Thursday, November 28, 2013

தர்மம் தலைசாயுமா?



றிவார்ந்த நண்பர்களே,இந்து தர்மத்தின் ஏந்தல்களே,

வணக்கம்.

ஸ்ரீ ஜெயேந்திரர் எத்தனையோ புரட்சீகர மாறுதல்களைக் காஞ்சி மடத்தில் கொண்டு வந்தவர்தான்.

‘அந்தணர்களை விட அந்தணர் அல்லாதோர் ஆதரவின்றி காஞ்சி மடத்தின் புகழை, அதன் ஆளுமையை பரப்ப முடியாது’ என்பதை அடிப்படையில் புரிந்து கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களின் அனுசரணையைப் பெறுவதற்கான  காய்களை நகர்த்தினார்.

அதன் நோக்கில்,  சிந்தித்ததில், செயல்பட்டதில்  ‘இன்னும் வேகம் வேண்டும்’ என்று நினைத்தாரே தவிர அதில் விவேகம் வேண்டும் என்று நினைத்தாரில்லை.

அதன் விளைவாக, ஒரு துறவிக்கு உரிய லட்சணங்கள் அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி, தேர்ந்தெடுத்த அரசியல்வாதியின் எண்ணங்களே  அவரை ஆட் கொண்டு, அவரையே அவை அதிகாரம் செய்யத் தொடங்கின.

விளைவு:
தூய்மையும் வாய்மையும் மிக்க காஞ்சி மடத்தின் மாண்புகளைக் கறைபடியச் செய்து விட்டன.

‘எவையெல்லாம் தனது தவறுகள்;எவை எல்லாம் துறவி என்ற நிலையில் தான் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது? என்பதை அவர் சிந்திக்கவில்லை.

மடத்தைத் தரிசிக்கவரும் வருகையாளர்களாக, இந்தத் தேசத்தின் உயர் அதிகார வர்க்கமே இருந்ததாலும் அவர்களுக்கென்று தனி மரியாதையும் தனி ஆசீர்வாதங்களும் தரப்படும் அவலம்  ‘மட அதிபரிடம்’ அவதானித்துக் கொண்டதாலும், அவரை ஒரு சாதாரண அரசியல்வாதியின் அகந்தையைவிட அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின்  அவஸ்தையைத்தான் அவரோகணம் செய்து கொண்டது.

‘அன்று அவரை வசீகரித்த அதிகார வர்க்கத்தினர் எவரும் இப்போதெல்லாம் தலை நிமிர்ந்து கொண்டு அவரைத் தேடி வந்து காட்சி கொடுப்பதில்லை’ என்பதிலிருந்தே காஞ்சி மடத்தின்  பெருமையைச் சீர் குலைத்து விட்ட தனது செயல்களை அவர் சிந்திக்க வேண்டும்.

அவருக்காக வக்காலத்து வாங்குவோர் இன்று ஈனஸ்தாயியில்தான் குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது. அதுவும் சந்தேகத்தின் பலனை அவருக்கு வழங்க வேண்டும் என்று தலை குனிந்து கொண்டுதான் கோரிக்கை விட முடிகிறது.

அன்று,வந்தாருக்கெல்லாம் ஆசிகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தவர்  இன்று,வக்கீல்களையும்  ‘வாழ்க’ கோஷமிடுவோரையும் வளைந்து  கட்டிக் கொண்டு வரம் கேட்க வேண்டிய நிலை தோன்றி விட்டது.

அஞ்ச வேண்டிய சூழ்நிலைகளுக்கு அஞ்சாமல் இருந்த காரணத்தால் அஞ்சக் கூடாத சூழ்நிலைகளில் அஞ்சி வாழும் அவல நிலைக்கு ஆளாகி விட்டார்.


‘அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ என்ற வள்ளுவப் பெருமானின்   ‘குரலை’ அவர் கேட்கத் தவறியதன் விளைவு இது.


மனசாட்சியும் சத்திய உணர்வும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு கொஞ்சமேனும் இருப்பது உண்மையானால், அவரும் அவருடைய இளைய மடாதிபதியும் காஞ்சி மடத்தை விட்டும் அதன் பொறுப்புகளிலிருந்தும் விலகி முற்றாகத் துறவு கொள்ள வேண்டும்; அதன் மூலம் அவர் மக்களின் நம்பிக்கையைப் பெற்று  வாழ்ந்த மாபெரும் துறவி’ என்று சரித்திரம் பேசத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்’

இதுவே, இந்து தர்மத்தைப் பேணுவோரின் இதயக் குரலாக இருக்க முடியும்

இதை விட்டு, ஸ்ரீ ஜெயேந்திரர் அப்பழுக்கற்றவர்; அவர்மீது அநியாயமாகப்
பழி சுமத்தப்பட்டு விட்டது; இப்போது நீதி வென்று விட்டது’ என்றெல்லாம் கூடி, அநீதிக்காகவும் அறியாமைக்காகவும் வக்காலத்து வாங்குவது
ஸ்ரீ ஜெயேந்திரரை மேலும் கறை படிய வைக்குமே தவிர,கரை ஏற்றாது.


தர்மம் தலை காக்குமே தவிர, அது எதன் பொருட்டும் தலை சாயாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
28.11.2013