Saturday, November 2, 2013

பண்டித நேரு அறிவு ஜீவியா?

றிவார்ந்த நண்பர்களே,

என்னுடைய ‘அரசியல் சதுரங்கம்-4 ஆவது பகுதியைப் படித்த அமெரிக்க வாசக நண்பர் ஒருவர் கேட்டார்:

”பண்டித நேருவை ஒரு 'அறிவுஜீவி' என்று நீங்கள் குறிப்பிட்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கட்டாயம் இதற்கு விளக்கம் தேவைப்படுகிறது”

என்னுடைய கருத்து இதுதான்:

பண்டித நேரு, தான் பிறந்த குலத்தால் மட்டுமல்ல; படிப்பினாலும் நன்கு பாண்டித்யம் (புலமை) பெற்றவர்தான்.

சிறையில் இருந்தவாறே,தன் மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்கள் (Discovery of India)  அவருடைய செறிவு மிக்கக் கூர்த்த மதியை குவலயத்துக்குக் கூறும்.

அவருடைய தந்தைக்கு இருந்த செல்வமும் சொத்துக்களும் அப்போதைய சுதந்திரப் போராட்டத் தலைவர்களை எல்லாம் உபசரிக்கவும் ஊக்கப்படுத்தவும் பயன் பட்டது. இந்திய தேசிய சுதந்திரப் போராட்டங்களின் அறிவிக்கப்படாத புரவலராக, மோதிலால் நேரு மிகுந்த அக்கறையோடு செயல்பட்டார்; தனது செல்வத்தை அதற்கென்றே செலவும் இட்டார்.

அதன் மூலம் மோதிலால் நேரு  காந்தி அடிகள் முதல் கடைசித் தொண்டன் வரை அனைவராலும் மதிக்கத் தக்கவராக உயர்ந்திருந்தார்..

இந்தப் பொன்னான வாய்ப்பு, இங்கிலாந்தில் மன்னர் பரம்பரையினரை விடவும்  அதிக சொகுசோடு பயின்று பட்டம் பெற்றுத் திரும்பியிருந்த தன் புதல்வர்  பண்டிட் நேருவை,  இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் அண்ணல் காந்தி அடிகளின் தலைமையின் கீழ் இணைத்து,  இந்திய அளவில் அண்ணல் காந்தியின் நிழலில் ஆரோக்கியமான தலைவர்களில் ஒருவராய் வளர்க்க மோதிலால் நேருவுக்குப் பயன்பட்டது..

நேருவின் வாதத் திறமையும் பேச்சும்  அவர் கற்ற கல்வியால் செழித்திருந்தது;   அவருடைய  அரசியல் செல்வாக்கோ, தந்தை மோதிலால் செல்வத்தால் சிறந்திருந்தது.

தேசத்தின் தலை எழுத்தை விதி  இவ்வாறுதான் வரைந்திருந்தது.

தன் செல்வமகன் ஜவஹர்லால் நேருவை உலகில் உள்ள மன்னர் பரம்பரையினரின் வாரிசுகளை விடவும் சொகுசாக வளர்த்துப் படிக்க வைத்து மிகப் பெரிய பதவியில் அமர்த்த வேண்டும்’ என்பதை மோதிலால் கனவு கண்டார். அதற்கென்றே திட்டமிட்டுக் காய்களை நகர்த்தினார்.

அதற்கேற்பவே, உலக நாடுகளின் தலைவர்களின் பிள்ளைகள் பலரும்  படித்து வந்த உலகப்பிரசித்தி பெற்ற இங்கிலாந்து நாட்டின் HARVARD UNIVERSITY தன் மகன் ஜவஹர்லால் நேருவைச் சேர்த்துப் படிக்க வைத்தார்.

நேரு அங்கு பயின்றபோதுதான் உலகத்தில்  பல்வேறு நாட்டுத் தலைவர்களின் வாரிசுகளுடன் பழகவும் நட்புக் கொள்ளவுமான இயற்கையான வாய்ப்பைப் பெற்றார்.

இதுதான் பண்டித நேருவை  உலக அரசியல்  பார்வையாளராக மாற்றவும் உயர் தலைமைச் சிந்தனையாளராக  உருவாக்கிக் கொள்ளவும் அடித்தளம் இட்டது.

இந்திய விடுதலையின் போது உலக அரங்கில் முக்கிய நாடுகளின் ஆட்சித் தலைவர்களாக, தன்னுடன் பயின்ற நண்பர்கள் பலரும்  இருந்ததும்
அவர்களின் பின்புல ஆதரவு நேருவைப் பாரதப் பிரதமராக்கப் பிரிட்டீஷ் பேரரசைத் தூண்டியதும் ’நேருவே பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும்’என்ற மவுண்ட் பேட்டன் பிரபுவின் திடமான வற்புறுத்தலும்  நேருவுக்குக் கிடைத்திருந்த பேரதிர்ஷ்டம்.

அப்போது இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் நேருவை விடவும்  அதிகம் தியாகம் செய்த தலைவர்கள் இருந்த போதும் அவர்களுக்குக் கிட்டாத ’பிரதமர் பதவி’ பண்டித நேருவுக்கு கிடைத்தது என்றால் அவர்கள் எல்லோருமே சுதேசிகள் என்பதுடன், ஜவஹர்லால் நேரு, சர்வதேச அரசியல் தெளிவாளராகவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் அறிமுகம் ஆன நண்பராகவும்  இருந்ததும்தான்.

‘இப்படியொரு வாய்ப்பு தனது மகனுக்கு அமையவேண்டும்’ என்பதை நன்கு திட்டமிட்டேதான் பண்டித நேருவை அவர் தந்தை படிக்க வைத்தார்; பின்பு அவரை காந்தி அடிகளின் அங்கீகாரத்தோடு சுதந்திரப் போராட்டக் களத்தில் இணைத்தார்.

பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு, இன்று காங்கிரஸ்காரர்கள்  அலறும் RSS (Rashtriya Swayam  Sevak Sangh) ல் மிகுந்த ஈடுபாடு இருந்திருந்தது.
அதற்கும் காரணம் மோதிலால்
நேருதான். இந்திய சுதந்திரப் போராட்டக் கட்டம்  முக்கிய நிலையை எட்டிய போது,பண்டித நேரு RSSலும் முக்கிய உறுப்பினராக இருந்தார். இந்தியா விடுதலை பெறும் சூழ்நிலைகள் உருவானபோது, ஆர்.எஸ். எஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள வேண்டும்’ என்ற கருத்தை நேரு வெளியிட்டார். ஆனால் RSSன் உயர்பீடம் அதை ஏற்கவில்லை. ஏற்றிருந்தால் நேரு RSSன் சார்பில் இந்தியாவின் உயர் பதவியைப் பெற்று விடலாம் என்று திட்டமிட்டிருந்தார்.

RSSன் கொள்கை இந்திய தேசத்துக்குத் தொண்டு செய்வது’ ஒன்றேதான் அதற்கென்று ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவதில்லை’ என்பதுதான். அதனால்தான் ‘ஸ்வயம்  சேவக்’ என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆக, மோதிலால் நேருவுக்குத் ’தன் மகன் எப்படியும் இந்தியாவின் பிரதமராக வேண்டும்’ என்பதற்காக இந்திய தேசியக் காங்கிரஸிலும் அதற்கு  எதிர்த் திசையில் இருந்த RSS இரண்டிலும் செல்வாக்குப்பெற்ற முக்கியப் பிரமுகராக இருக்கும்படியே நேருவை உருவாக்கி இருந்தார்.இன்னொரு பரிமாணத்தில் ஜவஹர்லால் நேருவைப் பிரிட்டிஷ் குடிமகனாக்கி அங்கு ‘Lords Houseல்  இடம் பெறச் செய்து விடவேண்டும்’ என்ற எண்ணமும் இருந்தது

இந்தியா விடுதலை பெறும் தருணத்தில் RSS எவ்விதத்திலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், தந்தை மோதிலால் நேருவின் செல்வாக்கு ஜவஹர்லால் நேருவைத் தேசியக் காங்கிரசின் உயர் இடத்தில்
வைத்தது.

‘நேருதான் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும்’ என்பது இந்தியர்களால் நிர்ணயிக்கப்படவில்லை;  அது பிரிட்டீஷ் அரசால்  தீர்மானிக்கப் பட்டது என்பதுதான் வரலாற்று  ரகசியம்’ இதைச் சொன்னால், இங்குள்ள காங்கிரஸ் தேசியப் பற்றாளர்களில் சிலர் சீறுவார்கள்;பலர் பதறுவார்கள்.

அப்படி அவர்கள் சீறுவதையும் பதறுவதையும் வரவேற்கின்றேன்.

சரித்திரத்தின் புரட்டுக்களைப் புரட்டிப் போடவும் எனக்குத் தெரியும்.

பண்டித நேரு இந்தியாவின் பிரதமராகப் பதவிக்கு வந்ததில் திட்டமிட்ட அறிவு ஜீவித்தனம்  இருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் ’யார் பிரதமர்?’ என்ற கருத்து பெரிய அளவில் விவாதம் ஆகும் நிலையில்,  பண்டித நேருவுக்கும் சர்தார் வல்லபாய் படேலுக்கும் போட்டி இருந்தது.

பிரிட்டிஷார் ஆதரவினாலும் சர்வதேசத் தலைவர்களின்  ஆதரவாலும் பிரிட்டீஷாரின் நிர்ப்பந்தத்தாலும்  பண்டிட் நேருவின்  செல்வாக்கே வெற்றி பெற்றது.

உண்மையான சுதேசிக் கொள்கையும் தேசத்தைப் பெற்ற தாயினும் பெரிதாய்ப் போற்றும் பண்பும் கொண்ட  லோகமான்ய திலகரின் வழி நின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அப்போதைய அரசியல் நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு, இந்தியாவின் துணைப்பிரதமராகவும்  உள்துறை அமைச்சராகவும்  இருக்க ஒப்புக் கொண்டார்’ எனதுதான் சரித்திரம்.

ஆனால் நேரு இந்தியாவின் உண்மையான எழுச்சிக்கும் வீரத்துக்கும் வித்திடவில்லை. வாழும்வரை ஒரு பூர்ஷ்வாப் பிரதமராகவே வாழ்ந்து,தனது பரம்பரைப் புகழை மட்டுமே கருத்திற் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்தியாவின் பரம்பரைப் பெருமையை ஒருபோதும்  அவர் தூக்கி நிறுத்தவில்லை.

தன் பரம்பரையின் கீழ் இந்திய ஜனநாயகத்தை அடிமைப்பட்டுக் கிடக்கச் செய்த அந்த அறிவுஜீவியை,பண்டித நேருவை ‘அற்ப மனிதர்’ என நாம் ஒதுக்கி விட முடியாதுதான்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.11.2013.. 

No comments: