Thursday, October 11, 2012

சொல்லுவதெல்லாம் உண்மை! (தொகுதி:3)






கண்ணுடையோர் காணுங்கள்;
காதுடையோர் கேளுங்கள்;
எண்ணமுடையோர் எழுதுங்கள்;
இதயம் உடையோர் திறவுங்கள்.


நல்ல கருத்துக்கள்
நாலா திசைகளிலும் பரவட்டும்

இவண்-
கிருஷ்ணன்பாலா






51
நான்-
விதைகளைத் தூவினேன்:

அவற்றில் பல
களிமண்னில் வீழ்ந்து
வீணாய்ப் போயின

இன்னும் பல
பாறைகளில் வீழ்ந்து
பட்டுப் போயின

மேலும் சில
களர்நிலத்தில் வீழ்ந்து
கருகிப் போயின

சில
நல்ல நிலத்தில் வீழ்ந்து
கவிதைகளாய்
நிறைந்த
விளச்சலைத் தந்தன!


52
நான்-
வைரத்தை
வாரிக் கொண்டு
வந்தபோதெல்லாம்
‘கண்ணாடி’என்றே
சாட்சி சொன்னவர்கள்தான்

இப்போது-
கண்ணாடித் துண்டுகளைக்கூட
’வைரம்’ என்றே
வாழ்த்தத் துடிக்கின்றார்கள்!

53
அழகு
கர்வத்தை தருகிறது;
கர்வத்தால்
அறிவு மழுங்குகிறது.

அழகு என்பது
மறையக் கூடியதுதான்;
அறிவு என்பது
வளரக் கூடியது.

அழகு குறையக் குறைய,
அறிவு
அதிகம் அழகு பெறுகிறது.


54
காதலில் மூழ்கியோர்
கரை சேருவதில்லை;
ஏன்
அது ஓர்
சுழல் நீரோட்டம்;
அதில் சிக்கியவர்கள்
அதன் சுழலில்
அடித்துச்
செல்லப்பட்டு விடுகிறார்கள்.



55
அக்ஷய திருதியை 
நல்ல நாள்தான்.

அதைவிட-
அதன் பெயரால்
ஏமாற்று விளம்பரங்கள்
மூலம்
பெரும்பாலான மக்களின்
பணத்தைச் சுரண்டி
கோடிக்கணத்தில்
கொள்ளை லாபம்
சம்பாதிக்கும்
நகைக்கடை அதிபர்களுக்கு
நல்லநாள்தான்
என்பதில் 
சந்தேகமே இல்லை.


56
ரம்ஜான் வாழ்த்துக்களை
இந்து சகோதரனிடமிருந்து
பெருமையாக
ஏற்றுக் கொள்ளும்
இஸ்லாமியச் சகோதரன்
என்றைக்கு
விநாயகர் சதுர்த்தியிலும்
தீபாவளிக் கொண்டாட்டத்திலும்
இந்து சகோதரனுக்கு
வாழ்த்துச் சொல்கிறானோ
அன்றைக்கு
இந்தியாவில்
இஸ்லாம்
உயர்ந்த நிலையை
அடைந்துள்ளது
என்பதை
ஒப்புக் கொள்கிறேன்.


57
வேல் உள்ளவன்
வேலன்

அதேபோல்-
வில்லை வைத்திருப்பவன்
வில்லன் ஆகிறான்;

அப்படியென்றால்-
மூடு உள்ளவன்:
மூடன் தானே?



58
இந்தியப் பாராளுமன்றம்
என்பது என்ன?

ஊழல் எதிர்ப்பு
என்ற பந்தை
எல்லாக் கட்சிகளும்
ஒரே அணியில் திரண்டு,
உதைத்து
வெளியே எறிவதில்
போட்டி போட்டுக் கொண்டு
விளையாடும்
புகழ்பெற்ற
கால் பந்து மைதானம்.


59
பூகோள ரீதியில் -
இமய மலைதான்
உயர்ந்தது
என்ற
உண்மையை –

எங்கள் நாட்டுச்
சமய மலைகள்
சாய்த்து விட்டன.


60
மூடர்களின் சபையில்
முதல்வனாய்
இருப்பதை விடவும்-

அறிஞர்களின் சபையில்
அடிமையாய்
இருப்பதில்
பெருமைப் படுகிறேன்!



61
அன்பை விதைத்தவன்,
ஆனந்தத்தை
அறுவடை செய்கிறான்;

வம்பை வளர்த்தவன்
வழக்கை
அறுவடை செய்கிறான்;

பணத்தைப் புதைத்தவன்
பாவத்தை
அறுவடை செய்கிறான்.


62
உண்மையற்ற புகழ்ச்சியில்
மயங்குவதும்;
நேர்மையற்ற நடத்தைகளில்
நீந்துவதும்
தற்கொலைக்கு நிகரானது.
அதில்
உங்கள் மனசாட்சி
தூக்கிட்டுக் கொள்கிறது

63
தோல்விகளைப் பற்றிக்
கவலைப்படுபவன் கோழை;
வெற்றிகளில்
மூழ்கி விடாதவனே வீரன்





64

செல்வத்தின் சிறப்பு
‘அது
சேர்வதில் அல்ல;
எப்படிச்
செலவிடப் படுகிறது?’
என்பதில்.


65
சிரிக்கத் தெரிந்தவன்,மனிதன்;
சிந்திக்கத் தெரிந்தவன் அறிஞன்;
சிந்தித்ததை எண்ணிச் சிரிப்பவன்:ஞானி



66
எண்ணற்ற நண்பர்கள் எனக்கு
என்பது பெருமையன்று;
எண்ணிப் பார்க்கும் நண்பர்கள்
வட்டமே பெருமைக்குரியது!


67
என்னோடு 
ஒத்துப் போவதற்கு
நீங்கள்
நண்பர்களாகத்தான் 
இருக்கவேண்டுமென்பதில்லை;

எதிர்ப்பாளர்களாகவும் 
இருக்கலாம்;

என்னோடு முரண்படுவதால்
நான்
உங்களை 
எதிரி என்று
ஏற்றுக் கொள்பவன் அல்லன்.

ஏனெனில் -
எனக்குச் சரியான
எதிரியை
நான்
இன்னும்
அங்கீகரித்துக் கொள்ளவில்லை.


68
தாழிப்படாத கதவு;

பையை விட்டு
நீட்டிக் கொண்டிருக்கும் மணி பர்ஸ்;

பெண்ணின்
மார்பகத்தை விட்டு
விலகியிருக்கும் முந்தானை...

இவை-

குற்றவாளிகளை
அழைக்கும் அழைப்பிதழ்கள்!


69

பிஞ்சிலே பழுக்கும் பழம்;
அஞ்சிலே அரும்பும் காதல்;
பஞ்சிலே வைக்கும் நெருப்பு!
நெஞ்சிலே நிறுத்தல் நலம்!


70
பெட்டைக் கோழிகளுக்கு
அழகே கேவுதல்;
முட்டை இடுதல்;
அடைகாத்தல்;
குஞ்சு பொரித்தல்கள்தாம்!

ஆனால்
பெட்டைக் கோழிகள்
கேவினால் போதும்-
சேவல்கள்
அவற்றை ஆராதித்துக்
கூவி அடைகாத்துப்
பொறிக்கின்றன:
தங்கள் காமத்தை மட்டும்.

எங்கே?
இந்த முகநூலில்தான்.


71
இன்று
வள்ளுவனை
எல்லா மதத்தினரும்

தங்கள் சித்தாந்தங்களுக்கேற்ற
குறளை முன் மொழிந்து
விளக்கம் சொல்லி
அவர்
தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்
என்று
உரிமை கொண்டாடுவது
பெருகி வருகிறது.

இதிலிருந்து
நாம்
பெருமைபட்டுக் கொள்ள வேண்டியது:

‘வான் புகழ் வள்ளுவத்தை
எல்லா மதங்களும் ஏற்கின்றன‘
என்பதைத்தான்.


72
அரசியலில்
எம்.ஜி.ஆர் அவர்கள்
கலைஞருக்கு நாமம் போட்டார்;
கலைஞர் அவர்களோ
தமிழருக்கு நாமம் போட்டார்;
தமிழருக்கு நாமம் போட்ட
கலைஞர் அவர்களுக்கு
மேடம் ஜெ. அவர்கள்
நாமம் போட்டார்.

ஆனால்
காலம் செய்த சூட்சுமத்தால்
இவர்கள்
எல்லோரும் ஓர் அணியில்
திரண்டு நிற்கின்றார்கள்

எப்படி?

அண்ணா அவர்கள்
திராவிடம் என்ற பெயரில்
பெரியாருக்குப் போட்ட
நாமத்துக்குப்
பழிக்குப் பழியாக
இவர்கள் மூவரும் ஓரணி திரண்டு
அண்ணாவுக்குப் போட்டு வரும்
நாமக் கூட்டணிதான்.

73
Really I am a beggar;
but
bigger than anybody.
நான்
உண்மையான
பிச்சைக்காரன்தான்;

உங்கள்
எல்லோரையும்விட
பெரிய பிச்சைக்காரன்.


74
சுடரை
ஏந்திக் கொண்டு
இருளைச் சுட்டெரிக்கத்
துடித்தது
மனது.

பிறகுதான்
தெரிந்தது:

சுடரை ஏந்தியபோதே
இருள்
செத்து விட்டது என்பது.



75
அனுபவங்களுக்காகக்
காத்துக் கிடந்தது
அறிவு.

பிறகுதான் தெரிந்தது

‘காத்திருப்பதே
நல்ல அனுபவம்’
என்று.


(சொற்கள் சுடரும்)

No comments: