Sunday, December 29, 2013

அரசியல் சதுரங்கம்-7

டில்லி மாநில சட்ட மன்றத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம்  என்பது, இதுவரை மக்களை வெறுப்பும் கோபமும் விரக்தியும் கொள்ள வைத்த காங்கிரஸின் ஊழல் ஆட்சிக்கு எதிரான  வாக்குக்களே அன்றி ‘ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்கக் கிடைத்த வாக்குகள் அல்ல. எனினும் ஜனநாயத்தின் நிர்பந்ததம் அதை ஆட்சிக் கட்டில் ஏற வைத்திருக்கிறது.

அதே சமயம் பாரதீய ஜனதா கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது  அக்கட்சி மீதும்  டில்லி வாக்காளர்கள் முழு நம்பிக்கை கொள்ளவில்லை என்பதன்  எதிரொலி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

’பா.ஜ.க. என்பது புனிமான கட்சி  அல்ல’ என்ற  உண்மையானது, கடந்த காலங்களில் நாட்டில் உணர்த்தப்பட்டுள்ளதுதான்.

ஆனால்,மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும்  தேசநலனையும் முக்கியமாகக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக நிர்வகித்துக் காட்டிய  நரேந்திர மோதியின் திறமையில், தெளிந்த லட்சியத்தில் இந்திய மக்களில் பெரும்பான்மையோர்     ‘அவரே பாரதப் பிரதமராகும் தகுதி படைத்தவர்’ என்று  அணிதிரளத் தொடங்கியிருக்கின்றார்கள்.

எடியூரப்பா  போன்ற இரக்கமற்ற பதவிப் பித்தர்களின்  ஊழல் நடத்தைகளையும் பொறுத்துக் கொண்டு நரேந்திர மோதியின் பின்னால் அணி வகுத்துள்ளார்களென்றால் அது நரேந்திர மோதியின் தனிப்பட்ட  அரசியல் ஒழுக்கமும் அரசியல் வெற்றியைக் கொண்டு பதவி மூலம் துணிவோடு மக்கள் பணி செய்கின்ற பண்பும்தான் காரணம்.

குஜராத் முதல்வராக இருந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய சாதனைகள் நிரூபணமாகி,  நரேந்திர மோதி அவர்களின் தலைமையின்கீழ், இந்தியா ஊழல் அற்ற நிர்வாகத்தையும் இந்தியாவின் கௌரவத்தையும் அதன் இறையாண்மையின் பாதுகாப்பையும்,  தொழில் முன்னேற்றத்தையும் நாடு காணும்’என்ற ஆழமான நம்பிக்கை இன்று மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது.

எனினும் ‘மோதி அலை’ தேசமெங்கும்  வீசிக் கொண்டிருந்த நிலையில் தலை நகர் டில்லியில் மட்டும் சற்று சிவப்புக் கோடு போடப்பட்டிருக்கிறது.

இதுவும்கூட நன்மைக்கே.

இதன் மூலம் இரண்டு உண்மைகளை நாம் உணர வேண்டும்.

ஒன்று:
கவர்ச்சியான வாக்குறுதிகளும்; மாய்மால அறிக்கைகளும்
மேடை வசனங்களுமாக, இதுவரை ‘தேர்தல்  பிரகடனம்’ என்ற பெயரில் உதார் விட்டுக்கொண்டிருந்த  தேசியக் கட்சிகளுக்கும்  மாநிலக் கட்சிகளுக்கும்  படித்தவர்களும்  விஷயம் தெரிந்தவர்களுமாக
அதிகம் வாழும் டில்லி மக்கள் சூட்டுக்கோலை எடுத்து சரியான சூடு போட்டிருக்கிறார்கள்.

பித்தலாட்டமான அரசியலுக்கும் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுக்கும் டில்லி மக்கள்  ஓட்டுப் போடவில்லை;வேட்டுப் போட்டிருக்கின்றார்கள்.


இதன் எதிரொலி, இனி நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்குமென்பதில் ஐயமில்லை.

இரண்டு:
மோதி அலை நாடெங்கும் பேரலையாக வீசிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் போதிய மெஜாரிட்டியை, டில்லியில்  பா.ஜ,க. பெறத்தவறியதால், தனக்குக் கிடைத்திருக்கும் அதிக இடங்களைக் கணக்கில் கொள்ளாது, எதிர்க் கட்சியிலிருக்கும் எம்.எல்.ஏக்களைக் குதிரைப் பேரத்தில் இறங்காது ஜனநாயகத்தின் மேலான கண்ணியத்தைக் காக்கும் விதத்தில்
‘தேவையான மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் தான் ஆட்சி அமைக்க இயலாது’ என  அது அறிவித்திருப்பது.

இதன் மூலம்,நரேந்திர மோதியின் நம்பிக்கைமிக்க நல்லாட்சிக்கு அட்சாரமாக, டில்லியில் குறுக்கு வழியில் சென்று ஆட்சி அமைக்க முன் வராதது  இங்கு கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற  ஜன நாயக உயர்பண்புகளைக் கட்டிக்காத்து நரேந்திர மோதி தலைமையில் அமையப் போகும் நாளைய மத்திய ஆட்சி நீண்ட பாரம்பரியத்தை  கட்டிக்காக்கும் என்பதற்கு உத்தரவாதமாக, கட்டுப்பாடும் ஒழுக்கமும் பண்பட்ட ஜன நாயகப் பெருமையும்  நிறைந்த  நிலைப்பாட்டைக் கையகப்படுத்திக் காட்டும்  துணிவை அது வெளிப்படுத்தியிருக்கிறது.

அரசியல் அதிகாரம், பதவி  மோகம் இந்த இரண்டும்தான் ஊழலின் ஊற்றுக் கண்.

அதிகாரத்துக்காகவும் பதவிக்காகவும்  எந்தப் பித்தலாட்டத்தையும் செய்யத் துணிந்த அரசியல் நாடகங்களைத்தான் இதுவரை நாடு கண்டு வந்தது.

இப்போதுதான் ’முதன் முறையாக,போதிய மெஜாரிட்டி இன்றி,டில்லியில் ஆட்சி அமைக்க நாங்கள் தயாராக இல்லை’ என்ற குரல் இந்தியத் தலை நகரில் ஒலித்திருக்கிறது. அதுவும் பா.ஜ.க.விடமிருந்து.

ஆரோக்கியமான அவசியமான,அதிசயமான மாற்றம்.

இப் பண்பு வளர்ந்தால், அரசியல் கட்சிகளிடம் தொடர்ந்தால் ஊழல் ஒழிப்பின் பாதிக் கட்டத்தை நாடு கடந்து விட்டதாகிவிடும்.

-கிருஷ்ணன்பாலா
29.12.2013
Post a Comment