Tuesday, October 2, 2012

சொல்லுவதெல்லாம் உண்மை! (தொகுதி-1)


நண்பனே,

வா,இங்கு:
முதுகுக்குப் பின்
 நண்பனாய் இருக்கும் 
இதயமும்

முகத்துக்கு முன்
எதிரியாய் நிற்கும்
வீரமும் 

உனக்கிருந்தால்.....

எதிரியை நண்பனாக்கும்
வித்தையை
என்னிடமிருந்து
நீ கற்றுக் கொள்ளலாம்.

இவண்-,

                                  கிருஷ்ணன்பாலா1
எனது எழுத்துக்களை -

குருடர்கள் பார்க்க முடியாது.
முடவர்கள் படித்து நடக்க முடியாது;
செவிடர்கள் கேட்க முடியாது.


2
எனது எழுத்துக்கள்-
தமிழ் எனும்
வேள்வித் தீயிலிருந்து
வெளிப்படும் புகை:

அது
உங்கள் கண்களை
எரிச்சலுறச்செய்தால்
அதை
நன்மை என்றே கொள்ளுங்கள்

ஏனெனில்-
அது
நச்சுப்புகை அன்று;
நல்ல மனம் உடையோர்
மெச்சும் புகைநத்தும் புகை!


3
"பாராட்டில்
புளகாங்கிதம் அடைவதும்;
கண்டனத்திலோ  எதிர்ப்பிலோ
பொல்லாங்கு கொள்வதும்"
எனது இயல்பல்ல.

ஆதலால்-
நான்
எந்த கோஷ்டி கானத்துக்கும்
அடிமை இல்லைஎன்பதை
இங்கே
அறிவிப்புச் செய்கின்றேன்.


4
நான் நடக்கும் பாதையில்
பூக்கள் விழுந்தால்
அவற்றை மிதிப்பதில்லை;
முட்கள் விழுந்தால்
அவற்றை மதிப்பதில்லை!

அதற்காக எனது நடை
திசை மாறுவதில்லை.


5                                                                         
முகநூலில்
ஒரு தவம்’  போல்                                 
தமிழை அடையாளப் படுத்தி
வருகிறீர்களே?
அதில்
என்னதான் கண்டீர்கள்?
என்று
எனது நண்பர் ஒருவர் கேட்டார்.

நான் சொன்னேன்:
பலர் தமிழைத் தொலைத்து விட்டனர்;
சிலர் தமிழில் தொலைந்து விட்டனர்


6
எதையும் எழுதலாம்
என்பது வெறி;
இதைத்தான் எழுத வேண்டும்
 என்பது நெறி.

எழுதும் நெறியைக்
குறிக்கோளாகக் கொள்ளுங்கள்;
வெறியை ,
குறிக்கோளோடு தள்ளுங்கள்.7
கண்ணாடியைச் செய்பவனுக்கும்
அந்தக் கண்ணாடி மீது
கல் வீசித் தாக்கி மகிழ்கின்றவனுக்கும்
அமைந்துள்ள மேடைதான்
இந்த முக நூல்(Facebook).8
நாம் யாருமே
இந்தப் பூமியில்
ஒரு புல்லுக்குக் கூட
உரிமை கொண்டாட முடியாது;
ஒரு புல்லைக் கூட
உருவாக்கவும் முடியாது.

எந்த உரிமையும்
இல்லாத நாம்
வெறும் காகிதங்களில்
பட்டயம் எழுதி
வைத்துக் கொண்டு
எதைச் சாசுவதப் படுத்திக் கொண்டிருக்கிறோம்?9
துன்பத்தை வெல்லுவதற்கு வழி:
அதனைத் தோழமையாக்கிக் கொள்வது;

இன்பத்தை வெல்லுவதற்கு வழி:
அதனை எதிரியாக்கிக் கொள்வது!10
உண்மை - ஒரு மனிதனை                                            
உயர்த்தி வைக்கும்
என்பதை ஒத்துக் கொள்;

பிறகுதான்
இந்த உலகம்
அது பொய்என்பதை 
உனக்குக் கற்றுத் தருவதையும்
ஒத்துக் கொள்ள முடியும்!


11
இறைவனுக்குத்
தனது படைப்பில் ஏற்படும்
அலுப்பின் காரணமாகப்
படைக்கப்பட்டவன்தான்
அரைகுறை மனிதன்;

அந்த அரைகுறைகள்
எழுப்பும் கூக்குரலின்
கொள்கைக்குப் பேர்தான்நாத்திகம்


12
உண்மையைப் பேசுங்கள்;
ஆனால்
அதற்கு மரியாதையை
எதிர்பார்க்காதீர்கள்.

மரியாதையை இழந்து
இவ்வுலகில்
அது
புறக்கணிக்கப்பட்டு வருவதால்,
உண்மைக்கு
மரியாதையைத் தரும்
உண்மையான மனிதராக
உங்களை உயர்த்தி கொள்ளுங்கள்!13
உண்மையைப்
பேசத்தெரிந்தவனுக்குப்
பொய்யை எவ்வாறு சொல்லக் கூடாது?
என்பதும்
தெரிந்திருக்க வேண்டும்.


14
உண்மை பேசுபவனுக்கு
இவ்வுலகம் கசப்பானதுதான்;

ஆனால்
கசப்பான உலகில்
உண்மை பேசுவதே இனிப்பானது.


15                                                             
வாய்மையே வெல்லும்
என்பது
பணத்தைத் தேடுபவர்க்கன்று;
பண்பைத் தேடுபவர்களுக்கு.


16
எழுத முயற்சிப்பதும்
எழுதி முயற்சி செய்ய வைப்பதும்
வேறு வேறு.

ஆனால்
முயற்சிப்பதைத் தூண்டிய எழுத்து
என்றாகும்போது
இரண்டுமே ஒன்றுதான்17
பாதிக்கப் பட்டவனுக்குக்
கிடைக்காத நீதியும்
பயன் அடைந்தவனைத்
தடுக்காத சட்டமும்
பயங்கரவாதத்தின் மறு வடிவங்கள்.18
ஒரு விஷயத்தை –                                                                              
சரியாகச் சொல்லுவது
என்பது முக்கியம்;

அதைவிட முக்கியம் :
அதைச் சரியாகப் புரிந்து கொள்ளுவது.
   


19
அவசியமின்றிப் புகழ்பவன்:
எதையோ அடையத் திட்டமிடும் திருடன்:

அனுமதியில்லாமல் இடித்துரைப்பவன்:
எதையோ காக்க முனையும் அறிஞன்;

புகழ்பவனை ஏற்பவன்:
குழியில் வீழத்
தயாராகிக் கொண்டிருக்கும் குருடன்;

இடித்துரைப்பவனை ஏற்பவன்:
துன்பத்தைத் தூரத்தில்
வைத்திருக்கும் மனிதன்!

20
மௌனம் சம்மதம்
என்பதில்
எப்போதுமே
எனக்குச் சம்மதமில்லை;                                                       

சம்பந்தமற்ற விஷயங்களுக்கும்
அறிவற்ற சிந்தனைகளுக்கும்
மௌனமே சிறந்தது ’
என்னும் போது


21
முன்னோர் முறைமைகளையும்
வார்த்தைகளையும்
 நம்புவதில் நான் ஒரு மூடன்;
கேள்வியே கேட்க மாட்டேன்!

பின்னோருக்கு அதை
எடுத்துச் சொல்வதில்
ஒரு கண்டிப்பான ஆசிரியன்;
தேவையற்ற கேள்விகளை
அனுமதிக்க மாட்டேன்!

உண்மையை அறிந்து கொள்வதில்
நான் மாணவன்;
கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பேன்!22
புகழ்வது என்பது
கலைஞர்களுக்குப் பிடிக்கும்;

புகழாமல் இருப்பது
கருமிகளுக்குப் பிடிக்கும்;

புகழாமல் புகழ்வது
புலவோர்க்குப் பிடிக்கும்;

புகழையே விரும்பாதிருப்பது
ஞானியருக்குப் பிடிக்கும்!23
முட்டாள்களுக்கு நடிக்கத் தெரியாது;
சபையில் கூட அவர்களின்
இயல்பு மாறாது;

அறிஞர்களுக்கு நடிக்கத் தெரியும்;

சபையில் கரகோஷம்
பெறத் தெரிந்த அவர்கள்
முட்டாள்கள் முன்னிலையில்
நடிக்கத் தெரிந்தவர்கள்!


24
இறைவன்
என்னை
மனிதனாகப் படைத்ததன் மூலம்
பெருமைப் பட முடியாது;

நான்  -
மனிதனாக
மரித்துப் போகும்போதுதான்
அவன் படைப்பின்
உன்னதம் பூர்த்தியாக முடியும்!


25
விலாசங்களை எல்லாம்                                  
வீசியெறிந்த பின்னும்
எனக்கு ஓர் விலாசம்;
விலாசங்கள் இல்லாதவன்என்று.


(சொற்கள் தொடரும்)
Post a Comment