Tuesday, December 17, 2013

இன்ஷா அல்லாஹ்! (அரசியல் சதுரங்கம்:5)

'இந்தியா சுதந்திரம் வாங்கியதுடன் இந்திய தேசியக் காங்கிரசைக் கலைத்து விட வேண்டும்' என்பது காந்தி அடிகளின் விருப்பம்.

ஆனால், பண்டித நேரு அதற்கு உடன்படவில்லை.

பதவி, அதிகாரம் இவற்றில் ‘ பாவசுகம்’ கண்ட அந்தப் பண்டிதர் பக்கம் பலமான கூட்டம் இருந்ததால் கிட்டத் தட்ட இந்தியாவின் மூன்று தலைமுறைகளைப் பையப் பைய  சீரழித்து விட்டது  காங்கிரஸ்.

பதவிப் பித்தர்களின் பகிரங்க மேடையாகத் திகழ்ந்த இக்கட்சி,   தனது கடந்த பத்தாண்டுக் கால ஆட்சியில்  ’இனி எவருமே இப்படிப்பட்ட ஊழல்களைச் செய்ய முடியாது’ என்பதை ஊர்ஜிதப் படுத்தி, மத்தியிலும் மாநில அளவில் தனது கூட்டாளிக் கட்சிகளை   வைத்துக் கொண்டு நாட்டின் கஜானாவையே  சுரண்டி விட்டது.

இதன் விளைவே, நமது நாட்டின் இன்றைய பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் எவரெஸ்ட் உயர விலைகள், நிர்வாகச் சீர்கேடுகள்,ஒழுக்கமற்ற அரசியல் மற்றும் ஜனநாயகக் கேலிக் கூத்துக்கள்.

இதன் காரணமாக-

மக்கள் சினத்தின் மாபெரும் சுனாமிப் பேரலையை உருவாக்கி, இன்னும் நாலைந்து மாதங்களில்  காங்கிரஸைக் காணாமல் போகச் செய்யும் பெருமையைத் தேடிக் கொண்டிருப்பது, அதே பண்டித நேருவின் பேரனின் மனையாட்டியான சோனியாவும் அவரது தவ மைந்தன் ராகுலும்தான்.

நண்பர்களே,

வரும் நாடாளு மன்றத் தேர்தலோடு  இந்திய தேசியக் காங்கிரஸ் என்ற கட்சி மாநிலக் கட்சிகளுக்கும் கீழாக மகா மட்டமாகி, தேசிய அளவில் காணாமல் சிதறுண்டு போய் விடப் போகிறது.

அது, ’இந்தத் தேர்தலோடு கலகலத்துப் போய் விடும்’ என்பது திண்ணம்.

துருப்பிடித்துக் கவிழ்ந்து போன இந்தக் காங்கிரஸ்  கப்பல், இனி  ஒருபோதும் கரை சேராது.

’கரந்த பால் முலை புகாது;  குடம் கவிழ்ந்த நீர், மீண்டும் குடத்துள் சேராது’ அல்லவா?.

அரசியல் சதுரங்கத்தில் முழுமையாக வெட்டப்படும் காயாக,  அரசியல் ஃபக்ரீத்துக்கு அறுக்கப்படும் ஆடாக  காங்கிரஸ் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு விட்டது.

காயலாங்கடை வியாபாரிகள் போன்ற  ‘ஒரு சில காங்கிரஸார் வேண்டுமானால்  துருப்பிடித்துக் கவிழ்ந்து போன இந்தக் கப்பலை எடுத்து, உடைத்து அதன் உதிரி பாகங்களை வைத்துக் கொண்டு அரசியல் ஏலம் விடுவார்கள்’ என்பதை நம்பலாம்.

என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் இனி Gone-Crush தான்.

காந்தி அடிகளின் உள்ளார்ந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வந்த சோனியா அவர்களுக்கு ‘காந்தி’ என்ற அடைமொழி இருப்பது ஒருவகையில் சரிதான், நான் அதை ஏற்கவில்லை என்ற போதும்.

இன்ஷா அல்லாஹ்!

-கிருஷ்ணன்பாலா
17.12.2013

No comments: