Wednesday, November 20, 2013

இந்தியாவும் கேமரானும்!

றிவார்ந்த நண்பர்களே,

‘இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் எவருமே கலந்து கொள்ளக் கூடாது’ என்ற கோஷம் அறிவிலித்தனமான, இலங்கைத் தமிழரின் உண்மையான நலனுக்கு எதிரான, தமிழக அரசியல் கட்சிகளின் சுயநலமிக்க சூழ்ச்சி’ என எழுதி இருந்தேன்.

(காண்க: ‘காமன்வெல்த்தும் காமன் சென்ஸும்’ எனது வலைப் பதிவு நாள்: 3.11.2013)

இங்கே ஆளாளுக்கு ஈழத் தமிழர்களின்  இதயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதன் காப்பாளர்கள் போல்  காட்டிக் கொள்ளும் குயுக்தி மிக்க இந்தக் கோஷங்களை மாற்றி, அங்குள்ள தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாறு காணாத வன்கொடுமைகளை உலகுக்கு  உரித்துக் காட்டவும் இனிமேல் ஈழத் தமிழர்களின் அமைதிக்கும், அரசியல் தீர்வுக்கும் நல்வாழ்வுக்கும் புலம் பெயர்ந்து உலகம் முழுவதிலும் அகதிகளாக வாழும் அவர்களின் அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் இந்திய அரசை காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய, அனைவரும் ஒருமித்த குரலில் வற்புறுத்த வேண்டும்’ என்பதற்காகவே அவ்வாறு நான் எழுதி இருந்ததை நூற்றுக் கணக்கான நண்பர்கள் படித்தனர்.

ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும் ஒரேகுரலில்   'இந்தியா கலந்து கொள்ளக் கூடாது; அப்படிக் கலந்து கொள்வது அங்குள்ள ஈழத் தமிழர்களை மேலும் தனிமைப் படுத்தி விடும்'  என்ற போலித்தனமான எதிர்ப்புக்களைக் காட்டினர்.

‘இந்தியா காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது, இலங்கைத் தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவதுபோல்’ ஆகி விடும், எனவே  இந்தியா அதைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற  குரலுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் ப.சி., ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட காங்கிரஸாரும் கலைஞர்.திருமா, வைகோ உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும் ஆளும் அ.தி.மு.க அரசும் ‘எப்பொழுதும் ஈழத் தமிழருக்குக் குரல் கொடுக்குப்பது ஒன்றே தமிழ்ப் பற்று’ எனக் கூக்குரல் இடும் அறிவு
 ஜீவிகளுமாக  அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து,  ‘இந்தியா,காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது’ என்பதுதான்  ‘ஈழத் தமிழருக்கு ஆதரவனான நிலை’ என்றும் ’அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடும்’  என்பதுபோலும் ஆளாளுக்குத் தங்கள் ஈழத் தமிழருக்கான ஆதரவை (?)  காட்டிக் கொண்டனர்.

ஆனால் நடந்தது  என்ன?

‘எங்கே போகச் சொல்ல வைத்து,  தன்னை இக்கட்டான நிலைக்குத் தள்ளி விடுவார்களோ?’  என்று குளிருக்குப் பயந்து போய் அடுப்படியில் பதுங்கிக் கொண்டிருந்த பூனைபோல் இருந்த மன்மோகன் சிங்கிற்கு இது மிகவும் வசதியாகப் போய், தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான் போகவில்லை’ என்று அறிவித்து விட்டார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

உடனே கலைஞர் புளகாங்கிதம் கொண்டு  ‘ஆகா, நமது பிரதமர் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எங்கள் நெஞ்சில் பால் வார்த்து விட்டார்; அவருக்கு நன்றி..நன்றி’ எனப் பல்லாண்டு பாடத் தொடங்கி விட்டார்.

அத்தோடு மறவாமல் ஒரு சின்னப் பொடி முனகல்: ‘சல்மான் குர்ஷீத்தையும்  அனுப்பாமல் இருந்திருந்தால் முழுமையான பாராட்டுக்குரியவராகி இருப்பார்’ என்ற இடைச் செருகல் சிணுங்கல்தான் அது.

இத்தோடு ஈழத் தமிழரின் எண்ணமெல்லாம் நிறவேறி விட்டது போல் அவருக்கு ஒரு அரசியல் குஷியும் உண்டாகி விட்டது.

இது, வரும் தேர்தலில் கூட்டணி போட்டு அரசியல் களம் காணும் வஞ்சகத் திட்டமே தவிர ஈழத் தமிழரின் இன்னல்களைக் களையும் எண்ணம் அவருக்குக் கிஞ்சித்தும் கிடையாது.

அடுத்து வரும் தேர்தலுக்கான கொள்கை முழக்கமே இதுதான் பாருங்கள்.

ஆனால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரான், மத்திய அரசையும்,இங்குள்ள  அரசியல் வியாபாரிகளையும் வயிறெரியச் செய்யும் வகையில் ஈழப் பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய நெஞ்சம் பதறும் நிலைகளைக் கண்டு, ‘இலங்கை அரசின் இன அழிப்புப் போர்க் குற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்’என்பதை உலக ஊடகங்களுக்கு முன் நிமிர்ந்து நின்று சொல்லி விட்டார்.


இந்தியா செய்ய வேண்டிய அரசியல் அணுகுமுறையை பிரிட்டன் செய்து விட்டது.

இந்தியாவின் தீர மிக்க ராஜ தந்திரத் திறன் இந்திராகாந்தியோடு போய் கொஞ்ச நஞ்சத்தை வாஜ்பேயி காப்பாற்றிக் கொண்டிருந்தார்.  சோனியாவின் சுயநலச் சுரண்டல் ஆட்சி அதை முற்றிலும் சுத்தமாகக் கவிழ்த்து மூடி விட்டது.

இன்று பிரிட்டீஷ் பிரதமர்  டேவிட் கேமரான் ஈழத் தமிழர்கள் மத்தியில் இமயம்போல் தெரிகிறார்.

இதன் பிறகு, கலைஞர் இப்போது சொல்கிறார்:

‘சல்மான் குர்ஷீத்தைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசி இலங்கை அரசுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்கு பேச வைத்திருக்க வேண்டும்’

கொஞ்சமும் வெட்கமற்ற அரசியல் ஞானத்தைத் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

’முதலில் இந்தியா கலந்து கொள்ளவே கூடாது’ என்றவர்  இப்போது  ’சல்மான் குர்ஷீத்’ உருப்படியாகப் பேசியிருக்க வேண்டும்’ என்கிறார்.

நேற்று ஒன்று சொல்லி விட்டு இன்று அதை மறந்து, புதிய சித்தாந்தம் பேசும் புரட்டுக் குணம் எப்படியோ கலைஞரைக் கடந்த சில ஆண்டுகளாகப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்போது புரிகிறதா? நண்பர்களே,

காமன்வெல்த் மாநாட்டில் இலங்கை சென்று இந்தியா கலந்து கொண்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையான அக்கறையோடு இலங்கைக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க காமன்வெல்த் நாடுகளைத் தூண்ட வேண்டும்’ என்று இங்குள்ள அனைத்துத் தரப்பு ’இலங்கைத் தமிழர்’  உணர்வாளர்களும் போராடியிருக்க வேண்டும் ’ என்று நான் எழுதி இருந்த காரணம்.

ஈழ மக்கள் நூற்றுக்கு நூறு நம்பி இருப்பது இந்தியாவை மட்டுமே; இங்குள்ள அரசியல்வாதிகளை அல்ல.

’தமிழர் இனம் காக்கும் நடவடிக்கைகளை இந்தியாவே எடு’  என்ற  ஈழ மக்களின் எழுச்சி மிகும் உணர்ச்சிக் குரல்களை  இலங்கையே அதிரும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் அங்கே சென்றிருந்தால் கேட்டிருப்பார். கேட்டு விட்டு ஊமையாக அவர் இந்தியா திரும்ப முடியாது.

அவ்வாறு செய்ய இடங் கொடுக்காத தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைவருமே ஈழத் தமிழர்களின் உணர்வுகளோடும் சதையோடும் விளையாடுகிறவர்களே.

இங்குள்ள இளைஞர்களும் ஏமாளிகளும் நமது மாநிலத்தில் உள்ள
போலி அரசியல்வாதிகளின் பின்னே நின்று அவர்களுடைய வெற்றுக் கோஷங்களுக்குப் பின் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்களே அன்றி, தங்கள் ஊர் எல்லை தாண்டி ஈழத்தமிழர்களின்  உண்மையான நலன் எது? என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இல்லை’ என்பதுதான் உண்மை.

‘அரசியல் களத்தில் தமிழ்,தமிழர் இனம்’ என்று பேசவும் வேஷம் போடவும் இலங்கை தமிழர் பிரச்சினை நீடித்திருக்க வேண்டும்’ என்பது ஒன்றுதான் நமது அரசியல்வாதிகளின்  அஜண்டா ;  உருப்படியாகத்  தமிழர் வாழ்வுப் பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறைகளைச் சிந்திக்க முடியாத அரசியல் சுய நலம் இவர்களைப் பீடித்திருக்கிறது.

அதைத் தாண்டி இவர்களுக்கு இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கென்று  வேறு எந்தக் கொள்கையும் இல்லை;இல்லவே இல்லை.


இவண்-
கிருஷ்ணன்பாலா
20.11.2013

Post a Comment