Tuesday, December 17, 2013

மத்திய அரசே, பதில் சொல்!

Devyani Khobragade


மெரிக்காவுக்கான இந்தியத் தூதரக அதிகாரி ‘தேவ்யானி கோப்ராகடே’  செய்த குற்றத்துக்காக  அமெரிக்காவில் நடு ரோட்டில் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டது இந்தியாவுக்கு அமெரிக்கா இழைத்த, தாங்கிக் கொள்ள முடியாத அவமானமென இங்கு பலரும் பலவகையில்  கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தேவ்யானி செய்த மாபெரும் குற்றங்கள் பின் தள்ளப்பட்டு, அவரது  பதவியின் முக்கியத்துவம் மட்டுமே பேசப்படுகிற அவலம் இதன் மூலம் அரங்கேற்றப்படுகிறது.

‘தேவ்யானி இந்தியாவின் மானத்தையும்  இந்திய உயர் அதிகாரிகளின் யோக்யதாம்சங்களையும் அமெரிக்க வீதிகளில் கொட்டிக் கேவலப்படுத்தி இருக்கிறார் என்பதுதான் உண்மை; அதனால் அவர் தண்டிக்கப்பட வேண்டியவர்’ என்கின்றேன்,நான்.

இன்று இந்தியா முழுவதும் தலைப்புச் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கின்ற அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியான இந்தத் தேவ்யானி   (தமிழில் தேவ யானை அல்லது தெய்வானை). ஒரு வட இந்தியர்.

அவர் தனது வீட்டுக்காகப் பணிப் பெண்ணாய் இருக்க ஒருபெண்ணை   இந்தியாவிலிருந்து போலியான விசா விதி முறைகளைக் கையாண்டு அழைத்துச் சென்றிருர்க்கிறார்; இதற்குத் அதிகாரத்தையும் செல்வக்கையும் சுயநலத்துக்காகத் தவறாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்.

பிறகு அந்தப் பணிப் பெண்ணை மனித நேயமற்ற வகையில் அமெரிக்காவில் கொடுமைப்படுத்தி வேலை வாங்கியிருக்கிறார்.

இந்த வகையில் இப்பெண்மணி ‘த்தூ’தரக அதிகாரி என்பதைக் காட்டிக் கொண்டு விட்டார்.

ஒரு இளம்வயது ஏழைப் பெண்ணை அவளது வறுமையையும்  அதன் தேவையையும் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவில் இருக்கும் தன் வீட்டுக்கு வேலைக்காரியாய் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

அமெரிக்காவின் சட்டத்தை ஏமாற்றியதுடன்  ஒரு உயர் அதிகாரியின் கடமையையும் தவறி ,அந்தப்பெண்ணுக்குத் தன்னுடைய செல்வாக்கைப் பயன் படுத்திப் பித்தலாட்டம் செய்து ‘விசா’ எடுத்துள்ள விஷயத்தை விட, அந்த வேலைக்காரப் பெண்ணை  இரக்கமற்ற வகையில் கொடுமை செய்திருப்பது அமெரிக்காவில் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும்   ‘மனித உரிமை அத்துமீறல்’குற்றம் என்றாகி, அமெரிக்கச் சட்டப்படி, அங்குள்ள போலீசார்  தேவ்யானியை விரட்டிச் சென்று நடு ரோட்டில் நிறுத்திக் கைது செய்து விலங்கு மாட்டியிருக்கிறார்கள்.

இப்படிக் கைது செய்த விஷயமானது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி, இன்றுள்ள மத்திய அரசை ஆளுகின்ற காங்கிரஸ்காரர்களுக்கு முன் எப்போதும் இல்லாத ரோஷத்தையும் போலி வேஷத்தையும் தந்துள்ளது.

இந்தியத் தூதரக அதிகாரியை நடு ரோட்டில் வைத்துக் கைது செய்ததும் கையில் விலங்கிட்டதும் இந்திய இறையாண்மைக்கும் தூதரக விதி முறைகளுக்கும் எதிராக  அமெரிக்க அரசு அவமானம் இழைத்து விட்டதாக  அறிக்கைகள் விட்டு,நமது மத்திய அரசு, இப்போது இந்தியாவில் இருக்கின்ற அனைத்து அமெரிக்கத் தூதரகங்களுக்கும் வழங்கப்பட்டு வந்திருந்த சட்டச் சலுகைகளை ரத்து செய்து இருக்கிறது.

இதன்படி, இந்தியாவில் பணி புரிகின்ற அமெரிக்கர்கள் அனைவரும் தாங்கள் பணியில் அமர்த்தி இருக்கின்ற பணியாளர்களின் விவரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் மற்றும்  இந்தியாவுக்குள் வந்திறங்கும் தூதரக  அமெரிக்கர்கள் இதுவரை எவ்வித சோதனையும் இன்றி வெளிவந்ததற்கு மாறாக இனி, அனைவரும் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் தங்கள் இஷ்டம் போல் சுங்கத் தடையின்றி பொருட்களைக்  கொண்டு வந்து இந்தியாவில்  இறக்குமதி செய்து மகிழ்ந்த உரிமைகள் பறிக்கப்பட்டு,இனி  எந்தப் பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதிரடியான அறிவிப்புக்களை விடுத்துள்ளது.

இதன் மூலம் நமக்கு இதுவரை மறைக்கப்பட்டு வந்த பல விஷயங்களும் அதிர்ச்சிச் சிந்தனைகளும்   அரங்கத்துக்கு வந்துள்ளன.

1. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் காலணி, கோவணம் வரை அமெரிக்க விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்த போது வராத இந்த ரோஷம் இப்போது வந்ததேன்?

2.நேர்மையும் எளிமையும் தூய்மையும் மிக்க மேதகு அப்துல் கலாம் அவர்களைவிட, இந்தியச்  சட்டத்தையும் அமெரிக்கச் சட்டத்தையும் ஏமாற்றி மனித நேயத்துக்கு எதிரான இரக்கமற்ற சிந்தையும் பித்தலாட்டக் குணமும் கொண்ட ஒரு தூதரக அதிகாரியை மேலானவராக மத்திய அரசு கௌரவிக்கின்றதா?

3.இதுவரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கென்று எவ்வித சுங்கச் சோதனை முறையும் செய்யாமல் அவர்களைச் சிவப்புக் கம்பள முறையில் அடிபணிந்து இந்தியாவுக்குள் அனுமதித்து வந்த  அடிமைப் புத்தியை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வந்ததேன்?

4.அதன் மூலம் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு எதிரனான ஆயுதங்கள், ரகசிய டாக்குமெண்ட்கள், பின்னாளில் இந்தியாவை மிரட்டிப் பணிய வைக்கின்ற உயர் தொழி நுட்ப ஆயுதங்கள்,கருவிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து இங்கே பதுக்கி வைக்கவும் தங்களுக்குச்  சாதகமானவர்களோடும்  இந்தியாவுக்குப் பாதகமானவர்களோடும் பகிர்ந்து வைக்கவும் வாய்ப்பில்லை என்பதை மறுக்க முடியுமா?

5.‘ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை அந்நாட்டுக்குள் வசிக்கும் எவரும் பின்பற்றவும் அடிபணியவும் வேண்டும்’ என்றால் அது தேவ்யானிக்கும் பொருந்தும்; அதேபோல் இந்தியாவில்  தூதரகங்களில் பணியாற்றுகிற எந்த அமெரிக்கருக்கும் பொருந்தும். இந்த யாதார்த்த நிலைக்கு முரணாக தூதரக விதிமுறைகளில் இரண்டு நாடுகளுக்கிடையே பரஸ்பரம் சமன்பாடில்லாத சலுகைகளை அமுல்படுத்தி வந்த விதிமுறைகளை இந்தியா எப்படி இதுவரை ஏற்றுக் கொண்டிருந்தது?

இப்படி ஏராளமான கேள்விகள் இப்போது நம் முன் நிற்கின்றன.
 

இந்திய இறையாண்மை என்பது வேண்டியவர்களுக்கு ஒரு சட்டம்; வேண்டாதவர்களுக்கு ஒரு  சட்டம் என்பதாகவோ வேண்டியவர்கள் சட்டத்தை வளைத்து உயர் பதவியில் இருக்கலாம் என்று அனுமதிப்பதாகவோ இருக்க முடியாது.

அது இந்தியாவின் நேர்மையையும் நீதியைப் போற்றும் கூர்மையையும் உலக நாடுகளின் முன் எடுத்துக் காட்டுவதாகத்தான் இருக்க முடியும்.

அவ்வாறில்லாமல்,குடும்ப உறுப்பினர்களைக் கூடச் சொந்தம் கொண்டாட அனுமதி மறுத்து அவர்களைச் சாதாரண பிரஜைகளாய்க் கருதி நடத்திய மேதகு குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைப் பொறுத்துக் கொண்ட மத்திய அரசு,  இப்போது இந்தத் தேவ்யானிக்காக வரிந்து கட்டிக் கொண்டு அமெரிக்காவை வசை பாடுவது, ஏதோ ஒரு அரசியல்   உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது; அதனால்தான்,இந்தத் தேவ்யானிக்கு யாரோ மிகப் பெரும் அரசியல் புள்ளியின் பின்பலம்  இருந்து இவ்வளவு நாள் இல்லாத ரோஷம் தேவ்யானிக்காக, சோனியாவின் சொற்படி ஆடும் மன்மோகன் அரசுக்கு வந்து விட்டதா? என்று இந்தியப் பாமரன் எண்ணும்  அளவுக்கு  நிலைமை மாறி விட்டது, இந்தக் கேடு கெட்ட காங்கிரஸ் ஆட்சியில்?

சினம் கூட்டும் இந்தச் சிந்தனைகளுக்கு நடுவே, இந்தியச் சட்டத்தை ஏமாற்றி  இன்னொரு இந்தியப் பெண்ணைத் தன் வீட்டு அடிமையாக நடத்திய இந்தியத் தூதரகப் பெண் அதிகாரி தேவ்யானியை உடனே சஸ்பெண்ட (பதவி நீக்கம் ) செய்வதுடன், இப்படியொரு குற்றவாளியை அறியச் செய்த அமெரிக்கக் காவல்துறைக்கு இந்தியா நன்றி சொல்ல வேண்டும்’ என்ற எண்ணத்தை இந்தியர்களாகிய நாம் அரசுக்கு முன் வைக்க வேண்டும்.

வெட்கமும் ரோஷமுமாக-
கிருஷ்ணன்பாலா
17.12.2013

Post a Comment