ஓட்டும் அழகையும் ரசித்தவாறு.எங்களுக்கிடையே இருக்கும் நட்பின் இறுக்கம் குறித்தான கர்வத்தையும் முன்நிறுத்தி  அவரிடம் பதிலுக்குக் கேட்டேன்:

”ஏன் மாப்பிள்ளை. ஒரு கோடீஸ்வரர் டிரைவராக இருக்க நான் பயணம் செய்யும் வாய்ப்பை அந்த சொந்தக் கார் தருமா?

நிறுவனத் தலைவரின் மைத்துனர் என்ன பதில் சொல்வார்?

“ம்ம்ம்…நடக்கட்டும் உங்கள் ராஜாங்கம்” என்று - பொறாமை இன்றிப் புன்னகைத்தார்.

அந்த நினைவே இப்போது திரு.நடுப்பங்குத் துரை அவர்கள் கார் ஓட்டும் அழகில் தோன்றிடச் சொன்னேன்:

”பிரதர்,எனக்குள்ள வசதிக்கு ஒரு சைக்கிளைக் கூட வாங்க முடியாது,ஆனால் எப்போதும் கோடீஸ்வரர்கள் கார் ஓட்ட நான் அவர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பை அல்லவா,குருநாதன் எனக்குத் தந்திருக்கின்றான் பாருங்கள்”

கொஞ்சம்கூடச் சங்கடப்படாதவராய், நண்பர் திரு,நடுப்பங்கு துரை அவர்கள் சொன்னார்:

“அர்ஜுனனுக்குத்தான் கிருஷ்ணன் தேரோட்டி; இங்கு கிருஷ்ணனுக்கு நான் காரோட்டி; அதில் கர்வம் கொள்கிறேன்,பிரதர்.”

’அங்கே அர்ஜுனன் வில் வித்தைக்காரனாயிருந்தான்.

இப்போது சொல் வித்தைக்காரனோ?’ என்று நினைத்துக் கொண்டேன்.

2 comments:

Muthiah Thayalan said...

vanakkam sir ungalin malarum ninaivugal padhivu arumai. idhu maadhiriyana unarvukal varum podhu ullathil poo pookkum. sila tharunangalil kanneeraga kooda velipadum.

ulagathamizharmaiyam said...

நன்றி.திரு முத்து முத்தையா.