Wednesday, March 28, 2012

ஜோதிடம்- இகல்வாரை இகல்!



அறிவு சான்ற நண்பர்களே,
வணக்கம்

ஜோதிட நம்பிக்கையைக் கேலிக் கூத்தாகச் சித்தரித்து திரைப் பட
இயக்குநர்  சேரன் ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளதாகவும் அதன் 
பெயர்  ‘வெங்காயம்’  என்று பகுத்தறிவு சார்ந்த கதைக் களமாய்  இப்படம் அமைந்துள்ளதென்றும்  என்னுடைய அருமை நண்பரும் 
பத்திரிகையாளருமான திரு. அரப்பா தமிழன்  அவர்கள்  எழுதி
அதை எனக்கு அனுப்பியிருந்தார்.

முதலில் நீங்கள் அனைவரும் அவருடைய விமர்சனத்தை 
படித்தால் இங்கு நான் எழுதும் எதிர்விமர்சனத்தின் தொடர்பு  
விளங்கும் அவரது கருத்தூட்டம் வருமாறு:

//வெங் ”காயம்”…
இப்படி ஒரு திரைப்படம்
நீண்ட காலத்துக்குப்பின் திரையுலகில் பகுத்தறிவு  செறிந்த ஒரு 
திரைப்படம்  துணிச்சலுடன் வெளியிடப்பட்டுள்ளதுதிரைப்படத்துறை 
என்பது மூட நம்பிக்கை நிறைந்த துறை.  முதலீடுகள் அதிகம் 
உள்ளதுபோல்  தொழிலாளர்களும் இத்துறையில்அதிகம்.ஓரளவு 
மக்களுடன்  தொடர்புடைய  துறையாக மாறியது இந்திய விடுதலைக் காலங்களில்பின்னர்  அத்துறை  அரசியலாக மாற்றப்பட்டது  திராவிட 
இயக்க தொடக்கத்தில்

ஒரு படம் தொடங்கப்படும் நாளில் பூசை புணஸ்காரங்களுடன் 
அனைவரும்ஒப்புக்கொண்ட ஒன்றாகும்.  திராவிட இயக்கம் அரசியலுக்குத் துணைக்கு அழைத்துக்கொண்ட திரைத்துறை 
இன்றளவும் ஆட்சிப்பீடத்தை அலங்கரிக்கப்  பயன்பாடு 
உடையதாகவே இருந்து வருகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள வெங் ”காயம்” எனும் திரைப்படம்
துணிச்சலுடன்  ஜாதகம்,ஜோசியம் போன்ற மூடநம்பிக்கையால் 
சிதறுண்டு போன ஒரு கிராமத்துக்கதையை நம் கண்முன்னே 
கொண்டு வந்து நிறுத்துகிறதுஇயக்குநர் சேரன் தயாரிப்பில்
வெறும்  புதுமுகங்களைக்  கொண்டு  குறைந்த முதலீட்டில்  
தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு குக்கிராமத்தில் ஜாதகம் பார்க்கும் சாமியார்களால் 
பாதிக்கப்பட்டவர்கள் ஜாதகம்ஜோதிடம்குறி சொல்லும் 
சாமியார்களைக் கடத்துகிறதுஇதை காவல்துறை கண்காணிக்கத் 
தொடங்கும் போதேகடத்தியவர்கள்  சுதாரித்துக் கொண்டு 
தடயங்களை அழிக்கின்றனர்.கடத்தியவர்கள்  யார்என நமக்கு
இயக்குநர்   சொல்லும்போது  ஆச்சர்யமாக இருக்கிறது.

நான்கு சிறார்கள் மட்டும் அந்த சாமியார்கள் கடத்தலைச் 
செய்கின்றனர். அந்த சிறார்களின் கோபத்தையும் அதனால் 
அக்குடும்பங்கள் அடைந்த துன்பத்தையும் படத்தின் தலைப்பாக 
வைத்துள்ள இயக்குநரசேரன்,வெங்காயம் என்றால் அது 
அரசியலில் தந்தை பெரியாரைக்  குறிக்கும் என்பதால் வெங் ”காயம்
என்று தலைப்பிட்டு,தந்தை பெரியாரின் பகுத்தறிவை 
முன்னிறுத்துவதாலும் மூடநம்பிக்கை எனும் ஜாதக 
நம்பிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெருங்கோபத்தால் 
உண்டான வெம்மையான மனக்காயத்தையும் அடையாளமாகக்  
கொண்டு  இப்பெயரை வைத்துள்ளார்.

நான்கு  சாமியார்கள்  கடத்தப்படுகிறார்கள்ஒரு பாழடைந்த 
மண்டபத்தில்  கட்டிவைக்கப்படுறார்கள்நான்கு சிறார்களும் நான்கு  சாமியார்களும்  நடத்தும் விவாதம் படத்தின் இறுதிக்  கட்டத்தை 
உச்சநிலைக்குக் கொண்டு  செல்கிறதுபகுத்தறிவான  விவாதம் 
சாமியார்களின் ஜாதகம் – ஜோதிடத்தை  விஞ்ஞானத்துக்கு 
ஒவ்வாத  ஒன்றாக உதாரணங்களுடன்  சிறார்களால் அடுத்த
தலைமுறையால் எடுத்து வைக்கப்படுகிறதுஇந்தச் சிறார்கள் 
பகுத்தறிவாளர்களாக மாற,  அவர்களின் பள்ளிக்கு நடிகர்  சத்தியராஜ்வந்து பகுத்தறிவுப்  பாடலும் பாடிதந்தை பெரியார் 
வேடமும் அணிவது காரணம்  என நமக்கு  உணர்த்தப்படுகிறது .

விதியை முன்னிறுத்தும் சமூகத்தைசாமியார்கள்  மூட 
நம்பிக்கையின் மூலம்  எப்படி உருவாக்குகிறார்கள் என்பதையும் 
விதிப்படிதான் வாழ்க்கை  என்றால் ஜோதிடம் எதற்கு எனும் 
பகுத்தறிவையும் வசனமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர்.//

இதுவரை நண்பர் அரப்பா தமிழன் அவர்களின் கருத்தூட்டத்தைத் தனித்து எடுத்துவைக்கின்றேன்!'

அதற்குப் பின் நண்பர் அரப்பா,சினிமாவில் சிறுவர்கள் கேட்கும் கேள்விகளையே பகுத்தறிவுத் தனமான வாதம் எனச் சுட்டிக் காட்டியுள்ளதற்கு இப்போதைக்கு நேரிடையாகப் பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டு,பகுத்தறிவு மற்றும் ஜோதிடம் தொடர்பாபான அதன் வினவுகள்குறித்துஎனது கருத்தை மட்டும் பதிவு 
செய்கின்றேன்.

திரு அரப்பா அவர்கள் சினிமாவில் சிறுவர்கள் கேட்டிருக்கும் 
கேள்விகளாகச்  சுட்டிக்காட்டும்  விஷயங்கள் இது:

//ஜோதிடக்கணிப்பு ஒரு குழந்தையின் பிறப்பில் என்றால் அக்குழந்தையின் பிறப்பின் நேரமாக எதை எடுத்துக் கொள்வது?

ஒரு குழந்தை   கருவாகும்,உருப்பெறும்,கருப்பையிலிருந்து   வெளிவரும்கண்விழிக்கும் நேரங்களில் எதை மையமாக வைத்து ஜாதகம் கணிப்பது?

ஒரே நேரத்தில் ஈழப்போரில்,சுனாமியால்,பூகம்பத்தால்விபத்தால் இறந்து போகும் மனிதர்களின் ஜாதகம் எல்லாம் ஒரே மாதிரியானதாஅவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில்  பிறந்தவர்களா?

இரட்டைக்  குழந்தைகளாகப் பிறக்கும் இருவருக்கும் ஒரே
மாதிரியான ஜாதகம்   இருக்குமா? அதில் ஒருவர் இறந்து 
மற்றொருவர் நீண்ட காலம் வாழ்வது எப்படி

இந்த வினாக்கள் சிறார்கள் சாமியார்களிடம் கேட்கும் காட்சிகளில் 
திரைப்படம் பார்ப்பவர்களிடமிருந்து கைதட்டல் வருகிறது

கிராமப்புரங்களில் கல்வி அறிவு இல்லாமையும் அதனால் 
மூட நம்பிக்கை பெருக்கமும் இதை மூலதனமாக்கி ஜோதிடச்
சாமியார்கள் பிறர் வாழ்வைச் சீரழிக்கும் நிலை கிராமங்களில் 
மட்டுமல்லாது  நகர்ப்புறவாசிகளிடமும் இருப்பதை தெளிவாகக் 
கூறுகிறார் இயக்குநர்.

நுகர்பொருள் வாங்கியபின் அதில் குறை இருக்குமானால் எப்படி 
நுகர்வோர்  பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குத்தொடர நமக்கு  
உரிமை உள்ளதோஅதுபோல  ஜோதிடம் பார்ப்பதால் உண்டாகும் 
இழப்புகளுக்கும் நிவாரணம்  பெறும் வகையிலும் தவறாக  
ஜோதிடத்தை வியாபாரமாக்கிய  சாமியார்களைத்  தண்டிக்கும் 
வகையிலும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் 
வேண்டும்’  என இயக்குநர்  வலியுறுத்துகிறார்.

தந்தை பெரியார் பெயரில் வந்த திரைப்படத்தைவிட இப்படம்  
அவரின் பகுத்தறிவுச் சிந்தனையை ஆழமாகக் காட்டுகிறதுஇப்படத்துக்குத் தமிழக அரசு வரிவிலக்கு  அளிக்க வேண்டும்;
பள்ளி மாணவர்களுக்கு  சிறப்புக் காட்சியாக இத்திரைப்படம்  
காட்டப்படவேண்டும்இது  திரைப்படம்  மட்டுமல்லஅடுத்த தலைமுறைக்கான  வாழ்வியலும் கூட

-தி.அரப்பாதமிழன்,மதுரை //

என்று தனது  விமர்சனத்தை முடித்துள்ளார் திரு அரப்பா தமிழன்.


இந்தக்  கேள்விகளைக் கேட்டிருப்பதும் சிறுவர்கள்தான். இதை ஒரு
பகுத்தறிவின் பகுதி என சிலாகிப்பதும் சிறுவர்களின் அனுபவமற்ற
நிலைதான்.

என்றாலும் -
’ஜோதிடத்தை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கொணர்ந்து 
அதை அங்கீகரிக்கச் செய்யும் பகுத்தறிவின் பார்வை 
பழுதில்லாததுதான்; அதை நான் வழி மொழிகின்றேன்.

சரி...
ஜோதிடத்தின் உண்மையான கூறுகள் பற்றி  ஜோதிடம்  
பேசுபவர்களுக்கே தெரியாத போது, அதைப் பற்றிய அடிப்படை 
அறிவே, இல்லாதவர்களுக்கு  எவ்விதம் புரிய வைக்க முடியும்?             
கை தட்டல் என்பது ஒருவித மயக்கத்தில் எழும் உற்சாகம்.

காபரே விடுதி ஒன்றில் ஆடும் காரிகை மெல்ல மெல்ல 
தன்  ஆடைகளைக்  களைந்தெறிந்து போடப் போட அங்கே 
குழுமியிருந்துகாணுகின்றவர்களின் கைதட்டல் 
பெருகுவதில்லையா?

அது
 போல்,
சில
 ஆபாசமான அர்த்தம் கெட்ட; அறிவற்ற வசனங்களையும்
ஆரோகணம் செய்து, ஆர்ப்பரித்து கைதட்டும் பழக்கம் நமக்கு 
இருப்பது சகஜம்தானே?

சரி,விஷயத்துக்கு
 வருகின்றேன்:

நான் எந்த சினிமாவையும் தியேட்டர்களுக்குச் சென்று பார்க்கும் 
தேவையை எப்போதோ விட்டு விட்டவன். தொலைக் காட்சி
மூலம் கூட அதன் தராதரங்களைத் தெரிந்து கொள்ள விருப்பம் 
இல்லாதவன்.

நல்ல படங்கள் என்று பேசப்படும் திரைப் படங்கள் வெற்றி பெறட்டும்’ 
என்ற அளவில்சினிமா பற்றிய எனது எண்ணங்களை ஒடுக்கிக் 
கொள்ளும் ஒருவன் நான்.

எனினும் இந்த மீடியாவை உண்மையான அக்கறையோடும் 
அறிவார்ந்தசிந்தனைகளோடும் ஆராதிப்பவர்களை நான் 
ஆமோதிப்பவன்  என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் திரு.அரப்பா தமிழன் எழுதியிருந்த விஷயங்களில்பகுத்தறிவு
தொடர்பான கருத்தூட்டங்களை (முன்பகுதியில்) பெரும்பாலும் 
சரியென்றே ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால்,
ஜோதிடம் தொடர்பான கேள்விகளில் மட்டும் விலகி நின்று எனது
கருத்துக்களைச் சொல்ல விழைகின்றேன்:

’தேடல்’ என்பது மனிதர்களுக்கு இயல்பாகவே இருக்கக் கூடிய அறிவு. 
அது இங்கு  பெரும்பாலானவர்களிடத்தில் இல்லை; இந்தக் கூற்று,
ஆத்திகர்களுக்கும் பொருந்தும்;நாத்திகர்களுக்கும் பொருந்தும்.

‘கடவுள் இல்லை’ என்று ஒருவன் சொல்வதால் மட்டுமே அவன்
நாத்திகன் என்றாகி விட முடியாது; அதனால் அவன் முழுமையான 
மனிதன் என்றும் தகுதி பெற்று விடுவதில்லை.

அதேபோல், ஒருவன் கடவுள் நம்பிக்கை கொண்டு வாழ்வதால்
மட்டுமே மனிதனாக வாழ்கின்றான் என்று எவரேனும் சொன்னால் 
அது ஒரு பித்தலாட்டமே தவிர வேறில்லை.

மனிதர்களுக்கே உரிய தேவையான விஷயங்களில் ஆத்திகனும் 
நாத்திகனும் வேறுபட்டு நிற்க முடியாது. பிறப்பும் இறப்பும் 
அவனுக்குள்ள முதல் பொதுஉடமை.இடைப் பட்ட வாழ்க்கையில்
சூழ்நிலை ஒன்றே அவனை வேறுபடுத்துகிறது.

அந்தச் சூழ்நிலையில் சிக்குண்டு போய்விடுபவர்கள்
அறிவிலிகளாகவும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதைப்
பகுத்துணர்ந்து வாழ்பவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கின்றார்கள்.
அவர்களைத்தான் ’நாத்திகன்’ என்றும் ’ஆத்திகன்’ என்றும்
முறைப்படுத்திச் சொல்வேன்.

‘இந்த உலகில் எதையும் நிரந்தரம் என்று நம்புபவன் மூடன்’;
அவன்
 ஆத்திகன் என்று ஆனபோதும்!

அதேபோல்
‘இதுதான்
 என் கொள்கை’ என்று அதையே ‘அறிவு’ என்பதாகக்
குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும்- ‘நான் நாத்திகன்’ என்று சொல்லிக் 
கொள்பவனும் மூடனே!

பெரியார் அவர்கள் இந்த மானுடர்க்கு உரைத்த கால கட்டம்
பிரிட்டிஷார் நம்மை எல்லாம் அடிமை கொண்டு ஆண்ட காலம்.
அதில் ஒருசிறு இனத்தவர்தங்களுக்கு அமைந்திருந்த வாழ்க்கை
வசதிகளின்அடிப்படையில் மிட்டா,மிராசுகளாகவும்,
ஜமீன்தார்களாகவும் அரசுக்கு ஆதரவாக இருந்துகொண்டு, நம்
ஜனங்களையே கசக்கிப் பிழிகின்ற காரியக்காரர்களாகவும் இருந்தனர்.

தாங்கள் வாழ்வதற்காக அவர்கள் நமது சாத்திரங்களுக்கும் 
சம்பிரதாயங்களுக்கும் அவர்களாகவே விளக்கம் சொல்லி
‘ஆண்டான் அடிமை’ சாசனத்தை,இந்தப் பாமர சனத்தின் மீது
திணித்து, உப்பரிகையில் உலாவருவதும் பல்லக்கில் பவனி
வருபவர்களுமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்குக் கவசமாக இருந்த ஆலய வழிபாட்டு முறைகள்
தெய்வீக நம்பிக்கைகள் வர்ணாசிரமக் கோட்பாடுகள் இவற்றைப்
பற்றிய எதிர்மறைக்கோட்பாடுகளை எடுத்துச் சொல்லி, மாக்களாக 
வாழ்ந்தவர்களை மாசு நீங்கிய மக்களாக்க முன் நின்றார்,
அப்போது, அந்தக் கால கட்டத்தில் பெரியார்,ஈ.வெ.ரா அவர்கள்.

அவரது கொள்கைகளும் குணாதிசயங்களும் அவரைப் 
பொருத்தவரையில் தனித்தன்மை மிக்கதாயும் தத்துவம்
உள்ளதாயும் உருவாகி நின்றது;வென்றது என்பதுதான்
எனது  பார்வை.

அம்மட்டோடு பெரியாரை நான் போற்றுகின்றவன்;ஏற்றுகின்றவன்.

ஆனால்,‘பெரியார் சொல்லியிருக்கிறார்;சொல்லிவிட்டார்’
என்பதையே எடுத்துக் காட்டி,மாபெரிய சுரண்டலல் கும்பல் ஒன்று
அவருடைய பாதையிலேயே உருவாகி நம்தமிழ்ச் சாதியை
தரம்கெட்ட சாதியாக்கிச் சதிராட்டம் ஆடிவருகின்றதே...
அதைத்தான் நாம் முற்றாக எதிர்க்க வேண்டும்.இந்த அடிப்படையில்தான்
அவர்களை எதிர்க்கும் முனைப்புடன் எழுதுகின்றேன்!

உண்மையான பகுத்தறிவாளார்கள் இதை உணர்ந்து அந்தப் போலிப்
பகுத்தறிவுப் ‘பம்மாத்துக்காரன்களை; ’கள’ எடுக்க முன்வரட்டும்; 
அதை  ‘உண்மையான சமூக சிந்தனை’ என உற்சாகப் படுத்துவேன்.

இப்படி எழுதுவதால் எனக்குக் கிடைக்கும் அடைமொழி:
நான் ஆரியர்களின்  குமுமத்தைச் சார்ந்தவன்’

அதாவது,‘இந்த நீசர்களின்’ பார்வையில் நான் ஓர் அந்தணன்!

அந்தணனுக்கும் ஆரியர்களுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கும்
முட்டாள்களாகத் தமிழர்களில் சிலர் சிறந்து நிற்கின்றார்களே?

தமிழ் மறைகளுக்கு முதல் மறையாய் நின்று ஒலிக்கும்
’திருமந்திரம்’என்றொரு மாமறை இருப்பதை நாத்திகம் பேசும் நல்லவர்கள்
எல்லாம் முதலில் படியுங்கள்; பிறகு,மனிதநீதி குறித்தான
வாதப் பிரதி வாதங்களில் இறங்குங்கள்.

வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்;
வேதாந்தம் கேட்டும் தம்வேட்கை ஒழிந்திலர்;
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்த இடம்;
வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே


என்கிறது திருமந்திரம்.

நாத்திகம் பேசும் நண்பர்களே,

நீங்கள் திருமந்திரத்தில் ஒரு மந்திரத்தையாவது நெட்டுரு செய்து 
நேர்பட நில்லுங்கள்உண்மை யாதென விளங்கும்அவ்வாறும் 
விளங்காவிடின் ‘அவர்கள் தமிழின் அரிச்சுவடிகளையெல்லாம் படித்து 
விட்டுத் தேற  வேண்டும்’ என்றுதான் சொல்வேன்.

ஏனெனில்,
தேறா மக்களுக்குத் தெளிவுறுத்தும் திறன்’ எனக்கில்லை!

நானும் நாட்டு வைத்தியன்தான்’ என்று தன்னை நாட்டிக் கொண்டு
தெருவோரம் கடை நடத்தும் பேர்வழிகள் மூலம் நோய் தீர்க்கப் பட்டால் 
அது அந்த வைத்தியனுக்குள்ள அதிர்ஷ்டம்!

அவனே பிரமாதமான வைத்தியன்’ என்று பட்டம் அளிப்பவர்கள்
நாமல்ல:நமது நாத்திக நண்பர்கள்தாம்.



அப்படிப்பட்ட  ‘பிரமாத’ வைத்தியனை வாதப் பொருளாக்குவதன் மூலம்அவர்கள் அந்தப் போலி வைத்தியர்களுக்கு கருத்துப் பூர்வமான அந்தஸ்தை வழங்கி விடுகிறார்கள்.

அந்த நாட்டு  வைத்தியர்களுக்கும்  இந்த ஜோதிடர்களுக்கும் 
வித்தியாசம் ஒன்றுமில்லை. தங்களை வாழ வைத்துக் கொள்வதற்காக, இங்குள்ள  ஜோதிடர்களில் பலர்ஜோதிடத்தை நம்பும் பாமரர்களுக்குப்
படுபாதகத்தைச் செய்கிறவர்கள்.

ஆலையில்லா  ஊருக்கு  இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பது போல்,
அறிவும் ஞானமும் அற்று,பாமரத் தனமாக ஜோதிட நம்பிக்கை
கொண்டோர்க்கு இத்தகைய இலுப்பைகள் அலுப்பைத்  தருவதில்லை.  
பாமரர்கள்   இவர்களிடத்தில் விட்டில் பூச்சிகளாய வீழ்கின்றனர்.

ஜோதிடம்தனை இகல்’ என்று நம் பாட்டன் பாரதி சொன்னானே,
அதுஇந்தப் பைத்திகாரப் பாமரனுக்குத்தான்;அந்தப் பகல் 
வேஷ ஜோதிடப் போலிகளை அறைவதற்குத்தான்!.

ஜோதிடம் தன்னை இகல்வாரை இகல்’ என்றுதான்  
நான் சொல்வேன்

நான் ‘ஜோதிடத்தைப் புகழ்பவன்’;புகல்பவனும்கூட.

ஏனெனில் அதன் அர்த்தங்களைப் புரிந்து கொண்டு அகராதி  எழுதிக்
கொண்டிருக்கிறேன்.

அது ஒரு  மெய்ஞ்ஞானம்விஞ்ஞானத்தையும் விஞ்சிய வேத ஞானம்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை      (குறள்:151)

என்னும் பொருளுக்குரிய  பெட்டகம்.

அதைப் படித்து ஆராய்ந்து அதில் வித்தியாசம் காண்பவர்களிடத்தில் 
மட்டுமே விவாதம் நடத்துவது பயன் தரும்என்பதில் உறுதியாக
நிற்கிறேன்,நான்.
இதை நாத்திகம் பேசுபவர்களிடத்தில் வாதிப்பதால் அவர்களுக்கும்
விளங்காது;விளக்குபவனுக்கும் விடியாது.

களர்நிலத்தில்  விவசாயம் செய்ய,  நான்  இன்னும் கற்றுக்
கொள்ளவில்லை.
நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
28.3.2012

2 comments:

sathya said...

Excellent article.I was also a Thee. kaa. Tamil jihadi group brainwashed guy..Slowly I realised that this so called dravidian groups leads me to suicide, at the same time filling the pockets of their leaders with money..Continue this..

ulagathamizharmaiyam said...

திரு சத்யா அவர்களின் தெளிவும் நேர்மையும் உண்மைத் தமிழனின் உரைகல் மொழி.

பாராட்டுவோம்.