Thursday, October 4, 2012

சொல்லுவதெல்லாம் உண்மை! (தொகுதி:2)




நினைவில் கொள்ளுங்கள்:
இந்தச் சொற்கள்:
எனது அறிவின் விலாசம் அன்று;

உங்கள்
விலாசங்களின் தொகுப்பு!

இவண்-
கிருஷ்ணன்பாலா




26
அறிவே,
உறைக்குள் இருக்கும்வரை
புத்தியாய் இரு:

வெளியில் வந்தால்
கத்தியாய் இரு!



27
சிங்கம் கர்ஜிக்கும்போது
சிறு நரிகள்
ஊளையிடத்தான் செய்யும்;
நரிகள் ஊளையிடுவதை
விமர்சனம் என்று
கருதலாகாது;

அதை-
’அச்சத்தின் எதிரொலி’
என்றேதான் ஏற்க வேண்டும்!


28
சுயநயலத்துக்காக விழையும்
 நட்பைவிட,
பொதுநலத்துக்காகக்
கொள்ளும் பகைமை மேலானது.


29
எனக்குத் தெரிந்த விஷயங்களுக்கு
 நான் அரசன்;
தெரியாத விஷயங்களுக்கு:
ஆலோசகன்



30
‘இன்பத்தை நாம்
எவ்வாறு அடைந்திருக்கின்றோம்?’
என்பதை

நாம் கடந்து வந்த
துன்பத்தால் உணருங்கள்;

‘துன்பத்தில்
ஏன் துவண்டு நிற்கிறோம்?’
என்பதை

நாம் ருசித்துவந்த
இன்பத்தால் அளந்து காணுங்கள்!
  

31
அயோக்கியர்களின்
கடைசிப் புகலிடம்
அரசியல் என்பது
பரிணாமம் பெற்றுவிட்டது.

இன்று  -

அயோக்கியர்களின்
கடைசிப் புகலிடம்: ஆன்மீகம்.   


32
‘தன்னம்பிக்கை’
என்ற சொல்லை
கோழைகள்
அண்ணாந்து பார்க்கின்றார்கள்;
வீரர்களோ
குனிந்து பார்க்கின்றார்கள்.


33
அழுகையும் துயரமும்
கோழைத்தனத்தின்
முகவரிகள்.

ஆனால்-
அவை,
மனசாட்சியோடு
இருக்கின்றவரையில்
உங்கள்
வீரத்தின் விளைநிலங்கள்!


34
அழுகை என்பது
உங்கள் மனதின்
அழுக்குகளை
அடித்து வரும்
வெள்ளமாக இருக்கட்டும்;

பிறர் மனதின்
இரக்கத்தைக் கரைத்து
அடித்துச் செல்லும்
பள்ளமாக இல்லாதிருக்கட்டும்!    


35
தீமைகள் விலகுவதற்காகப்
பிறருக்கு உள்ளன்போடு
எடுத்துச் சொல்வது அறிவுரை;

தீமைகளே உருவாகாதிருக்க
உண்மைகளைத்
துணிவோடு
சொல்வது: அறவுரை!



36
அனுபவம் என்பது
அறிவுரை மட்டுமே
கூறுவதன்று;
அறிவுரையை
ஏற்றுக் கொள்வதும்தான்.


37
‘சிற்றுளி சிதைக்கிறதே’
என்று
பாறை வருத்தப் படும்;

அதைப் புரிந்தவர்களோ –
அங்கே சிலை ஆகிறதே
என்று சிந்திக்கின்றார்கள்.

38
ஜனநாயகத்தில் ஒருவன் மகிழ
லட்சம் பேர்  ஏமாறுகிறார்கள்;

இலக்கியத்தில் ஒருவன் ஏமாற்ற
லட்சம் பேர் மகிழ்கின்றார்கள்.


39
'விதியை வெல்வதாக'
யாரும் வீர வசனம் பேசலாம்;
ஆனால்
‘அப்படிப் பேசவைப்பதே
விதிதான்’
என்பதை
மதி கொண்டு யாரும் உணர்வதில்லை!


40
பேரண்டம் எனப்படும்
பிரபஞ்சத்தின்
அணுப்பிண்டங்கள் நாம்;
பிறகு
நாம் எப்படிப்
பிறர் பஞ்சத்தைத் தீர்க்க முடியும்?


41
காந்தி அண்ணலைத்
தவிர்த்து,
சிலர்
கடந்த காலத் தவறுகளையும்
குற்றங்களையும்
சத்திய சோதனையின் நகலில்
அப்பட்டமாகச் சொல்லும்
தைரியத்துக்குப் பெயர்:
உண்மையை உரைப்பதல்ல;

அதைவிட மேலான
உண்மைகளை மறைப்பதற்காகப்
பேசும் பெரிய பொய் அது!.!


42
ராட்டையில்
நூல் நூற்கக்
கற்றுத் தந்தது காந்தீயம்;

ஆனால்
அதே ராட்டையில்
கயிறு திரிக்கக்
கற்றுக் கொண்டது: காங்கிரஸ்!


43
நல்ல ஊருக்குத்
திசை காட்டும்
வழிகாட்டி மரம்,
நடுச் சந்தியில்தான்
நிற்கும்;
அதன் பயன்
வழிப் பயணருக்கு மட்டுமே புரியும்;
செக்கு மாடுகளுக்கு எங்கே தெரியும்?

44
வாயுள்ளவர்தான்
வக்கீலாக
நிலைக்க முடியும்!’

இது
நீதி மன்றத்தில்
நிரூபிக்கப் பட்ட உண்மைதான்!

ஆனால்-
வாய்மையுள்ளவர்தான்
வக்கீல் என்பதற்கு
அவர்களுடைய
சட்டப் படிப்பு வழங்கிய
சான்றிதழ்கள்
சாட்சியம் அளிப்பதில்லை.



45
கதவைத் திற;
காற்று வரட்டும்
என்றான்,
அந்தக் கபட சந்நியாசி.

அவள்
கதவைத் திறந்து வைத்தாள்.
விளவு:
வீட்டுக்குள் சன்யாசி;
வெளியில் அவள் கணவன்- பரதேசி.

கதவைத் திறந்து
உறங்கி விட்டால்
காற்றும் வரும்;
கள்ளர்களும் வருவார்கள்.
விழிப்போடு இருப்போர்க்கே
விஷயம் புரியும்!.


46
இலக்கியத்தில்
எனக்குப் பிடித்தது:
எழுத்ததிகாரமும்
சொல் அதிகாரமும்தான்.

மற்றெந்த அதிகாரத்தையும்
தீர்மானிக்கின்ற அதிகாரம்
எழுத்துலகில் எவனுக்குமில்லை.



47
விபச்சாரத்தனங்களுக்கு
ஜன நாயகத்தில் வேண்டுமானால்
மெஜாரிட்டிஎன்பது
தீர்மானிக்கின்ற சக்தியாக
இருக்கலாம்;

ஆனால்-

இலக்கியச் சிந்தனைகளில்
அது எடுபடாது.

இங்கு மைனாரிட்டியே
தீர்ப்பெழுதும்
திறமையைக் கொண்டுள்ளது.


48
மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு
என்பது
தேர்தல் முடிவுகளில்.


அதே மகேசன் தீர்ப்பு,
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால்
தேர்தலுக்குப் பிறகு
மக்களுக்கு வழங்கப் படுகிறது
என்பதையும்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


49
தமிழை
நான் சிந்திக்கும்போது
தலை நிமிர்கின்றேன்;

தமிழர்களைச்
சிந்திக்கும்போது
தலை குனிகின்றேன்.



50
முற்றுப்புள்ளி
ஒரு
வாக்கியத்தின் முடிவு
என்பதைவிடவும்
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பம்
என்பதை ஆராதிக்கின்றேன்!


(சொற்கள் சுடரும்)

No comments: