Wednesday, March 7, 2012

சிங்கம் கர்ஜிக்கும்;சிறு நரிகள் ஊளையிடும்!

நண்பர்களே,

இலவசமாகக் கிடைத்துள்ள இந்த சமூக வலைத்தளத்தில்  சமூகத்தின் நன்மையைக் கருத்திற்கொண்டு   தமிழ் மொழியின் தன்னேரில்லாத் தகுதிகளோடு இறுமாந்து எழுதுகின்ற வாய்ப்பும் எண்ணமும் எல்லோருக்கும் வந்து விடுவதில்லை.

சிலர் இங்கு மானுடத்தின் மீது படிகின்ற அழுக்குகளைச் சுட்டிக் காட்டி எழுதுகின்றனர்;பலர் மானுடத்தையே அழுக்குப்படுத்தி எழுதுகின்றனர்.

சிலர் மானுடத்தை அழகுச் சிற்பமாய்ச் செதுக்குகின்றனர்;
பலர் அந்த சிற்பத்தின் மீது எச்சமிடுகின்றனர்.

//கண்ணாடியைச் செய்பவனுக்கும்
அந்தக் கண்ணாடி மீது
கல் வீசித் தாக்கி மகிழ்கின்றவனுக்கும்
அமைந்துள்ள மேடைதான்
இந்த முக நூல்(Facebook).//

என்று எழுதியிருந்தேன்
(காண்க;: சொல்லுவதெல்லாம் உண்மை -பகுதி:1 எழுத்து:7)

அப்படிக் கல்லெறிந்து காணும் இன்பத்தில் பொழுதுபோக்கி வருபவர்கள்  ஏராளமாக இருப்பினும் அவர்கள் முன்னே எனது எழுத்துக்களை- கண்ணாடியாக இல்லாமல் வைரம் என்றே வார்த்து வைக்கின்றவன் நான்.

ஆம்.
‘எழுதும் எழுத்துக்களுக்கு  நோக்கம் இருக்க வேண்டும்’
என்பதை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுதான் எழுதுகிறேன்.

’உலகம்  முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்கள் வலைத் தளங்களைத்
திறந்து தமிழ் எழுத்துக்களைக் காணும் போதெல்லாம் அவர்களின்
உள்ளமும் உணர்வும் மகிழும்படியும் நமது மொழியின் வளமான ஆளுமையை உணர்ந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்’
என்ற தமிழ் உறவின் தணியாத நேசத்தால் எழுதுகின்றேன்.

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு நமது பண்பாட்டின் நயத்தக்க நாகரீகம் போற்றும் உறுதிமிக்க உண்மைகளை எடுத்துரைக்கும் கருத்துக்களைச் சொல்லாமல் காலாட்டிக் கொண்டும் வாலாட்டிக் கொண்டும் வெறும் திண்ணைக் கதைகளைச் சொல்கின்றவர்களுக்கு
வேப்பங்காய்தான் எனது எழுத்துக்கள்.

கத்துக்குட்டிகளான இவர்களுக்கும் கற்றுத்தரும் விதமாக எழுதப்படும் எனது எழுத்துக்கள் இவர்களைச் சாடினாலும் அந்தச் சாடலில் ஒரு தேடலைக் காண்கின்ற அறிவை சிலர் மட்டுமே சிந்திக்கின்றார்கள்;

’சத்தும் சாரமும் இல்லாத எழுத்துக்கள் உப்பும் காரமும் இல்லாத படைப்புக்கள்’ என்பது என் எண்ணம்.

காற்றில் உமி விற்கின்ற கதையாக அவை காணாமல் போய் விடும்.
                         

எனவே,
எழுதும் திறனை நிலை நாட்டி, படிக்கின்றோர் மனதில் நிற்கும்படியான கருத்துக்களோடு எனது செய்திகளை, சீரார்ந்த தமிழின் செம்மாந்த செறுக்கோடும் கூரார்ந்த அனுபவத்தின் குலையாத முறுக்கோடும் முனைப்புடன் எழுதி வருகின்றேன்.

//இந்த வலைத் தளம்-
வெறும் பொழுது போக்குக்கான
தளம் அன்று!

வெற்றுப் பிழைப்பும்
வீண் திண்ணைப் பேச்சும்
விரும்புவோர்-

இங்கே
நுழையாதிருப்பது
அவர்களின்-
பொழுது போக்குக்கு
மிகவும் உதவும்.//

என்று -

இங்கே, எனது தோரண வாயிலில் கல்வெட்டு ஒன்றைச் செதுக்கி வைத்து விட்டுத்தான்  இங்கே எழுதி கொண்டிருக்கிறேன்.

என் எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது புரியும்.


இதில் உடன்பாடு உள்ளவர்கள் எனது கருத்துக்களைப் படிக்கலாம்;
தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம்; அதற்கு எதிராகக் கருத்துக்கள் சொல்லும் திறன் உடையோர் வாதமும் செய்யலாம்.

ஆனால்-
எழுதப் பட்ட விஷயத்தையே புரிந்து கொள்ளாமல் இங்கே யாரும்
குறுக்குச்சால் ஓட்டுவதை நான் அனுமதிப்பதில்லை.

இதை என் எழுத்தில் உறுதிபடச் சொல்வதிலும் உண்மைக்கு மாறான வாதங்களை எதிர்ப்பதிலும் அவற்றைச் சுட்டி வைப்பதிலும்  வெளிப்படுகிற எழுத்தின் வேகத்தை ‘திமிர்’ என்றும்  ‘அகந்தை’ என்றும் ‘தலைக்கனம்’ என்றும் இருட்டுக்குள் ஒழிந்து கொண்டு ஒப்பாரி வைப்பவர்கள் குறித்து நான் கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை.

மாறாக அவர்களுக்கு என் அனுதாபத்தைத்தான் சொல்ல முடியும்.

’அகந்தை’ ‘ஆணவம்’ ’தலைக்கனம்’ முதலான குணங்களின் ஜன்ம விரோதி’ என்று சொல்லிக் கொள்வதில் முதல் நபராகவே இருக்க விரும்புகின்றவன் நான்..

ஆனால்-
கர்வமும் செறுக்கும் சிங்கத்தின் இயல்பான குணங்கள்;
அதனைப் பேசச் சொன்னால் அது கர்ஜிக்கத்தான் செய்யும்;
சிறு நரிகளோ ஊளையிடும்!’ என்பது நரிகளுக்கு எங்கே புரியும்?

உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா
7.3.2012
Post a Comment