Thursday, June 13, 2013

இனிய உளவாக….


றிவுசான்ற நண்பர்களே
வணக்கம்.
 
முகநூலில் சமூகப் பிரக்ஞைக்கான விஷயங்களைச் சொக்க வைக்கும் நடையில் நிறையப்பேர் எழுதி வருகிறார்கள்; ஆனால், அவற்றைக் குறையப் பேர்களே படித்துக் குதூகலிக்கின்றார்கள்.

அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, இலக்கியம்.மொழி. ஊடகங்கள், நகைச் சுவை,புதுமைகூட்டும் புகைப் படங்கள் என்று பல்வேறு விஷயங்கள் இங்கே தரமான பதிவுகளில் பரிமாறப்பட்டு வருவது படிப்போரின் சிந்தனையைத் தீண்டும் வகையிலும் புதிதாக எழுத வருவோருக்கு எழுத்தை எப்படிக் கையாள வேண்டும்?’ என்று எழுதத் தூண்டும் வகையிலும் இருக்கின்றன.
மூன்றாந்தரமான படைப்பாளர்கள் முகநூலில் பெருகி நிற்பினும் அவர்களை  அரைகுறைகள் ஆரவாரம் செய்து ஆதரிப்பினும் நாம் இந்த அஃறிணைகளைப்  புறக்கணித்து, இருக்கின்ற உயர்வான  உண்மையை உயர்திணைகளை, உணர்ந்து, ஒப்புக்கொண்டு பாராட்டத்தான் வேண்டும்.

இன்றைய இளைஞர்களில் சிலர் பிரமிப்பூட்டும் வகையில் சிந்தித்து எழுதி வருவது கண்டு பேருவகை கொள்கின்றது மனது.

அவர்களின் படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் புகழ்ந்தும் உவந்தும் அவ்வப்போது என் கருத்தூட்டங்களைப் பதிக்கின்றவன்தான் நான்.

நான் படிக்காத,பார்க்காத,படிக்க முடியாத பதிவுகள் நான் பார்த்ததைவிட எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் என நம்புகிறேன்.

எனது கவனத்துக்கு வரும் நல்ல பதிவுகளை நான் தவறவிடுவதில்லை.

எனது எழுத்தின் நோக்கமும் நான் விரும்பிப் பார்க்கின்ற பதிவுகளின் நாட்டமும் ஒன்றுதான்.

அது, நமது தமிழ்ச் சந்ததியை உரமும் உயிர்ப்பும் மிக்கதாக்கி, சமுதாயத்தின் எதிர்கால ஆணி வேராகக் காணும் உந்துதல்தான்.

’இந்த உந்துதல் இங்கு எழுதுகின்ற நண்பர்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும்என்று சிந்திப்பது நப்பாசையா? இல்லை நட்பாசையா? என்பதை உங்களுடைய மனச் சான்றுதான் மதிப்பிட வேண்டும்.

இத்தகைய உயர்தரப் படைப்புக்களின் எதிர்பார்ப்புக்கிடையே, எழுதத் தெரிந்த நண்பர்கள் பலர், காதல் என்ற விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதைப் பல கோணத்தில் சிந்தித்து விதம் விதமாக இங்கே பதிக்கின்றதையும் நான் கவலையுடன் காண்கின்றேன்.

நமது தலைமுறைக்கு நாம் கற்றுத்தருகின்ற பண்பாடு இதுவல்ல’ என்பதை அவர்கள்தன் சிந்திக்க வேண்டும்.

அதில் ஒரு சிலர் அப்படி காதலைப் புதிய கோணத்தில் எழுதினால் நிறையப் பேர் அதை ரசிக்கிறார்கள்; அதன் மூலம் தங்களுக்கு நட்பு வட்டம் பெருகிறது என்பதாய் எண்ணம் கொண்டு அப்படி எழுதுவதை நியாயப்படுத்துகிறார்கள்.

‘இந்த முகநூல் நட்பு வட்டம் எந்த வகையிலும் நமது வாழ்க்கை நிலைக்கு உடன் இருக்கும் நண்பர்கள் வட்டம் அல்ல’ என்பதை அவர்கள் உணர்வதில்லை.

பண்பட்ட நண்பர்கள் இந்த வலைத்தளங்களின் தொடர்பினால்
ஒருவருக்கொருவர் வாழ்க்கை நண்பர்களாக உருவாவதை  விரும்பினால் அதில் அர்த்தம் உண்டு. நான்  அப்படித்தான் விரும்பி நண்பர்களை ஏற்கிறவன்.

ஆனால் இளம் வட்டங்களும் இருட்டறை இதயங்களும் காதல் விஷயத்தைக் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கின்றார்கள் என்பதற்கும் அவர்களை மேலும் ஈர்த்து நண்பர்களாக்கி ‘உச்சுக் கொட்டவைத்துத் தங்கள் நட்பு வட்டத்தை வளர்ப்பதும் அவர்களின் ‘Like'களுக்கும் பாராட்டுரைகளுக்கும் நன்றி அறிக்கை வாசிப்பதும்  வெட்கக் கேடானது. அவை அறிவுக் கண் கொண்டு பார்ப்போரை   எரிச்சலுறச் செய்கின்றன.

இந்த நண்பர்கள் சிலர் தொடர்ந்து காதலைப் பற்றி எழுதுவதன் நோக்கம்தான் எனக்கு ஒவ்வாமையாக உள்ளது. அவர்களுக்கிருக்கும் ‘கூர்மையான சிந்தனை’ என்னும் கத்தி வெண்ணெயை ஏன் வெட்ட வேண்டும்? என்கிறேன்.
  
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.’’

என்று இனியவை (அவையில் இனிய விஷயங்களைக்) கூறலின் சிறப்புப் பற்றி வள்ளுவன் வகுத்துச் சொன்னதன் பொருளைத் தங்கள் வசதிக்காகத் ‘திரிபு’செய்து, இனிமையும் குதூகலமும் ஊட்டும் காதல் விஷயங்களை
வாசகர்களின் பேரின்ப ரசனைக்கு விருந்தாக்குகின்றோம்’ என்கிறார்கள்.

நண்பர்களே,

காதல் என்பது தனி ஒருவனின் அந்தரங்க விஷயம்.

அதை அரங்கத்தில் ஏற்றி அவலப்படுத்துகின்ற நிலையில்
திறமை மிக்க சிந்தனையாளர்கள் இறங்கி விடக் கூடாதென்பதென் கருத்து.

காதலைப் பற்றி அறியாதார் யார்? உணராதார் யார்?

எனினும் அது சபையில் விவாதிக்கின்ற பொருள் அன்று.

முகநூலைப் பொறுத்தவரை ஆபாசத்துக்கும் அசிங்கத்துக்கும் உணர்ச்சி காட்டுகின்ற கூட்டமே அதிகம். அந்தக் கூட்டத்துக்குத் தண்ணி காட்டுவதும் தவிடு போடுவதும் ஒரு மாட்டுக்காரனின் வேலையாக இருக்க முடியுமே தவிர, தரமான படைப்பாளின் இயல்பாக இருக்க முடியாது.

எனது நண்பர்களுக்கு இதைத்தான் இலைமறைகாயாக இடித்தும் சொல்கிறேன்; எடுத்தும் சொல்லி வருகிறேன்.

இதன் அடிப்படையில், நான் எழுதி வரும் பண்பாட்டு நலன் குறித்த  கருத்துக்களைப் படித்தும் வாதித்தும் உணர்ந்து கொள்கின்ற எத்தனையோ இளம் சிந்தனையாளர்கள்,எழுச்சிமிக்க இளம் கவிஞர்கள்  இப்போதெல்லாம் நல்ல தரம் வாய்ந்த பதிவுகளைத் தந்து வருகிறார்கள்; அதில் காதலைப் பற்றிச் சொல்வதென்றாலும்கூட.

எனது பல்வேறு பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவோர் ஆயிரக்கணக்கில் இந்த மாறுதலை, மறுமலர்ச்சியை உணர்ந்து வருவதில் எனக்குப் பெருமைதான்.
உயர்தர இலக்கிய அறிவை;எண்ணங்களை,தமிழர் பண்பு காக்கும் ரசனையை,சமூகப் பார்வையை, அரசியல் அவலங்களை, படிப்போரின் சிந்தனைக்கு வைப்பதும் அதில விசாரம் காட்டுவதுமே தமிழ்ச்
சிந்தனையாளர்களின் பெருமைக்கு ஏற்றது.

இதை எண்ணாது, “இங்கே காதலைப் பற்றி எழுதினால் அதை ‘’ஆஹா...ஒஹோஎன்று கூவிக் குதிக்கின்றவர்கள் மன வளர்ச்சியற்றவர்களே” என்பதையும் மறந்து அந்தக் கூட்டத்தின் உற்சாகத்திற்காக எழுதி , நண்பர்கள் வட்டத்தைப் பெருக்குவதை  நான் அவமானகரமான  சிந்தாந்தம்’ என்றே  கூறுவேன்,

இனியாகிலும் இதை என் நண்பர்கள் உணர வேண்டும். 

இப்படிச் சொல்லியும்கூட அவர்கள் இதைப் பொருட்படுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் பண்பும் மரபும் கெட்டழிந்த சந்ததியினரைத்தான் அவர்கள் கண்டு நொந்து கண்ணீர் சிந்த நேரிடும்.


ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்கு
 உண்மை தெரிந்ததைச் சொல்வேன்!’

என்று-

முரசு கொட்டிய பாரதி எனக்குக் கற்றுக் கொடுத்ததை.
நான் காட்டிக் கொடுக்கின்றேன்,நண்பர்களே.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
13.6.2013
Post a Comment