Friday, June 14, 2013

மனமே நீ.......






















கம்பனைப் பாடி கொம்பனாகலாம்;
காளமேகம்போல் கவிதை கொட்டலாம்;
நம்பிக்கை ஊட்டும் வார்த்தைமலர்களில்
நாடே புகழும் பெயரை எட்டலாம்!

கண்ணதாசனின் காதல் கவிதையில்
கதை கதையாக  உவமை கூறலாம்;
எண்ணம் முழுவதும் அவன்பேர் வடித்து
இரவும் பகலும் வணக்கம் கூறலாம்!

அவ்வை,வள்ளுவன்,இளங்கோ,பாரதி
அடுக்கடுக்காக ஆயிரம் புலவரை
கவ்விடும் கருத்தில் வடித்து வைத்து
கருத்துப் பதிவுகள் வெளுத்து வாங்கலாம்!


அறிஞர் சபையில் ஆரா வாரங்கள்
அணங்குகள் இடையில் வரவேற்புரைகள்;
திறமை மிக்கதோர் தமிழுணர்வோடு
திசைகள் எட்டிலும் தேர்ந்து நிற்கலாம்!

கவிஞன்;புலவன்;அறிஞன் என்று
கணக்கில்லாமல் பேர் நீ, வாங்கினும்
புவியில் ’மனிதன்’ எனும் பெயர்  ஒன்றை
பூண மறந்தால் பொய் நீ,மனமே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.6.2013

1 comment:

Anonymous said...

''..புவியில் ’மனிதன்’ எனும் பெயர் ஒன்றை
பூண மறந்தால் பொய் நீ,மனமே!..''
மனிதனாக நடப்போம்.
வேதா. இலங்காதிலகம்.