Friday, November 1, 2013

அன்னையை இழந்தோம்!



வையமே வெடித்து,மேலே
வானத்தில் சிதற,மழையைப்
பெய்யவே இருந்த மேகம்
பெருந்துயர் நீரைச் சிந்த
'அய்யகோ’ என்றே இந்த
அகிலமே அலற; நாங்கள்
செய்வதொன் றறியாச் சேதி;
சேர்ந்ததே என்ன சொல்ல?

அலைஎனும் புகழ்கொண் டாலும்
ஆர்ப்பரிக்  காத வாழ்க்கை;
மலை யெனும் துயர்வந் தாலும்
மருண் டிடாவீர நெஞ்சம்;
தலைமைக்கே பிறந்து வந்து
தாயகம் காத்த சக்தி;
சிலையென வீழ்ந்து,இன்று
சிவந்ததே,  இந்தத் தேசம்!

‘இந்தியா’ என்ற போது,
‘இந்திரா’ நினைவு தோன்றும்;
‘இந்திரா’ என்ற போது,
இந்தியா வந்து தோன்றும்;
மந்திரச் சொல்லாய் மக்கள்
மனதிலே வாழ்ந்திருந் தாளை...
அந்தோ,நாம்  அரற்றுகின்றோம்;
அதர்மத்தா லிழந்து விட்டோம்!

போருக்கு எதிராய் வெகுண்டு
போரினைச் செய்தாள்;அக்கப்
போருக்கு உரிய பகையை
புறம் ஓட வைத்தாள்;வங்கப்
போருக்குத் துணிந்து நாட்டை
பூத்திடச்  செய்தவி வேகம்
யாருக்கு இனிமேல் உண்டு?
எங்களுக் கினியார் தலைமை?

மன்னர்மா நியத்தை ஒழித்து
மாற்றிய தீரம்;வங்கி
உன்னதப் பொதுமை யாக
உயர்த்திய வேகம்; போரில்
மின்னலாய் எழுந்து வென்று
மீட்டிய வீரம்; நாட்டில்
இன்னொரு தலைவர்க் கில்லை;
இந்திரா பெற்ற பேறு!

எந்திரத் தொழில் நுட்பங்கள்;
இனியவள் பேரைச் சொல்லும்;
இந்திய ஒருமைப் பாடு
இந்திரா உருவம் தீட்டும்;
சந்தனம் எரித்த எங்கள்
சத்தியத் தாயின் புகழை
சந்திரன் உள்ள மட்டும்
சரித்திரம் பேசும்;பேசும்!

விழிகளின் நீரை மாற்றி
வீறு கொண் டெழுவோம்;
மொழிகளின் ,இன பேதத்தின்
முடிவுரை செய்வோம்;வாழும்
வழிகளில் ஒருமைப் பாட்டின்
வலிமையைத் தொழுவோம்;அன்னை
மொழிந்த நல் தேசப் பற்றில்
முனைவதே வாழ்க்கை என்போம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
31.10.1984


குறிப்பு:

1984 அக்டோபர் 31 அன்று அன்னை இந்திராவை அவரது மெய்க்காவலனே சுட்டுக் கொன்ற நிகழ்வு இந்தியாவையே உலுக்கியது; என் மனத்தையும் உலுக்கியது. அன்று அன்னை இந்திராவின்மீது நான் கொண்டிருந்த நேசமும் பற்றும் இந்த அஞ்சலிக் கவிதையை எழுதச் செய்தது.

அந்த வாரம்ஆனந்த விகடனிலும் இதன் ஒரு பகுதி பிரசுரம் பெற்றிருந்தது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அஞ்சலிக் கவிதை நன்று... ஆனந்த விகடனில் வந்தமைக்கும் வாழ்த்துக்கள்...

அர்த்தமுள்ள இனியமனம் said...

30 ஆண்டுகள் தாயில்லாத மகள் போல் தலைமையில்லாத கப்பல் போல் ஆடுது தேசம்..நீங்கள் நமோவை விரும்பும் காரணமும் புரிகிறது..நன்றி அய்யா..