Saturday, November 30, 2013

தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் -2

மிழக் கடல் நெல்லைக் கண்ணன் அய்யா அவர்களை நீண்ட காலமாக அவரது சொற்பொழிவுகள் மூலம் அறிந்திருந்தவன் என்ற போதிலும் 14.& 2010 வரை அவரை நேரில் சந்தித்தது இல்லை. சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது.

2010 நெல்லையில் உள்ள SCAD நிறுவனத்தின் சார்பில்  Director -Public Relations என்ற பொறுப்பில் இருந்தேன். அவ்வமயம் நெல்லை வண்ணாரப் பேட்டையில் உள்ள ’Francis Xavier பொறியியற் கல்லூரி மாணவர் தன்னம்பிக்கையூட்டு விழா’வுக்காகச்  சொற்பொழிவு நிகழ்த்த அய்யா’ தமிழ்க் கடல்’ அவர்களை அழைத்திருந்தோம்.

அய்யா அவர்களும் வந்தார்.

கல்லூரிவிழா அரங்கத்தில் அவரை முதன் முதலாக வரவேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அன்று,விழா மேடையில் நான் அவருக்காக வரவேற்புக் கவிதை மடல் ஒன்று வாசித்தளித்தேன். (அது பற்றிய  விவரம் இதே வலையில்  தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் -1’ என்ற பதிவில் அறியலாம். பதிவு தேதி:14.10.2013)

அதன் பிறகு அன்று இரவே அவருக்கு ஒரு மின்னஞ்சலைக் கவிதை வடிவில் எழுதி அனுப்பி அனுப்பினேன். அம்மடலில் நட்பையும் அதன் மான்பும் குன்றாதிருக்க  நாடும்  மனதைக் காட்டி இருந்தேன்.

அது இன்றுவரை நீள்கிறது;தொடர்கிறது....

இனி,  அம்மடலின் கவிதை வரிகளை நீங்கள் கண்டு இன்புறலாம்,இங்கே:


குருவருள் நம்மைக் கூட்டுவிக்க!
---------------------------------------------------

அன்பிற் சிறந்தோய்; வணக்கம்;இதுஉன்
அகத்துள் நுழைதற்குரிய கடிதம்;
தன்னல மின்றிப்  பொதுநலம் நாடும்
தமிழ்க்கடல்உன்னை வாழ்த்தும் இதயம்!

'என்றுனைக் காணும் வாய்ப்புக் கிட்டும்?'
என்றிருந்தேன்; நீ எளிதாய்த் தோன்றிக்
'குன்றென' நின்றாய்;மலைத்துப் போனேன்;
நன்றியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை!

வாழ்வில் பற்பல சொற்பொழிவாளர்கள்;
'வந்தனர்;போயினர்' எனும்படி அவர்கள்,
சூழ்நிலை கண்டு,சொல் விளையாடி
சுய நலம் தேடிப் பிழைத்தவர் ஆயினர்!

'நீர்மேல் எழுதிய எழுத்துக்கள்' போல
நீர்த்துப் போன அவர்களின் நடுவே;
நீர் 'கல்எழுத் தாய்'த் தோன்றி;இந்த
நெஞ்சக் கல்லையும் நெகிழச் செய்தீர்!

கண்ணீர் மல்கிக் கசிந்துளம் உருகி;
கண்ணன் தமிழில் எதையும் துறப்பர்;
மண்ணில் உன் உரை கேட்பவர் பெருகி,
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் தம்நிலை மறப்பர்!

பேசிடும் ஒவ்வொரு வார்த்தையும் வாய்மை;
பிழையறச் சொல்லி நிமிர்த்திடும் தூய்மை;
ஏசிடும்போதும் எதிர்ப்படும் நேர்மை;
இருப்பது கண்டேன், உன்னிடம் மட்டும்!

உன்னைத் தவிர மக்கள் சபைமுன்
உண்மையைச் சொல்லி நிமிர்பவர் இல்லை;
உன்னைப் போன்று சொல்லும் செயலும்
ஒன்றாய்க் காட்டித் துணிபவர் இல்லை!

மக்களை யெல்லாம் 'மாக்கள்' ஆக்கி
மழுங்கத் தனமாய் 'மாண்புகள்' ஆன
வெட்கங் கெட்ட வீணர்கள் தம்மை
வெட்கப் படும்படிச் செய்பவன் நீதான்!

அகமே முகமாய்,அருட் பெருந் திருவாய்
அய்யா,உன்னை அடியேன் கண்டேன்!
'முகத் துதி' என இதை நகைத்து விடாதீர்;
மூத்தோர் சபையிலும் இதையே சொல்வேன்!

இந்நாள் எனக்கு நன்னாள்;உன்னை
எதிர்கொண்டழைத்த பொன்னாள்;
குன்றாதிந்தத் தகு நாள் நிலைக்கக்
குருவருள் நம்மைக் கூட்டுவிக்க!

தங்கள்,
கிருஷ்ணன் பாலா
14.07.2010 


No comments: