Friday, November 1, 2013

ஒருதாய் மக்கள்!



ஒருதாய் மக்கள்
________________

ஓடும் நதிகள் பல பெயரில்,
உள்ளன எனினும் அவை இருக்கும்
நாடு என்பது ஒன்றே தான்:
நாமிதை அறிவோம்; அது போல,

பேசும் மொழியும் பல நூறு
பேணும் இனமும் இருந் தாலும்
தேசம் ஒன்றே;என்ப தனைத்
தெளிந்தோம் அதுநம் தாய் நாடே!

காடும் மலையும் கடல் சூழ்ந்து
காணும் இந்தப்  பாரதத் தில்
வீடும் சுகமும் மனை யறமும்
வேண்டும் மக்கள் ஒன்றே தான்!

மதங்கள் பலப்பல  என் றிருந்து
மக்கள் இறைவனை அறி கின்ற
விதங்கள் வேறு என்றா லும்
வீழ்வதும் வாழ்வதும் இம் மண்ணே!

பசுமை கனிந்த மலர்ச் சோலை
பறவைகள் ஒன்றாய் அதில் புகுந்து
வசிப்ப தைப்போல நாமெல் லாம்
வாழும் சோலை தாய் நாடே!

பிறந்த நாடே தாய் நாடாய்:
பேசும் மொழியே தாய் மொழியாய்;
சிறந்து வாழும் மனித ரெல்லாம்
சேர்ந்து வாழ்வதும் ஒரு நாடே!

இமயம் முதலாய்க் குமரி வரை
இங்கும் அங்கும் நடந் திடுவோம்;
சமயம் எதுதான் என்றா லும்
சமத்துவம் அதற்கே இடந் தருவோம்!

மதத்தைப் படைத் தவன் மனிதடா:
மக்களைப் பிரித் ததும் அவன்தானே?
மதத்தை இறைவன் படைத் திருந்தால்
மக்களுக் கெதற்குப் பல மதங்கள்?

இறைவன் ஒருவன் என்றி ருந்தால்;
எல்லாம் அவனே எனச் சொன்னால்
மறைவே தங்கள் பலப் பலவாய
மண்ணில் இருப்பது எதற் காக?

மனிதர் தங்கள் அறி வாலே
மனதில் தோன்றும் உணர் வாலே
மனிதரை மனிதர் வன்முறை யால்
மாய்க்கும் விலங்குகள் ஆனது ஏன்?

அறிவும் அன்பும் இன்ன தென
அறியா மாக்கள் விலங்குகள் தான்;
பொறுமையும் சகிப்பும் இல் லாது,
பூமியைக் கெடுப்பது அவ்வினம் தான்!

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல்
உறவுடன் நாட்டில் வாழ்வ தல்லால்;
பெரிதாய் வாழ்க் கைவே றுண்டோ?
பேதைகள் தானிதை அறி யாரே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
31.10.2013

No comments: