Thursday, December 19, 2013

ரகசியங்களின் ராஜ்யம்!

தேவ்யானி கோப்ராகடே கைது விவகாரத்தில் வெளியே தெரிந்த விஷயங்களும் விவாதங்களும் மிக மிகச் சொற்பம்.

வெளியே தெரியாத விஷயங்களும் அலசி ஆராயத் தக்க விஷயங்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் இணையதளங்களிலும் மிக அதிகம்; அவை பல்வேறு வகையில் உலா வருகின்றன.

உண்மைகள் உண்மையாகவே  வெளிவருமானால் தேவ்யானியின் பின்புலம்  காங்கிரஸ் பெரும்புள்ளிகளின் கரும்புள்ளியாகவே வெளிப்படும் என்பது மட்டும் உணரப்படுகிறது.

இவரைப் பற்றிய எனது கட்டுரையைப் படித்த வாசகர் ஒருவர் ’தேவ்யானி கைதுக்குக் காரணமான சங்கீதா அமெரிக்க உளவுத்துறையின் கைப்பாவை என்று கருத இடமிருக்கிறது’ என்று கூறி அது பற்றிய Link ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார்.

அப்படியானால் இரண்டு கேள்விகள் நம்முன் எழுகின்றன.:

1. சங்கீதா அமெரிக்க உளவுத்துறையின் கைப்பாவை என்றால் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தச் சென்ற தேவ்யானி கோபரகடே IFS யார்?அவரும் மறைமுகமாக  குருவிபோல் செயல்பட்டிருப்பவர்தானே?

2,சங்கீதாவைத் தங்கள் உளவாளியாகப் பயன் படுத்திய அமெரிக்க அரசு  சங்கீதாவை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்த தேவ்யானியைக் கைது செய்து நிலைமையை மோசம் அடையச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இதற்கிடையில்-
புதிதாகக் தகவல் ஒன்றை எனது நீண்டகால நண்பரும் முது பெரும்பத்திரிகையாளருமான ஒருவர்  என்னிடம்சொன்னார். அது:

கோபர்கடே என்று மகாராஷ்ட்ராவில் சுமார் 25,30  ஆண்டுகளுக்கு முன் குடியரசுக் கட்சியின் எம்.பி யாக இருந்தார். அவர் ஒரு தலித்.

அவரிடம் அளவுக்கு மிஞ்சிய  சொத்துக்கள் சேர்ந்து விட்டன. அவை, பணமாகவும் அசையாச் சொத்துக்களாகவும்  இருந்தன..

தனது மரணத்தின்போது அத்தனை சொத்துக்களையும் கோப்ராகடேயின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கவும்  உயர் பதவிகளை அடையவும் ஒரு Trustஐ ஏற்படுத்தி, அதன் உதவியை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள வகை செய்திருக்கிறார்.

அந்த Trustன்  முழு உதவியால் படித்து ஒரு IFS அதிகாரியாக ஆனவர்தான் தேவ்யானி கோபராகடே, மறைந்த குடியரசுக்கட்சி எம்.பி,கோபர்கடேயின் குடும்ப உறவினர்.

இப்போதுள்ள உள்துறை மத்திய  அமைச்சரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான திரு சுஷில்குமார் ஷிண்டே தலித் என்பதுடன் மறைந்த முன்னாள் முன்னாள் எம்.பி கோபர்கடேயின் நெருங்கிய சகா;முன்னாள்குடியரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்து காங்கிரஸுக்கு வந்தவர்.;வந்தவர் 30 ஆண்டுகளுக்குள் சோனியாவின் முன்னணி மூத்த தலைவராக முன்னேற்றம்கண்டு விட்டவர்.

தேவ்யானியின் தந்தை அண்மையில் ஓய்வு பெற்ற  ஒரு IAS அதிகாரி. மறைந்த குடியரசுக் கட்சி எம்.பி கோபர்கடேயின் உறவினர்.இப்போது,காங்கிரஸ் சார்பில் ராஜ்ய சபா எம்.பி ஆவது என்ற லட்சியத்துடன்  காய்களை நகர்த்தி வருபவர்;
சுஷில்குமார் ஷிண்டேவின் பூரண மதிப்பு பெற்றவர்.

இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர்: இந்திய அரசியல் சட்ட அமைப்புக்  குழுவின் தூண் டாக்டர் அம்பேத்காரின் பெயரனும் அரசியல் காரணங்களுக்காகக் காங்கிரஸின் செல்லப் பிள்ளையுமான  பிரகாஷ் அம்பேத்கார்.

இப்போது சுற்றி வளைத்துக் கணக்குப் போட்டுப் பாருங்கள்:

தேவ்யானி கோபராகடேவுக்காக சகலவிதமான  ஆயுதங்களையும் எடுத்துக் கையாளத் துடிக்கும் காங்கிரசின் உள் நோக்கம் விளங்கும்.

அதுசரி, ரகசியங்களின் ராஜ்யமான பலநூறு கோடி கோபர்கடேயின் Trust இப்போது எவருடைய கைகளுக்குள் இருக்கிறதோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.12.2013

No comments: