Monday, November 18, 2013

தேடல்:3 -சிருஷ்டி

றிவார்ந்த நண்பர்களே,

‘உலக வாழ்வில் ஒவ்வொருவரும் தம் ஊழ்வினையால் இன்ப,துன்பங்களை அனுபவிக்கிறார்கள்’ என்று நாம் சித்தாந்தம் பேசுவதுண்டு.

அந்த ஊழ்வினைக்கு நாம் எப்படிக் காரணமாக இருக்க முடியும்? என்கிற சிந்தனையை முன் வைத்தால் அது ஒரு நாத்திக வாதம்போல் தோன்றும்.

எது? ஏன்? எதற்கு? எப்படி? என்ற சிந்தனை நாத்திகம் பேசுபவர்களை விட ஆன்மத் தேடல் உள்ளவர்களுக்கு அதிக ஞானத்தை ஊட்டவல்லது.

இறைவனுக்கு எதிரான சக்தி என்று ‘சைத்தானை முன் நிறுத்தி பேசுகின்ற மதங்களைப் பின் பற்றுவோர் உலகில் அதிகம்.

சிறு பிள்ளைக்குச் சோறு ஊட்டுவதற்காக இல்லாத பூதம்,பேய், பிசாசுகளை எல்லாம் சொல்லிப் பயமுறுத்திக் காரியம் சாதிக்கும் ஒரு தாயின் மனநிலையை ஒத்தவர்களின் கூற்றுத்தான் அதுவே ஒழிய, சைத்தான் என்ற சக்தி இறைவனுக்கு எதிரானது; அது மனிதர்களை ஆளுமை கொள்கிறது என்ற அளவில் சிந்திப்பது அறியாமைதான்.

உண்மையில் சைத்தான் என்ற தத்துவத்தை நமது புராணங்களும் இதிகாசங்களும் அசுரர்’என்று காட்டி அவர்களின் ஆளுமையையும் இறைவனுக்கு எதிரான  அதிகார வேட்கையையும்  நுட்பமாக நமக்கு உணர்த்தி உள்ளன.

ஆம் சைத்தான் என்பது அசுரக் குணங்களின் ஆதிக்கமே அன்றி வேறல்ல. பொய்யும் புரட்டும் சுயநலமும் சுகத்துக்காக அலையும் துர்க்குணங்களும்தான் சைத்தான் என்கிற அசுரக் குணத்தின் ஆதிக்கம்.

சைத்தான் ஆகிய அசுரர்களின் குண நலன்களும் தோற்றங்களும் இந்த உலகில்  பலவேறு சிருஷ்டிகளாகத் தொடர்ந்து தோன்றி மறைந்து கொண்டே இருப்பதை நாம் சிந்தித்தால் இந்த உலகியலின் துன்பமும் இன்பமும் நிலையாமையின் அடிப்படையிலேயே நம்மைச் சூழ்கின்றன என்பதை உணரலாம்.

உலகியல் சுழற்சியில் ஒரு மனிதன் துன்பப்படுவதற்கும் சுகத்தில் மூழ்கி இருப்பதற்கும் காரணங்கள் உண்டு. ஆனால் அவை நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவை.

ஒருவருடைய குழப்பம் அகல்வதற்கும் குற்றங்கள் நிமிர்வதற்கும்கூட காரணிகள்,உலகில் அவரவர்தம் பாதையில் நெடுகப் பரவித் தூவப் பட்டிருக்கின்றன.

நாம் அவற்றை மிதித்துக் கொண்டுதான் நடக்கின்றோம்;ஆனால் உணர முடிவதில்லை.

உலகியலில் ஒவ்வொரு ஆதமாவும், ஒரு காரணத்தை முன்னிட்டே படைக்கப்பட்டு அதற்கான கால நேரமும் முடிவு செய்யப்பட்டதுதான். அந்தக் கால இடைவெளிக்குள் பிறவியுற்ற ஒவ்வொரு ஆத்மாவும் மண்ணுக்கு வந்த காரணத்தை முடித்துக் கொள்கின்றன.

மரணம் என்ற எல்லைக் கோட்டுக்கு அப்பால அவை அனைத்தும் தன்னை உணர்ந்து மண்ணுலகில் தாம் அடைந்த துன்பங்களுக்கும் வருந்தி வருந்தி வாழ்ந்ததையும் இன்பங்களில் மூழ்கி ஏமாந்து போய் இருந்ததையும் தான் பின் பற்றிய சித்தாந்தங்களையும்  கண்டு உணர்ந்து வெட்கப்படுகின்றன.

தங்கத்துகள்களும் தவிட்டுத் துகள்களும் கலந்த சமுத்திரத்தைக் கற்பனை செய்து கொண்டு பாருங்கள்:

சமுத்திரம்போல் சுழலும் சுழற்சியில் தங்கத் துகள்கள் சுகம் என்றும் தவிட்டுத் துகள்கள் துன்பம் என்றும் தெளிந்தால் . அவை எங்கே  எப்படி இருக்கின்றனவோ அப்படித்தான் இந்தச் சிருஷ்டியில்  நமது துன்பமும் இன்பமும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்துள்ளன என்பது விளங்கும்.

சிருஷ்டி மூலம் இறைவனின் நோக்கம் ஆத்மாக்களை வதைப்பதல்ல;
பக்குவப்படுத்தி அவற்றைத் தன்னோடு இணைத்துக் கொள்வதற்காகத்தான்  இன்பத்தையும் துன்பத்தையும்  படைத்து அதை அனுபவிக்கச் செய்வதாகத்தான் இருக்க முடியும்?.

இல்லை எனில் இறைவன் கூட ஒரு கொடுமைக்காரனாகவேதான் இருக்க வேண்டும் அல்லவா?

’அம்மையே அப்பா,ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே’ என்றும்

’பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்பாடிப் போற்றிய மேன்மைப் பிறவியோர் சொன்ன வார்த்தைகள் பொய்யாகத்தானே ஆகி விடும்?

களி மண்ணிலிருந்து பிடித்து வைத்த உருவப்பொருட்கள் நாம்.
ஒன்று அனைவராலும் ஆராதிக்கப்படும் தெய்வ வடிவம் போல்;இன்னொன்று பொதி சுமக்கும் கழுதை உருவம் போல்.

இரண்டுமே களிமண்தான் என்பதை நினைவில் கொண்டால். நமக்கு இன்பம் என்பதும் சுமைதான்; துன்பம் என்பதும் சுவைதான்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.11.2013


Post a Comment