Saturday, March 24, 2012

ஞானமே வா!















என்னை இந்த உலகிடை
இட்டவன் யார் என்பதை
முன்னறிந்து  சொல்பவர் யார்? என்று
முட்டமுட்டத் தேடுகிறேன், ஞானம்!

ஒத்தை யடிப் பாதையில்
ஒற்றை மர நிழலிலே
’நத்தி நின்றால் போதும்’ என்று    
சொல்லி; யாரும்
நடப்பதனால் வருவதில்லை ஞானம்!

பத்தினியாய் இருப்பவள்,தன்
பதியினோடு வாழ்ந்திடில்
எத்தனைதான் சுகமிருந்த  போதும்;   அதில்
எட்டிவந்து சேர்வதில்லை ஞானம்!

'வெட்டுப்பட்ட புண்ணிலும்
விம்மி நிற்கும் சதையிலும்
கட்டுப்பட்டுப் போன மனம்' என்று; 
அந்த
கவியரசு சொல்லி வைத்த ஞானம்;

கட்டளையை இட்டு அதில்
கட்டி வைத்த ஆசைகள்;
சுட்ட பின்னே தெரிந்திருக்கும் பாடம்; அதைச்   
சூடும்வரை வருதில்லை ஞானம்!

பட்டணத்து வாழ்க்கையில்
பட்டினத்தார் பார்வையில்
ஒட்டிக் கொண்டு இருப்பதில்லை யாரும்; அந்த
உறவுகளில் தெரிவதில்லை ஞானம்!

காதல் என்று காமத்தை
ஓதி நின்று பேசினால்
நீதி என்று ஆவதில்லை, வாழ்வி்ல்;
நிலைத்திருக்க  வருவதில்லை ஞானம்!

அப்பனோடு அம்மையை
அப்பி வைத்த காமத்தைத்
தப்பி வந்து பார்ப்பவர்க்கே தோணும்; அதைத்
தப்ப விட்டால்  தழைப்பதில்லை 
ஞானம்!
                                          
ஞானம் பெற்ற புத்தனும்
ஞானம் அற்ற பித்தனும்
ஞானியர்க்கு ஒன்றுதானே ஆகணும்? - இதை
அறிந்திடாமல் புரிவதில்லை ஞானம்! 
O
தேடும்,
கிருஷ்ணன்பாலா
24.3.2012

2 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
நன்றி ஐயா.

Anonymous said...

கவிதைக்குரிய அனைத்து சிறப்புகளும் நிறைந்த கவிதை திரு கிருஷ்ணன் பாலா அவர்களே!---jeevitha rajan---