Wednesday, October 17, 2012

கவியரசருக்கு அஞ்சலி!





இன்று (17.10.2012)
கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்!
---------------------------------------------------------------------------------
ம்பனையும் கவிகாளி தாசனையும்
கண்டதில்லை என்றாலும்நாமெல்லோரும்
நம்பும்படி நாவளமும் பாவளமும்
நலமார்ந்த சொல்வளத்தால் கூட்டியிங்கு
செம்மார்ந்த சிந்தனைகள் படைக்க ஒரு
செட்டிமகனாக வந்த கண்ணதாசன்!
நம்மை விட்டகன்றாலும்;அவனை இன்று
நினைக்கின்றோம்;நிகரில்லாக் கவியரசாய்!

சித்தர்களும் முத்தர்களும் அன்று சொன்ன
செந்தமிழின் பாடல்களை நம்எல்லோர்க்கும்
தத்துவமாய்,எளிய தமிழ்ப் பாட்டுக்களாய்
தந்ததொரு தனிக் கவிதைப் பேராசான்;
இத்தரையில் ஒருவன் என வாழுகின்றான்;
இவன்நிகர்த்த கவிஞனை நான் கண்டதில்லை!
அத்தகைய வித்தகனை;அறிஞர் போற்றும்
அமரகவி ஆனவனை நினைக் கின்றேனே!

போதையில் கீதையைச் சொன்னவன்;
கீதையின் போதையைத் தந்தவன்;
மேதையர் போற்றுமோர் மேதையாய்
மேன்மைத் தமிழ்க் கவி ஆனவன்!
போதையில் வாழ்ந்தவன் ஆயினும்;
புத்தியை நேர்மையில் வைத்தவன்;
காதலில் தனித் திறம் மிக்கதோர்
காவியப் பாடல்கள் புனைந்தவன்!

அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் நூலை
அறிஞரையும் வறிஞரையும் மயங்கவைத்து
அர்த்தம் உள்ள நீதிகளைச் சாற்றினான்;
அறத் தமிழை வடித்தப் புகழ் ஏற்றினான்!
கர்த்தரைப் போற்றிடும் மேன்மையில்
கவிதையில் ஏசுவின் காவியம் 
சித்தனாய்ச் செதுக்கிய வித்தகன்;
சாவிலாச் சரித்திரம் ஆனவன்!

இவன்போன்று உண்மைகளைச் சொல்லியிங்கு
ஏடெடுத்து எழுதியவர் எவருமில்லை!
அவன்போல எளியதமிழ்ச் சொல்லெடுத்து
அற்புதங்கள் நிகழ்த்தியவர்  நிகருமில்லை!
தவறுகளை எதிர்த்தெழுதும் தைரியத்தை
தனக்குரிமை கொண்டானை இந்த நாளில்
கவலையுடன் நினைக்கின்றோம்;கவியரசைக்
கண்கலங்கி எண்ணுகிறோம்;நண்பர்களே!

கண்டபடி பாட்டெழுதி,காசு பண்ணிக்
காவியத்தின் நாயகனாய்க் காட்டிக் கொண்டு
மண்டியிட்டு,ஆள்வோர்க்குலாலிபாடி
மானமின்றிக் ‘கவியரசுஎன்று சொல்லி
முண்டமெனப் பலர் வாழும் நிலையில்;ஒரு
முழு ஞானக் கவித் திறனைக் கொண்டு புகழ்
கண்டவர்தான் கவியரசு கண்ணதாசன்!
கண்களில் நீர்பெருக நினைக்கின்றேனே!

சொல்லழகு,பொருளழகு,படைப்புத் தோறும்
சுவைமிகுந்த எழுத்துக்கள்,கவிதை என்று
எல்லையறு தத்துவத்தை எடுத்துரைத்து
எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்
வல்லமையைப் பெற்றிருந்த,கவியரசே!
வணங்குகின்றேன்,உனை இந்த  நாளில்;
இல்லை;உனை நிகர்த் தெவரும் இல்லை;
இருப்பவர்கள் எல்லோரும் சிறுவரன்றோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா

No comments: