Thursday, December 19, 2013

தேவ்யானி: காங்கிரஸின் கயமை அரசியல்


மெரிக்காவுக்கான  இந்தியத் தூதரகத்தின்  துணைத் தூதர் திருமதிதேவ்யானி கோப்ராகடேயை  கோப்ரகடே’ என்று சிலர் உச்சரிக்கின்றார்கள்;  
நான்தேவ்யானி கோப்’ரா’கடேஎன்று  விளித்திருந்தேன்.

இப்பொழுது இவரைச் சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களும் நடந்துள்ள  விஷயங்களும்  விஷத்தன்மைமிக்ககோப்ராவின் கொத்தலாகவே இருப்பதால், இவரைகோப்ராகடே என்று நான் விளித்தது சரியாகத்தான் இருக்கிறது..

’தேவ்யானி கோப்ராகடே’  செய்த குற்றங்களின் அடிப்படையில் அவரை அமெரிக்கக் காவல்துறையினர், நடு ரோட்டில் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றது, இந்தியாவுக்கு அமெரிக்கா இழைத்த, தாங்கிக் கொள்ள முடியாத அவமான’மென  இங்குள்ள தேசபக்தர்கள் பலரும் பலவிதத்தில் பலவிதத்தில் பாசாங்குக் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலம்தேவ்யானி செய்த மாபெரும்  குற்றங்கள் பின் தள்ளப்பட்டு, அவரது பதவியின் முக்கியத்துவம்  மட்டுமே பேசப்படும் அவலம் இங்கே அரங்கேற்றப்பட்டிருக்கிறதுஎன்பதை முன்பே எழுதி இருந்தேன்.

’தேவ்யானி, தனது பணிப் பெண்னை அமெரிக்காவுக்கு அழைத்துச்  
சென்றதில் அமெரிக்காவுக்கானவிசாவிதிகளை  மீறி இருக்கிறார்’  என்பதும்  ‘அவர் அக்’கறை’யோடு அழைத்துச் சென்ற பணிப்பெண்ணை  உரிய சம்பளம் தராமல் அரட்டி, மிரட்டி வேலை வாங்கி இருக்கிறார்’ என்பதும் அமெரிக்கக் காவல் துறையினரிடம் அளிக்கப்பட்டிருக்கும் புகார்.

அதனால்தான், அப்பணிப்பெண் அங்கு திடீரென்று காணாமல்போய், காவல் துறையிடம் புகார் செய்திருக்கிறார் என்பது இப்போது தெரிய வருகிறது.

‘குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும்’ என்பதுதான் தர்மத்தின் தீர்ப்பாக இருக்க முடியும்.

ஆனால், ’இங்கு தர்மமும் நியாயமும் தட்டி வைக்கப்பட்டு, ஒரு இந்தியத் தூதரக அதிகாரியை நடு ரோட்டில் வைத்துக் கைது செய்ததன்மூலம்  இந்தியாவின் கௌரவத்தையும் தன்மானத்தையும்  கேவலம் செய்து விட்டது அமெரிக்கா; அதற்கு அது மன்னிப்புக் கோர வேண்டும்; அந்த அதிகாரிமீதுள்ள குற்றப் புகாரை வாபஸ் செய்து குற்றங்களிலிருந்து  விடுதலை செய்ய வேண்டும்என்கிறது சோனியாவின் காங்கிரஸ் அரசு.

‘தேவ்யானிக்கு எதிரான சதிச்செயல்களுக்கு அமெரிக்கா துணைபோயிருக்கிறதுஎன்ற பயங்கரமான குற்றச்சாட்டை இபொழுது இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் விவகாரமாக்கி இருக்கிறார்.

இக்குற்றச் சாட்டைக் கடைசிவரை நின்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தனக்குள்ளது என்பதை உணர்ந்துதான் இப்படிப் பேசி இருப்பார் என்று நம்பலாமா?
 
அமெரிக்கா,என்ன மாதிரியான  குற்றங்களை, ‘அமெரிக்கா-இந்திய தூதரகச் சட்டவிதிகளை மீறிச் செய்திருக்கிறது?  ஒரு IFS  அதிகாரியாக இருந்து கொண்டு தேவ்யானி கோபராகடே என்ன மாதிரியான  விசா’ மோசடிகளைச் செய்திருக்கிறார்?

என்ற -

இந்த இரண்டு தரப்பு விஷயங்களையும் ஆராயாதுதேவ்யானியை நடுரோட்டில் விலங்கிட்டு அழைத்துச் சென்றதும் அவரது ஆடைகளைக் களைந்து சோதனை இட்டதும் இந்தியாவுக்குப் பெருத்த அவமானம்; இதைச் செய்த அமெரிக்கா மன்னிப்புக் கோர வேண்டும்  என்று பார்லிமெண்ட்வரை  பலரையும் பேசவைத்து, இந்தியாவின் மானத்தைக் காப்பதில் அமெரிக்காவை மிகப்பயங்கரமான எதிரிபோல் காட்டத் துணிந்திருக்கிறது , சோனியாவின் சுட்டு விரலுக்குச் சுழலும் மன்மோகன் அரசு.

இது ஒரு அரசியல்மோசடிக்கான நாடகமே அன்றி, நிஜமான இந்தியக் கௌரவத்துக்கான எழுச்சி அல்ல.

‘தேவ்யானிக்கு நடு ரோட்டில் கைவிலங்கிடவில்லைஎன்பதையும் 
அவர் உரிய முறையில் கௌரவமாகத்தான் நடத்தப்பட்டிருக்கின்றார்’ என்பதையும்  அமெரிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரி இப்பொழுது கூறி இருக்கிறார்.

எனவே,

அமெரிக்காவில்நடந்தது என்ன? என்பதை முழுமையாக, முறையாக விசாரிக்காமல், உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒற்றை அதிகாரி செய்த தவறு இன்னதென விளங்கிக் கொள்ளாமல்;அல்லது விளக்கப்படாமல் அவருக்காக இந்திய அரசே அவசரப் பட்டு,ஆர்ப்பரித்து எழும் இந்த விநோதமான விபரீதமானது , வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குகான  வெட்கம் கெட்ட விளம்பரமே அன்றி விஷயமுள்ள விவகாரம்  என்பதை புத்தியுள்ளோர் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

இல்லை என்றால் அமெரிக்கக் காவல்துறையால் ’குற்றவாளி’  என்று கருத்தப்பட்டு கைதாகி, இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள தேவ்யானிக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கிஅவரைக் குற்றம்சாட்டப்படமுடியாத உயர்நிலை அதிகாரியாகப்  பதவி உயர்வு அளித்து, ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள்போட்டதுபோல்  குற்றத்தை ஆய்வு செய்வதற்குப் பதில் 'மகளே உன் சமர்த்து’  என்பதாகக் காட்டிக் கொண்டிருக்குமா, இந்தக் கயமைத்தனமான  காங்கிரஸ் அரசு?

தலித் மக்கள் ஆதரவு,பெண்கள் மத்தியில் ஆதரவு, கிரிமினல் குற்றவாளிகளின் பின்பலம் இவை மூன்றையும் ஒரே கல்லில் வீழ்த்த  வெட்கப்படாமல்  தேவ்யானிக்கு பதவிப் புரமோஷன்  தந்து நீதியைத் தலை குனிய வைக்கும் அதிகாரச் செயல் இது.

இதனிடையே-

அமெரிக்காவுக்கான  இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியான தேவ்யானி கோப்ராகடே IFS காட்டிய ஆசை வார்த்தைகளை நம்பி, பிழைப்புக்காகவும் தனது எதிரகாலம் சிறப்பாக அமையுமென்ற கனவை நனவாக்கவும் அவர் சொல்படி, அவர்பின் கைகட்டிச் சென்ற  சங்கீதாவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து விசனப்படும் சமூக நோக்கர்களும் பெண்ணியவாதிகளும் பார்லிமெண்ட்  எம்.பிக்களும்  மத்திய அரசும் நமது நாட்டின் செய்தி ஊடகங்களும் ஏன் முன் வரவில்லை? என்பதே எனது கேள்வி.

பணிப்பெண்சங்கீதாவின் பின்னணியும் விரிவாக நமக்குத் தெரிந்தாக வேண்டுமல்லவா?

அதிகாரத்தில் உள்ளவனுக்கும் அதிகப் பணம் வைத்திருப்பவனுக்கும்   
அதிகம் சலுகைகளை வழங்கத் துடிக்கும்  நமது இந்திய அரசியவாதிகளின் அவமானத்துக்குரிய இந்த எழுச்சியைக் கண்டு நேர்மைமிக்க இந்தியக் குடிமகன்கள்  வெட்கமும் ரோஷமும் கொள்கிறார்கள்.

அடிப்படைத் தவறுகளைச் செய்து அதிகாரத்தின் நிழலில் விளம்பரம் பெற்று தவறுகளிலிருந்து  தேவ்யானியை விடுவிக்கக் கோரும் மத்திய அரசு, இனி தேவ்யானியை முறைப்படி விசாரித்துத் தண்டிக்க  எப்படி முன் வரும், அவருக்காக இத்தனை ஆரவாரங்களை எழுப்பிய பின்?

அதேபோல், உண்மை நிலை இன்னதென உணராமல்-

'தேவ்யானி ஒரு பெண் என்பதால்தான் இத்தனை கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறதுஎன்கின்றார்கள் இங்குள்ள  பெண்ணியவாதிகள்.

அவர் ஒருதலித்’ என்பதால்தான் இப்படியெல்லாம் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார்என்கின்றனர் வழக்கம்போல்  தலித்தீயவாதிகள்.

அமெரிக்காவில் அறியப்படாத அவமானம் மிக்க சாதி மற்றும் பெண்ணீய உரிமைக் கோஷங்களை, இங்குள்ள கேடு கெட்ட அரசியலைப் போலவே, ’விசா’ப் பெறாமலேயே  அங்கு குடியேற்றும் முயற்சியை, நமது அரசியல்வாதிகள், முடுக்கி விட்டுள்ளார்கள் போலும்?

வேண்டுமானாலும் பாருங்கள்:

இந்தியாவின் தன்மானத்தை மீட்ட காங்கிரஸ் அரசுஎன்றும்
அமெரிக்காவை எதிர்த்து வென்ற  வீராங்கனை அன்னை சோனியா  என்றும்  வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  கோஷங்களைத் தாங்கும் பதாதைகள் பவனி வரப்போவதை.

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.12.2013
Post a Comment