Wednesday, November 27, 2013

சத் சங்கம் என்பது... (தேடல்:4)



ர்மம் கால் பங்கு;அதர்மம் முக்கால் பங்கு ஆனதே கலியுகத்தின் லட்சணம் எனப் பவிஷ்ய புராணம் கூறுகிறது.

நாம் இதில்தான் வந்து வந்து மறைந்து போகிறவர்கள்.

இன்னும் சொல்லப்போனால் உண்மையான விலங்குகள் பறவை இனங்கள் இவை எல்லாம் தாங்கள் சார்ந்த பிறப்பின் அடிப்படையின் தர்மத்தில் வாழ்கின்றவை. அவை ஒன்றை ஒன்று கொன்று,தின்று வாழவும் கூடிப் பறந்து திரிந்து வாழவும் யாருடைய வழிகாட்டுதலுமின்றி தங்களுக்கு உரிய தர்மத்தின்படியே வாழ்ந்து மடியவும் பிறப்பெடுத்துள்ளன.

 அவற்றின் வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்று வேறு எதுவும் அல்லது வேறு யாரும் அவற்றுக்குக் கற்றுத் தருவதுமில்லை;கற்றுத்தரவும்  முடியாது.

எனவே, ’மனிதரைத் தவிர பிற உயிரினங்கள் தமது செயல்கள் மூலம் அவை ஜீவிக்கின்றன’ என்பது மட்டுமே உண்மை. அதனால் அவற்றின் நோக்கம் பாவம் செய்வதுமில்லை;புண்ணியம் தேடுவதுமில்லை.
ஆனால்,மனிதன் அப்படியா?

இந்த மண்ணில் நிறைகின்ற பாவங்கள் அத்தனைக்கும் மனிதனே காரணமாகின்றான்.

தர்மத்தின் சார்பாக என்று யாரும் தனித்துப் பிறந்து வாழ்வதில்லை; எல்லோருக்குள்ளும் அதர்மம் அதிகரித்துத் தர்மம் குன்றிப்போய் இருக்கிறது என்பதை அவரவர்கள் செயல் மூலம், சிந்தனைகள் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும்?

தர்மச் சிந்தனைகள் தாழ்ந்து போய் அதர்மமே மிஞ்சி நிற்கும் இன்றைய உலகில் தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வி இருப்பது மனச்சாட்சியும் மாசில்லாத வாழ்வில் அக்கறையும் கொண்டவர்கள் உணர்வர்.
ஆக,இன்றைய உலகியல் நடைமுறையில் மனிதன் என்பவன் கால் பங்கு தர்மத்தையும் முக்கால் பங்கு அதர்மத்தையும் தனது உடலில் சதையும் எலும்புகளும் உணர்வுமாகக் கொண்டிருக்கின்றான் என்பதுதான் உண்மையிலும் உண்மை.

விருப்பு வெறுப்பு இன்றி சுயநலம், ரத்தப்பாசம்இவற்றைக் கடந்து சிந்திக்கின்றவனுக்கு மனிதர்களின் செயல்பாடுகளில் இருக்கும் தர்மம்,நியாயம், இறைச் சிந்தனை இவற்றின் மெய்ப்பொருள இன்னதென விளங்கும்.

இதில் எள்ளளவு பிசகினாலும் அவனுக்கு உண்மையெல்லாம் பொய்யாகவும் பொய்மை எல்லாம் பொருளாகவும் அதாவது அர்த்தம் உள்ளதாகவும்தான் தோன்றும்.

இதை ஆழ்ந்து சிந்திக்கின்றவர்களுக்கு அறப் போதனையோ, வழிகாட்டுதல்களோ விளக்கமோ எதுவும் தேவை இல்லை.
இரை கிடைக்கும் இடங்களைத் தேடிச் செல்லும் பறவைகள் போல் ’சத்சங்கம்’ தேடி, அத்தகையவர்கள், தங்கள் ஞானப் பசிக்கு உணவுதேடிக் கொள்கிறார்கள். ’சத் சங்கம்’ என்பது சத்தியமும் தூய்மையும் உறவு கொண்டு கூடிக் கலந்திருக்கின்ற இடம்.

அதைத் தேடுவது ஒன்றுதான் தேடல்களிலேயே தலையாய தேடல்.
அதை யாரும் திணிக்கக் கூடாது; அவரவர்களாகவே,அதாவது மனிதர்கள் மட்டுமே தெளிந்து கொள்ளக்கூடிய தீனி.

’நல்லார் இணக்கமும், நின் பூசை நேசமும் ஞானமும் அல்லாது வேறு நிலை உளதோ?’ என்று பட்டினத்தார் பாடுவது இதைத்தான் நண்பர்களே!

-கிருஷ்ணன்பாலா

No comments: