Tuesday, December 3, 2013

ஆனந்த அருவி கொட்டும் அட்சய பாத்திரங்கள்!

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

பாவம் எது? புண்ணியம் எது? என்ற அடிப்படைச் சிந்தனையை வளர்க்கும் பண்பு முற்காலத்தில் நமது சமூகக் கட்டமைப்பில் இருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தாங்கள் பெற்றெடுத்து வளர்த்த குழந்தைகளுக்கு மாதா,பிதா, குரு,தெய்வம் என்ற சித்தாந்தத் தத்துவத்தையே முதன்மைக் கல்வியாக ஊட்டித் தங்கள் குழந்தைகளை வளர்த்தனர்.

அந்தச் சமூகமே உலகின் மூத்த,பண்பட்ட குடிகளாகத் திகழ்ந்தது; உலக சமூகத்தால் வியந்து போற்றப்பட்டது. இந்த நாட்டுக்குச் சிறிதும் தொடர்பற்ற முகம்மதியர்களால் இந்த நாட்டின்  சமஸ்தானங்களும்,சிற்றரசுகளும், பிரதேசங்களும் கொள்ளையிடப்பட்டும் கொடூரம் நிகழ்த்தப் பட்டும்  மூர்க்கத்தனமாக அடக்கப்பட்டும்  அடிமையாக்கப்பட்ட நிலையிலிருந்து சிறுகச் சிறுக இதன் கொள்கைககளும்  கோட்பாடுகளும்  ஒடுங்கிப் போகத் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சியில் முற்றாக மாறுபடத் தொடங்கியது.

‘ஆங்கில ஆட்சியாளர்களை அண்டியும் நத்தியும் வாழ்ந்தால் ஒழிய நாமும் நமது சந்ததியினரும் வாழ முடியாது’  என்பதை நமது சமூகத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள்  முடிவு செய்து கொண்டு. ‘இதன் மாண்பும் மகத்துவமும் எக்கேடு கெட்டேனும் போகட்டும்’ என்று கைவிட்டு விட்டு, வெள்ளைக்காரனின் கால்களைப் பிடித்துக் கொண்டதன் காரணமாக, அவர்கள் தங்கள் வருங்காலச் சந்ததியினரின்  தார்மீக உணர்வுகளை மழுங்கடிக்கும் மாபெரும் பிழைகளைச் செய்து விட்டார்கள்.

‘வீரத்தைவிட விவேகமே வாழ்வுதரும்’ என்ற சோரம் போன சித்தாந்தத்தையே சிந்தித்துச் செயல்பட்ட  அந்தக் களைகளுக்கு நடுவே, ஆங்காங்கு  ஆன்மீகமும் ஆண்மையும் அறிவும் ஞானமும் கொண்ட சத்தான வித்துக்களாயத் தோன்றிய  மாமனிதர்களால்தான் நமது பண்பாடும் பாரம்பரியமும் கரை ஏற்றப்பட்டு, காக்கப்பட்டது.

எப்படி ஒரு ஊழிக் காலத்தில், எல்லோரும் எல்லாமும் அழைந்து போகின்ற நிலையில், ஒவ்வொரு உயிரினத்திலிருந்தும் உண்மையும் உயிர்ப்புமான சத்தான ஜீவன்களையெல்லாம் மோஸஸ் காப்பாற்றிக் கரை சேர்த்தாரோ,அப்படியேதான் நமது சமூகத்தின் பேரழிவிலிருந்து நல்ல மரபுகளையும் மாண்புடைய வாழ்வியல் சித்தாந்தங்களையும் விடாது கரை ஏற்றிய நூற்றுக் கணக்கான மோஸஸ்களைப் பெற்றிருந்தாள், நமது தமிழன்னை.

அதனால்தான் நமது பண்டைய இலக்கியங்களில் குறிப்பிட்ட படைப்புக்களைக் காத்து, பின் சமூகம் பயன் பெறுவதற்கான பார்வை கொண்ட அரசர்களையும் ஆண்டிகளையும் அறிவு ஜீவிகளையும் அற்புதக் கவிகளையும் ஆராயும் மனிதர்களையும் அவ்வப்போது ஜனித்துத் தந்து வருகிறாள்,அந்ததாய்.

அவள் ஈன்ற பெருமைமிக்க பிள்ளைகள், தங்கள் வாழ்க்கையில் தமிழையும் தமிழின் உயர் சொத்துக்களையும் பல்வேறு ‘கரையான்’களிடமிருந்து காப்பாற்றி, அக்கரையோடு படிமங்கள் எடுத்துப் பாதுகாத்து வந்ததெல்லாம் இந்த மண் பயனுற வாழ்வதற்கே’; அந்த நோக்கம் உலகம் வாழும் வரைக்கும்  தமிழன் உயிர் காக்கும் உணவாக அல்லவோ, அவளுடைய  நீதி இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் ஆக இருக்கின்றன?

வேதங்களின் விளக்க உரைகளாகவும் உப நிஷதங்களின் உண்மைச் சத்துக்களாகவும் திகழும் நமது பண்டைய  தமிழ்ப் படைப்புக்களில் பார்வையைச் செலுத்துவது ஒன்றே, ‘மேன்மை மிகு தவநெறி’யென மேலோரும் நூலோரும்  சொல்வர். எனினும்- நமது சமூகத்தின் பெரும்பான்மையோரின்  நாட்டமும் தேட்டமும் மேலை நாட்டு நாகரீகத்தின் மினுமினுப்பிலேயே அதிகம் தோய்ந்து போய் நமது மரபு வழித் தத்துவ சித்தாந்தங்களின் பெருமை மறைந்து விட்டது.

ஆக, நேர்மையும்,உயர் ஒழுக்கமும் தெய்வ நீதி பற்றிய  தெளிவும், அறப்பண்புகளும் மிக மிகச் சிறுபான்மையினரின் சிந்தைகளில் மட்டுமே சிறுத்து போன காரணத்தாலும் மிகப் பெரும்பன்மையோருக்கு ‘அத்தகைய சித்தாந்தங்கள் வேற்றுக் கிரகவாசிகளின் விளையாட்டுப் பொருள்’ என்ற மதிப்பீடு மலிந்து விட்டதாலும் இங்கே ‘ஒழுக்கமும் உண்மையும்   உயர் பண்பு நெறிகளும்  ஏதோ உதவாக்கரை விஷயங்கள்’ என்றே ஆகி விட்டது.

ஒப்பற்ற தன்னம்பிக்கைகளையும் தெய்வீகச் சிந்தனைகளையும் தெளிவான அனுபூதி ஞானத்தையும் நமக்குள் ஆனந்த அருவியாய்க்கொட்டும் வல்லமையுள்ள, அட்சயப் பாத்திரங்கள்தான் நமது பண்டைத் தமிழ்  இலக்கியங்கள்.

அவற்றை ஏந்தாமல், பிற தேசத்துப் பித்துக்குளிகளின் பிறன் மொழித் தத்துவ சித்தாந்தங்களை ஏந்தித் திரியும்  மாந்தர்களை என்னென்பது? நமது நீதி இலக்கியங்களை நீங்கள் உணராமல், அவற்றைப் படித்துப் படித்துத் தோயாமல் போனால் எந்த மறைநூலும் உங்களை மனிதர்களாக வாழ உதவாது.

நம் தமிழர்கள் எவருமே பண்பட்ட மனிதர்கள் என்று வாழப் பேராசை கொள்கின்றேன்.

குறைந்த பட்சம் நமது பதினெட்டுக் கீழ்க் கணக்கு நூல்களிலாவது தேர்ச்சி பெறுங்கள், நண்பர்களே. நமது நாட்டின் ஒப்பில்லாத நீதி,நெறி,ஞானச் சித்தாந்தங்க்ளின் சுவையின் பெருமை குறித்தே திருமூலர் இப்படிச் சொல்லி இருக்கிறார்:

“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;
ஊன்பற்றி  நின்ற உணர்வுறு மந்திரம்;
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடில்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே!”

சுமார் 40 ஆண்டுகள் வரைகூட நமது கல்விச் சாலைகளில் Moral Classes என்ற நீதி நெறி வகுப்புக்கள் வாரம் ஒன்று என்ற அளவிலாவது இருந்து வந்தது.  எனது மற்ற வகுப்புக்களை எல்லாம் விட அந்த ஒரு வகுப்புக்காக நான் வாரம் முழுவதும் தவம் கிடப்பேன்;அந்த நேரத்தில் எனது வகுப்புத் தோழர்களில் பாதிப்பேர் காணாமல் போய்  பள்ளிக்கு அருகே இருக்கும் சினிமாத் திரை அரங்குகளில் இப்போது முகநூலில் கூட்டம் போட்டுக் கும்மாளம் போடுகிறார்களே, அதுபோல் அங்கே கும்மாளமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

நான் அவர்களின் கூட்டத்தில் இருந்து விதியால் விலக்கப்பட்டிருந்தேன்.

“ பின்னை நின்றென்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்;
என்னை  நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே!”

என்ற திருமூலரின் வாக்கை எனது விதி எப்படியோ அப்போதே தெரிந்து கொண்டு,என்னை இப்படியெல்லாம் எழுத வைக்கத் தீர்மானித்தது போலும்?

-இவண்
கிருஷ்ணன்பாலா
3.12.2013

No comments: