Monday, June 24, 2013

எச்சரிக்கை: கபடக் காவிகள்!

அறிவார்ந்த நண்பர்களே,

உலகில் மனித வாழ்வின் செம்மையைச் சிறப்பிக்கும் விதமாக வேதாந்த விஷயங்களையும் சித்தாந்த ரகசியங்களையும் முன் நின்று உரைத்த மண் பாரதம் என்பதில் அறிவுடையோர் எவருக்கும் இரண்டு விதக் கருத்துக்கள் இருக்க முடியாது.

இந்திய ரிஷிகளால் அடையாளம் காட்டப்பட்ட வேதங்களும் அவற்றின் மெய்ப் பொருளும் அனாதிக் காலம் தொட்டே மகா முனிவர்களாலும் ரிஷிபுங்கவர்களாலும் பாரம்பரியமாக இங்கு அவர்தம் வழி நின்ற சீடர்களுக்கு உபதேசிக்கப் பட்டவை.

ரிஷிகளின் பாதார விந்தங்களைப் பற்றியே மாமன்னர்களும் அவர்தம் வழித் தோன்றல்களும் ஆட்சி புரிந்து மானுட சமுதாயத்தை நெறிப்படுத்தியும் முறைபடுத்தியும் ஆண்டு வந்தனர்.

எனவேதான்,அரசர்களை ‘இறைவனின் பிரதிநிதியாக’ மக்கள் வணங்கி நின்று, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்குப் பயந்தும் பணிந்தும் தெளிந்தும் சமூக ஒற்றுமையோடும் தேசப் பற்றோடும் ஒழுகி வந்தனர்.

ஆலயம் என்பது மக்களின் ஆன்மா லயம் கொண்ட இடம் எனத் தெளிந்து  ஊர்கள் தோறும் ஆலயங்களைக் கட்டி முறை தவறாது வழிபடுகள் நடத்தி,திரு விழாக்களையும் கொண்டாடி வந்தனர்.

முற்றும் தெளிந்து பற்றற வாழ்வதற்குரிய வழியில் ஆன்மா லயம் கொள்ளும்போதுதான் இறைநிழலில் பேரின்ப நிலையை அடைய முடியும் என்பதையும் நம் முன்னோர் தெளிந்து,அதனை அடைகின்ற மார்க்கமாக ‘யோகாப்பியாசத்தை நம்மவர்களுக்குப் போதிக்கும் குரு குல முறைகளை மேம்படுத்தினர்.

நமது ரிஷிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைகளில் வேத நெறிகளில் தனித்துவம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர்.

மாணாக்கர்களுக்கும் மானுடர்க்கும் போதிக்கும் யோக முறைகளில் தேர்ந்தவராக-முன்னவராகப்  பதஞ்சலி முனிவர் கருதப்படுகிறார்.

பல்லாயிரம்  ஆண்டுகளாக அவரது யோக சூத்திரங்களைப் பின் பற்றியே நம் முன்னோரான ரிஷிகள் பலரும் யோக நெறிகளை ஆய்ந்தும் அவற்றில் தோய்ந்தும் பல்வேறு உடற்கூற்று ரகசியங்களைக் காலம் தோறும் கற்பித்து வந்தனர்.

ஆனால் நவீன உலகில் இந்த யோகப் பயிற்சியில் மனிதன் குருடனாகி விட்ட படியால், அவனை தட்டி எழுப்பி முக்தி நிலைக்கு வழி காட்டுகிறேன்’என்று காவியைக் கட்டிக் கொண்டு பல்வேறு போலிச் சாமியார்கள் புற்றீசல் போலப் புறப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் பின்னே, ஆறறிவு படைத்த மானுடர்கள் ஐந்தறிவுப் பிராணிகளாய் ஆட்டு மந்தைகள்போல்   வரிசை கட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள்.

குருதட்சிணை என்னும் பெயரால் கோடி கோடியாகப் பணத்தைச் சுருட்டும் இடங்களாக இன்று நம் நாட்டு யோகப் பயிற்சிப் பீடங்கள் உருவாகிக் கொண்டுள்ளன.

பத்து பதினைந்து மேலை நாட்டு பையத்தியக்காரர்களைத் தம்மிடம் யோகா கற்றுக் கொள்கின்ற சீடர்களை எனக் காட்டிக் கொண்டு பல்லாயிரம் இந்தியப் பையித்தியங்களைத் தங்களுக்கான  நிதியை ஈட்டித்தருகின்ற காமதேனுக்களாக்கி விடுகின்றனர் இந்தக் காவிகள்.

இந்தக் காவிகளுக்கு யாரேனும் ஒரு அரசியல் அதிகாரப் பீடாதிபதி ரகசிய சீடராகி விடுவதும் அவர்களைக் கொண்டு அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு பல்வேறு வகையிலும் சட்டத்துக்கும் சத்தியத்துக்கும் புறம்பான வழிகளில் யோகா பீடங்கள் என்று கான்கிரீட் கட்டிடங்களை எழுப்பி, அதில் கலை வண்ணம் மிளிரும் கடவுளரின் சிலைகளை வைத்து கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உன்மத்தம் பிடித்த ஆயிரக் கணக்கானோர் இந்தக் காவிகள் நடத்தும் யோகாக் கண்காட்சித் திருவிழாக்களில் பர’வச’ நிலை அடைந்து ஆடி பாடிக் கூத்தடிக்கின்றார்கள். இவர்களின் பின்னணியில் ஏசுவையும் இணையற்ர துறவிகளையும் தூக்கி அடிக்கும் ‘தெய்வீகத் தோற்றத்தில்’இந்தக் கபடக் காவிகள்!

இந்த இழிநிலையின்  உச்சமாய் நித்தியானந்தாக்கள் வேஷம் களைந்தும் ‘வேதாளம் தன் போக்கில் வேப்ப மரம் ஏறிக் கொண்ட கதையானது போல், மிச்சமுள்ள காவியாகிய இந்த வேதாளங்களும் இப்படியேதான் தங்கள் கடைகளை விரித்தும் பரப்பியும் வியாபாரம் செய்து வருகின்றன.

இதெல்லாம் எந்த வகையில் இறை நெறித்தொண்டு பரப்பும் செயலென்று கேட்டால்;கேட்கின்றவனை பைத்தியம் என்கின்றனர்,இந்தக் காவிகளின் கடைக் கோடிகள்.

பாவம், இவர்களின்பால் நாம் அனுதாபம் கொள்வதை விட வேறு என்ன செய்ய முடியும் இப்போதைக்கு.

நான் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களில் எவரேனும் ஒருவர் பதில் சொன்னால் போதும்; அவர்களுக்கு இறைநாட்டத்தில் எத்தகைய தேடல் இருக்கிறது? என்பதைத் தெளிவாக்கத் தயராக இருக்கின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில்-
‘யோக நிலை என்பது மனதின் ஆழ்நிலைப் பயிற்சியே; அது ஒரு விஞ்ஞானம் என்பதை விட மெய்ஞ்ஞானம்’ என்பதை ஏற்கிறவன் நான்.

யோக நிலையைத் தேடுகின்ற மனிதனுக்கு கான்கிரீட் கட்டிடங்களும் செயற்கைக் கலை வண்ணத் தோற்றங்களும் ஆடம்பரமான சூழல்களும் வழி காட்டுகின்றன’ என்ற மாயைக்கு எதிராகச் சிந்திக்கும் அறிவை யாசிப்பதே மெய்யறிவின் வித்து.

அதற்கு மாறாகப் பொய்யறிவின் துணைகொண்டு உயர்ந்த யோக நெறிக்கான பீடம் ‘இங்குதான் இருக்கிறது’ என்று இந்தக் காவிகள் ஒவ்வொருவரும்  ஒவ்வொருவகையான மடங்களைக் கட்டிக் கொண்டு,கடை விரித்து
வைத்துக் கொண்டு உலகிலேயே அதிக சீடர்களையும் வெளிநாடுகளில் அதிகக் கிளகளையும் கொண்ட மகா யோக பீடம் எங்களுடையதுதான்’
என்று பறை சாற்றி வருவதும் இதற்கென்றே பேசும் பிள்ளைகளை
வைத்துக் கொள்வதும் எழுதும் ஏந்தல்களை ஏந்திக் கொண்டிருப்பதும்  விளம்பர வணிகமே  அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

மரம் பழுத்தால் வவ்வாலை  ‘வா’ வென்று கூவி’ விருந்தழைப்பார் யாருமிங்குண்டோ?

மரம் பழுத்தால் வவ்வால்கள் தாமே தேடி வரும்;ஞானி பழுத்தால் சீடர்கள் தேடி வருவர்.

ஆனால் நம் நாட்டு நவீன ஞானிகளோ வவ்வாலை அல்ல;காக்கைக் கூட்டங்களை வாருங்கள்;வாருங்கள் என இரு கைகளையும் விரித்து, இறைஞ்சிக் கொண்டுள்ளனர்.

எதற்கு?

தங்கள் கபட வேடத்துக்குச் சரியான கபோதிச் சீடர்களைப் பெருக்குவதற்காக!

இவர்களிடம் ஞானம் படும்பாடு இருக்கிறதே,அதுதான் கலியின் கூத்து!

நண்பர்களே,

நமது இந்தியப் பாரம்பரியத்தின் எதிரிகள் அந்நிய நாட்டு மதவாதிகள் அல்லர்; உள்நாட்டுக் காவிகள்தான்.

இதைப்பற்றி நாம் நிறையச் சிந்திக்க வேண்டியுள்ளது.
நமக்குச் சுய தரிசனம் மிக மிகத் தேவை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.6.2013

Post a Comment