Tuesday, November 19, 2013

மோதி ஒருவரே மக்கள் சிந்தனை.(அரசியல் சதுரங்கம்:5 )

காங்கிரசின் கயமை நிறைந்த ஆட்சியால், நேரு, இந்திராகாந்தி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்களின் பெருமைகளும் அவர்களின் புகழும் கூட மக்களிடையே  மதிப்பிழந்து போய் விட்டன.

மாறாக-
தனது 15 ஆண்டுக் கால ஆட்சியில் குரஜாத் மாநிலத்தை நாட்டின் முதன்மையான தொழில் வளம் மிக்க மாநிலமாய்,ஊழல் அற்ற நிர்வாகத்தில் வெற்றி பெற்ற மாநிலமாய், மதக் கலவரங்கள் ஒடுக்கப்பட்ட மாநிலமாய், வழி நடத்தி, இஸ்லாமியர்களும் மதிக்கும் ஆட்சியை நடத்தி துணிவும் நேர்மையும் கொண்ட அரசியல் தலைவர் எனத் தன்னை நிரூபித்துக் கொண்டு, பா.ஜ. க என்ற கட்சிக்கு நற்பெயர் எடுத்துத் தந்துள்ளவர் நரேந்திர மோதி.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘எங்களுக்கு வாக்களிய்ங்கள்’ என்று நேர்மையோடும் நிமிர்ந்த நெஞ்சோடும் எந்தவொரு வேட்பாளரும் காங்கிரஸ் சார்பில் சென்று மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கும் நிலைகூட இல்லாது போகும் அளவுக்கு மக்களிடையே கசப்பும் வெறுப்பும் தலை தூக்கி உள்ளன.

காங்கிரஸுக்கு எந்த ஒரு இடத்திலும் கூட்டணியின் துணை இல்லாமல் தேர்த்தலைச் சந்திக்கும் துணிவு இல்லாது போய் விட்டது.

தமிழ்நாட்டில் அதன் நிலை முற்றிலும் சீர்குலைந்து மக்கள் காறி உமிழும் வகையில் அதன் ஊழலும் திறமையற்ற நிர்வாகச் சீர்கேடும் அரசியல் கொள்கைகளும் ஊர் தோறும் பேசப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் சார்பில் ஊடகங்களில் வாதங்களில் ஈடுபடுவோர்கூட நேரு,இந்திரா காலத்துச் சாதனைகளைச் சொல்லித்தான் பேச முடிகிறதே தவிர சோனியாவின் கட்டுப்பாட்டின் கீழ் நடந்து வரும் மன்மோகன் சிங்கின் சாதனைகள் இதுவெனச் சொல்லும் திறமற்றுப் போய், முகம் வெளிறித்தான் பேச வேண்டி இருக்கிறது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்காற்றி ஈழப் பிரச்சினை குறித்து கவனத்தோடு பேசி இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்து அங்குள்ள தமிழர்களைக் காப்பாற்றும் செயல் திட்டங்களை வகுக்க வேண்டிய இந்தியா, கையாளாகாத நிலையில் கடைசிவரை திக்குமுக்காடிப் போய் சல்மான் குர்ஷீத்தை தனது பிரதிநிதியாக ஒப்புக்கு  அனுப்பி ஊமையாகத் தவிக்கிறது.

என்னதான் காங்கிரஸ் என்ற மண் குதிரையை நம்பி திமு.க.வும் அதன் கூட்டாளி திருமாவும் வரும் தேர்தலில்  ‘தேர்தல் ஆற்றில் இறங்க’ யத்தனித்தாலும் காங்கிரஸைக் கை விட்டு தனித்தே நின்றாலும் மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு அடித்த கொள்ளைகளும் ஈழத் தமிழருக்கு இழைத்த அநீதிகளில் உடன்பட்டுப் போய் அனுபவித்த ஆட்சி சுகங்களையும் யாரும் மறந்துவிட முடியாது.

நாடெங்கும் காங்கிரஸுக்கும் அதன் கூட்டாளிக் கும்பலுக்கும் இதே நிலைதான்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்:

நேர்மையாகத் தேர்தல் நடந்தால் காங்கிரஸ்நூற்றுக்கும் மேலான இடங்களில் டிபாசிட்டைக் கூட இழந்து நிற்கும். ராகுல் காந்தியும் சோனியாவும் கூட தோற்றுத்தான் போவார்கள். சோனியா இந்தத்தேர்தலில் நிற்பாரா என்பதே சந்தேகத்துக்குரியது. அவரது உடல்நிலையும் மன நிலையும் காரணமாக.

பல இடங்களில் தேர்தலில் நிற்க காங்கிரஸுக்கு ஆட்கள் கூட தைரியமாக முன் வர மாட்டார்கள்.

போலி மதச் சார்பின்மை என்ற கொள்கையின் அடிப்படையிலும் பணச் செல்வாக்கிலும் ஆங்காங்கே சிறு சிறுசிறு கட்சித்தலைவர்களைச் சேர்த்துக் கொண்டு  சிலிர்த்தெழுவதுபோல் காட்டிக் கொள்ளலாமே ஒட்டுமொத்தமாக மக்கள் சிந்தையில் இடம் பெறவே முடியாது.

இந்தத் தேர்தலில் கடந்த காலப் போலித்தனமான கோஷங்கள் எடுபடாது.

அதிகாரம், பணபலம்,அக்கிரமச் செயல்கள் மற்றும் தகிடுதத்தவேலைகள் மூலம் ஆட்சிக்கு வர முயன்று, அதற்காக தேர்தலில் மதவெறியை மறைமுக முகமாகத் தூண்டி விட்டு அதில் குளிர்காய முயலும் குள்ள நரித் தந்திரத்தைக் கையாள காங்கிரஸ் சதி செய்யுமானால், பூமராங் போல் அதன் விளைவு காங்கிரஸைத் துண்டு துண்டாக்கி விடும்.

காங்கிரஸுக்கு எதிராக மக்களிடையே வரலாறு காணாத அளவுக்கு பெரும் கோப அலைகளை திரண்டு வரும் நிலையில் அதனோடு கூட்டுச் சேரும் எவரும் தோல்விகளையே சந்தித்துத் துவண்டு போவது நிச்சயமாகி விட்டது.

காங்கிரஸ் முற்றாகச் சிறுத்து, ’காங்கிரஸ்காரன் என்று சொல்வதே கேவலம்’ என்ற நிலைக்குக் கட்சியில்  இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்லவர்களையும் வெட்கித் தலை குனிய வைப்பதற்கான அத்தனை  அயோக்கியத்தனங்களையும் சோனியாவின் தலைமை  செய்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸின் அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் ஒருவேளை நரேந்திர மோடி ஆட்சிக்குத் தலைமை ஏற்க முடியாத நிலை உருவானால், நாட்டில் சரித்திரம் காணாத போராட்டமும் புரட்சி எண்ணங்களும் நாடெங்கும் பரவி பெரும் கேடுகள் உருவாவதற்கு வழி வகுத்து விடும்.

ஏனெனில் -

இந்த தேசத்தைத் தலைமை ஏற்று நடத்த,பெரும்பான்மை நாட்டு மக்கள் நம்புவது நரேந்திர மோடியைத்தானே தவிர, வேறு ஒருவரையும் அல்ல!

புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துச் செல்வது காலத்தின் கட்டாயம்.


-கிருஷ்ணன்பாலா
19.11.2013
Post a Comment