Sunday, June 30, 2013

அவதூறு: ஒரு அபத்தமான விளக்கம்!


அறிவார்ந்த நண்பர்களே,
நான் இதுவரை தனிப்பட்ட எந்த ஒருவர் மீதும் தனி விமர்சனத்தை வைத்துப்
பதிவுகள் இட்டதில்லை.

முகநூலில் நன்கு எழுதத்தெரிந்த நண்பர்கள்கூட, சில விஷயங்களைக் கிளறி, சில பத்திரிகையாளர்கள், சில எழுத்தாளர்கள் என்று  தனிப்பட்ட சிலரைக் குறிப்பிட்டு எழுதி விமர்சன யுத்தங்களை நடத்தி வருகிறார்கள்.  

'விடாது கருப்புஎன்பதுபோல் விடாது மாற்றி மாற்றிk குறிப்பிட்ட சிலரை மையமாக்கி வார்த்தைகளால் வறுத்தெடுக்கின்ற பதிவுகளைப் படித்து உச்சுக் கொட்டவும் உற்சாகப் படுத்தவும் தட்டிக் கொடுத்து விசில் அடிக்கவும் ஒரு பெரும் வாசகர் வட்டம் இருப்பதையும் காண்கின்றேன்.

எனினும் தமிழை இந்த அளவுக்கு சிலருடைய தரம் கெட்ட விஷயங்களைத் தொட்டுப் பேசப் பயன் படுத்துவதை நான் ரசிக்கவில்லைதான்.

ரசிக்கவில்லை என்பதால் விமர்சனத்துக்கு உள்ளாகும் நண்பர்கள் அல்லது நண்பிகள் குறித்து எனது விசனத்தையும் நாம் கொள்ளக்கூடாது என்பதாகிவிடாது; அப்படி விசனப்பட்டு நாம் குறிப்பிடவேண்டிய தருணம் இது என நினைக்கிறேன்.

முதலில்-
தனிப்பட்டவர்களைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சனச் சாட்டைகளை வீசும் நண்பர்கள் அளவுக்கு அதிகமாகவே அவர்களையும் அவர்கள் சிந்தனை மற்றும் செயல்பாடுகளையும்  இங்கு அறிமுகப்படுத்தி விட்டனர். அவர்களைப்பிரபலமானவர்கள்’ என்ற மாயையும் உருவாக்கி விட்டனர்.

விமர்சனத்துக்கு ஆளானவர்களில், சில எழுத்தாளர்களோ இவர்களுக்குப் பதில்சொல்வதாக எண்ணிக் கொண்டு அபத்தம் மிகுந்த கருத்துக்களைக் கொஞ்சமும் லஜ்ஜையின்றி ஊடகங்களிலும் இங்கும் வெளியிட்டுப் படிக்கின்றவர்களைக் கடுப்பேற்றி வருகிறார்கள்.

தமிழையும் ஒழுங்காக எழுதத் தெரியவில்லை;சொல்லும் கருத்துக்களையும் ஆணித்தரமாகச் சொல்லத் தெரியவில்லை. அப்படி இருந்தும் சில ஏடுகளும் ஊடகங்களும் இவர்களுடைய இருட்டுக் கருத்துக்களுக்கு வெட்கமின்றி விளக்குப் பிடித்துக் கொண்டு வருகின்றன.

இதில் கடுமையான விமர்சனக் காயங்களில் வலி கண்டுள்ள பெண்மணி ஒருவர் பதித்துள்ளஅவதூறு என்றால் என்ன?’ என்று சொல்லும் பதிவைப் படித்து என் மனம் திடுக்கிட்டது.

”பொறுப்புள்ள பத்திரிகையில் பணியாற்றி விட்டு இப்பொழுதும் மதிப்பான பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் அந்த அம்மணியின் வாதத்திறன் இதுதானா?” என்று விக்கித்துப் போனது மனது.  

அபத்தமும் இன வெறியும் மிகுந்த அவரது பதிவில் குளறுபடிகளும் கோளாறும் ஏராளம். காற்றுடைந்துபோன பலூன் போல் அவரது உள்ளம் சுருங்கிப் போய் இருப்பதை அவரது சாரமற்ற பதிவு சான்று கூறுகிறது.

நான்  எந்தப் பெண்மணியைக் குறிப்பிடுகிறேன் என்பதை பெயர் சொல்லி இங்கு குறிப்பிட்டுவிட்டால் இந்தப் பதிவின் சுவாரஸ்யம் குன்றிப்போய் விடும்.

நீங்களாகத் தெரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்:

தன்மீது தரம்கெட்ட குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து சிலர் எழுதி  அவதூறு பரப்புகிறார்கள்உண்மை சிறிதும் இல்லாத அந்தக் குற்றச் சாட்டுக்களை நான் நிராகரிக்கின்றேன்; அப்படித் தொடர்ந்து எனது பெயரைக் குறிப்பிட்டு சிலர் எழுதும் அவதூறுகள் என்னை மனதளவில் பாதிக்கக்கூடியவை என்பதால் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன். ஏதோ ஒரு உள் நோக்கத்தில் அவ்வாறு அவதூறு செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை கிடைக்கும்வரை என்மீதான அவதூறுகளை இங்குள்ள நண்பர்கள் யாரும் நம்ப வேண்டாம்

என்று-

அவர் எழுதியிருந்தால் உண்மையிலேயே அவர்மீது அனுதாபமும் பிறக்கும்; அவருடைய மதிப்பும் நிலைத்திருக்கும்.

மாறாக-

அந்தப் பெண்மணி எழுதுகிறார் பாருங்கள்; சிந்திக்கவே நெஞ்சம் கூசுகிறது:

// ’பாலியல் அவதூறு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அவன் இவளோடு போனான்...அவள் இவனோடு போனாள் ; கூத்தடித்தாள்’ என்று எழுதுவதே பாலியல் அவதூறுதான். சில கிரிமினல் புத்தி உடையவர்கள் எழுதுவது முழுதும் பொய் புரட்டு என்பது முதல் பிரச்சனை. இரண்டாவது ஒரு வாதத்துக்கு அப்படியே யாரோ யாருடனோ போனார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அதைக் கேட்க இவர்கள் யார்? அது அந்த தனிப்பட்ட இருவர் சம்பந்தப்பட்டது. நடுவில் இவங்க யாருங்க நாட்டாமை? ஒருவர் இன்னொருவருடன் உறவில் இருக்கிறார் என்று கூறுவதே அநாகரிகம். அதுவே ஒரு அவதூறுதான். அதில் உண்மையிருந்தாலும். ஆக அவதூறு என்றால் என்னவென்றால் அடுத்தவரின் அந்தரங்கம் குறித்துப் பேசுவது, தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது. அவர் குடிப்பார். பெண்களுடன் இருந்தார், கஞ்சா அடித்தார், உல்லாசமாக இருந்தார். சொகுசு பங்களாவுக்குச் சென்றார், தண்ணி அடித்தார் என்று ஒருவன் எழுதினால், அது அவதூறுதான் அது உண்மையாகவே இருந்தாலும் கூட. இவங்க என்ன கலாசார காவலர்களா? எந்த உரிமையில கேள்வி வருது? அது அப்படி நடந்தாலும் தனிப்பட்ட விசயம். ஆகவே உண்மையாக இருந்தாலும் தவறுதான். பொய்யாக எழுதினாலும் தவறுதான். இரண்டுமே அவதூறுதான். இதுதான் பாலியல் அவதூறின் அடிப்படை//

அந்தோ,….

சொல்லப்பட்ட குற்ற நடத்தைகள் உண்மை என்றாலும்கூட- அவை நிகழ்ந்திருந்தாலும் கூடஉண்மையாக இருந்தாலும் தவறுதான். பொய்யாக எழுதினாலும் தவறுதான். இரண்டுமே அவதூறுதான். இதுதான் பாலியல் அவதூறின் அடிப்படை
என்று தன்னிலை விளக்கம் அளித்து, ’அய்யோ பாவம்’ என்று அவர்மீது ஓரளவு அனுதாபம் கொண்டிருந்த நம்மை எல்லாம்கூட தலைகுனிய வைத்து விட்டாரே இந்த அம்மணி.?

பொறுப்புள்ள பத்திரிகை ஊடகங்களில் பணியாற்றும் இவர்,சமூகக் குற்றங்களை எப்படித் துணிவுடன் எதிர்த்து எழுத முடியும்?

பத்திரிகையாளர் என்பதற்கு இனி என்ன மாதிரியான தகுதிகளை இவரிடமிருந்து பண்பட்ட சமூகம் எதிர்பார்க்க முடியும்?

அதற்கும் அதிர்ச்சி தரும் விளக்கத்தை அளிப்பாரோ?

மிகவும் வருத்தப் படுகிறேன்!
இப்படிப்பட்ட  சிந்தையுள்ளவர்தான் பொறுப்புள்ள பத்திரிகையாளர்என்று மதித்து இருந்த காலத்தை எண்ணி.....

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.6.2013
Post a Comment