Friday, March 2, 2012

தமிழ்மொழி போற்றுதும்!


அன்பிற்குரிய நண்பர்களே,
வணக்கம்.
 
இங்கும் சில வலைத்தளங்களிலும் ‘எழுதுகிறேன் பேர்வழி’’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு பலரும் ’தமிலில்’ ’வெலுத்து’ வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் பின்னால் ஒரு படையே அணிதிரண்டு கரவொலியும் சிரவொலியும் காட்டிப் புளகாங்கித்துக் கொண்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக பெண்கள் சிலர் கொட்டும் எழுத்தின் கவர்ச்சியும் அதைப் படித்து விட்டு, ‘எழுத்துக் கத்துக்குட்டிகள்’ பல, எட்டும் எழுச்சியும் கண்டு நாம் வாளாவிருப்பது நல்லதா?’ என்ற சிந்தனை எழுகிறது.

இதே முகநூலில் எழுதத் தெரிந்தோரும் எண்ணம் செழித்தோரும் இல்லாமல் இல்லை. அவர்கள் தரம் குன்றாத் தமிழை தலை நிமிர எழுதி வருகிறார்கள்.

ஆனால், ‘அதிகம் பெருகிவரும் தரம் கெட்ட எழுத்துக்களின் பரவலை நாம் கண்டிக்கத் தவறுவது தமிழுக்கு நாம் செய்யும் துரோகம்’ என்றே சொல்வேன்.

தமிழ் உணர்வாளர்களும் மொழி ஆர்வலர்களும் அறிஞர்களும் படைப்பாளர்களும் இதைக் கருத்திற் கொள்ளாது, தங்கள் போக்கிலேயே இருப்பதும்கூடக் கண்டிக்கத் தக்கதுதான். 

அவர்கள் தாங்கள் வாழும் சமூகத்துக்கு எதைச் சொல்ல வருகிறார்களோ அதன் நோக்கம் பாழ்பட்டுப் போக வழி தருகிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள முடியும்.

எழுத வருவோரின் எழுத்தார்வத்தை நாம் வரவேற்கின்ற அதேசமயத்தில்,
’அவர்களுக்கு மொழியின் ஆளுமை இல்லா விட்டாலும் அதன் பண்பினை உணர்ந்து எழுத வேண்டும்’ என்ற கருத்தை உணர்த்துவதற்கும் நாம் தயங்கக் கூடாது.

தமிழ் மொழியின் தரத்தையும் அதன் வரத்தையும் தெரிந்து கொண்டு எழுத முனைவதுதான் ‘அறிவுக்கும் நம்மை இவ்வுலகிற்கு ஈன்ற அன்னைத் தமிழுக்கும் நாம் செலுத்தும் காணிக்கை’ என்பதை எழுத முனைவோர் கருத்தில் கொள்ள வேண்டும்.

காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களை வெளிப்படுத்தியும் வசைபாடும் வார்த்தைகளை வரிசைப் படுத்தியும் எழுதுவோர் 'அத்தகைய எழுத்துக்கள் தங்கள் ஈன்ற தாயை இழிவு படுத்துவதற்கு ஈடானது' என்பதையும் உணர வேண்டும்.

“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றான் நம் பாட்டன் மகாகவி பாரதி.

அவன் தமிழை மட்டும் படித்து விட்டு இதைத் தற்பெருமைக்காகச் சொல்லவில்லை; தலை சிறந்த சமற்கிருதம்,இந்தி,ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் முதலான பிற மொழிகளையும் கற்று அவற்றில் புலமை பெற்றவனாய்ச் சொன்ன வார்த்தை இது..

இது நம் கத்துக் குட்டிகளுக்குத் தெரியாதுதான் எனினும், அவர்கள் இந்த மேன்மையை உணர்ந்து கொண்டு எழுதுவதுதான் நல்லது.

பல்வேறு வலைத்தளங்களில் சென்று ‘அவற்றில் எழுதுவோரின் எண்ணங்களையும் எழுத்தின் லட்சணங்களையும்; எழுதுவோர் எவ்வாறு சிந்திக்கின்றார்கள்?’ என்பதையும் கவனிப்பது எனது வழக்கம்.

ஒரு சில வலைத்தளங்களில் வாசகர் அல்லது பார்வையாளர்களின் எண்ணிக்கை பல ஆயிரமாகப் பதிவாகி இருப்பதையும் பார்த்தேன். அப்படியானால் அந்த வலைப் பதிவுகளின் படைப்புக்கள் எத்தகையது? என்பதையும் கவனித்தேன்,

பிழையான வார்த்தைகளில் மட்டுமல்ல; பிழைப்புக் கெட்டக் கருத்துக்களிலும் தொடர்ந்து கைக்கிளைக் காதல் உணர்வுகளையும்
(அதாவது ஒருதலைக் காதல் ஏக்கங்கள்) அது சார்ந்த வரட்டுக் கருத்துக்களையுமே ’கவிதை’ என்று கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

குறிப்பாகப் பெண்கள் சிலர்.

அவர்களுடைய தமிழும் சரியில்லை;எழுதும் பண்பும் சரியில்லை; 

எனினும் சில வலைப் பதிவுகளில் ’கவிதை’ என்ற பெயரிலும் சமூகப் பார்வை என்ற நோக்கிலும் எழுதப்படும் பதிவுகளுக்குப் பலர் ‘உச்சுக் கொட்டுவதை’க் கண்டு தமது படைப்புக்களுக்குக் கிடைக்கின்ற வரவேற்பாகவும் அங்கீகாரமாகவும் கருதிக் கொண்டு உணர்ச்சி வேகம் கொள்கின்ற கத்துக்குட்டி எழுத்தாளர்கள் மிகுந்த வலைத்தளங்கள் தமிழின் நறுமணத்தைப் பரப்பாது, துர்நாற்றச் சிந்தனைகளையே பரப்பி வருகின்றன.

புதிதாய் எழுதவரும் இளம் படைப்பாளர்களும் இதையே முன்னுதாரணமாகக் கொண்டு இப்படி எழுதினால்தான் நம் எழுத்துக்களுக்குக் கவர்ச்சி இருக்கும்; வரவேற்பும்
கிடைக்கும்’ என்கிற தவறான அனுமானத்துக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.

இவர்களின் எழுத்தில் காதலையும் காமத்தையும் தவிர, நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை ஊட்டுகின்ற நற்கருத்துக்களைக் காண
முடிவதில்லை.

இவர்கள், குறிப்பாகப் பெண்கள், தங்களது காதல் உணர்ச்சிகளைத் தங்கள் கண்ணறாவித் தமிழ் நடையில் எழுதுவதன் மூலம் சந்தனக் காடெனத் திகழும் இலக்கிய மணத்தினூடே சாக்கடை நாற்றம் வீசச் செய்கின்றார்கள்.

எழுத்துச் சுதந்திரம்; எண்ணச் சுதந்திரம் என்ற போர்வையில் காதலையும் கண்ணறாவிக் கருத்துக்களையும் தங்கள் மனம்போன போக்கில் ஒரு சிலர் எழுத, அவ்வாறு எழுதப்படும் விஷயங்கள் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் முன் உதாரணமாகி. பின் அதுவே நம் இளைஞர்களின் எழுத்துக் கலாச்சாரமாகி விடுகின்றது.

இதன் விளைவாக, எழுதும் ஆர்வம் மிக்க இளைஞர்களும் இளம் பெண்களும் அனுபவமும் அறிவும் இல்லாத ஆர்வத்தினால், பண்பும் பயனும் அற்ற படைப்புக்களை இந்த வலைத்தளங்களில் பெருக்கி, நம் தமிழ் மொழியின் செம்மாந்த சீர்மையைச் சிதைத்து வருகின்றார்கள். 

இவர்களின் எழுத்துக்கள், அவர்களைப் பெற்ற தாயும் தந்தையும் பார்த்து
வெட்கித் தலைகுனிந்து போகும் வகையில்தான் இருக்கின்றன.

நான் தலை குனிகிறேன், இத்தகையோரின் எழுத்துக்களைக் கண்டு.

‘இவர்களுக்கு இருக்கும் எழுத்து வேட்கை வரவேற்கத் தக்கதாய் இருப்பினும், அது வடிகட்டத்தக்கது’ என்பதை எச்சரிப்பது, தமிழை ஆராதிப்போரின் கடமை;‘ நம் தமிழ்ச் சாதி தரம் மிக்கது’ என்று இறுமாந்திருப்போரின் உரிமை.

ஆம்,நண்பர்களே,

இவர்களின் எழுத்துக்களைக் காணும் போதெல்லாம் கண்டிக்கத் தலைப் படுங்கள்; தரம்கெட்ட சிந்தனைகளைப் படைப்போரை உங்களின் தண்டமிழால் தண்டிக்கவும் தயங்காதீர்.

அவர்கள் ’தமிழ் என்னும் புனித நதியில் சாக்கடைகளைக்  கலக்காமல் இருப்பது கூட அவர்கள்  தமிழுக்குச் செய்யும் அரிய தொண்டுதான்’ என்பதை உணர்த்துங்கள். 

தமிழ்மொழி போற்றுதும்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.3.2102.
Post a Comment