Friday, June 14, 2013

தனி மரம் தோப்பாகாது!



அறிவார்ந்த நண்பர்களே,

இலவச சாப்பாட்டுப் பந்தல்,இலவச நீர்மோர்ப் பந்தல்.இலவசத் தண்ணீர்ப் பந்தல் என்பதுபோல,இது இலவச சமூக வலைத்தளம். பொதுவாக இலவசப் பந்தல் என்பது இறைநெறி நோக்கில் அறப்பணி செய்யவே நம் முன்னோர் இம்மாதிரி உணவு,நீர்மோர்,பானகம், தண்ணீர் என்று மக்களுக்குத் தேவைப் படும் அத்தியாவசியப் பண்டங்களை மிகுந்த சிரத்தையோடும் மனச் சான்றோடும் பயபக்தியோடும் முக்கியமான தெய்வத் திருவிழாக்களில் பொது ஜனங்களுக்கு வழங்கி வந்தனர்.

பொதுமக்களுக்காகச் செய்யும் எந்தவொரு நற்பணியும் - கோவில் கட்டுவதாகட்டும்;அன்ன சத்திரங்கள் கட்டுவதாகட்டும் அதில் தெய்வக் குற்றம் இல்லாதபடி இருக்க வேண்டும் என்பதை மிகப் பெரும் சமூக நீதியாகக் கருதி அதுவே இறைவனுக்குச் செய்யும் தொண்டாக, தம் இறுதி நாட்களில் பாவங்கள் அற்ற நிம்மதியும் பேரும் புகழும் கிடைக்கச் செய்யும் அறமாக நம் முன்னோர் கடைப்பிடித்து வந்தனர்.
 
இன்று நமக்குக் கிடைத்துள்ள இந்த சமூகவலைத்தளம் கூட எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் எழுதி வைத்து விட்டுப் போககக் கிடைத்துள்ள இலவச அறப்பண்பாட்டுச் சித்தாந்தத் தளம்தான்.

இதில் நாம் பதிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் தகுதியை, தரத்தை, அறிவுக் கூர்மையை உங்கள் வருங்காலச் சந்ததிக்கு இலவசமாக வார்த்தெடுத்துத் தரும் வரலாற்றுப் படிமம்தான்.

நம் முன்னோர் வாழ்ந்து காட்டிய பாதையின் வழியே வந்த நாம், அவர்களின் எச்சங்களாக இன்று இருக்க வேண்டாமா?

இதை உணராது நாம் வீணே வாழ்ந்திடல் கூடாது;வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக்கி, தலைமுறைதோறும் தர்மமும் நீதியும் தாழ்ந்துவிடாமல் இருக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் மானுடக் கடமை.
ஆனால் நம்மில் இதை எத்தனை பேர் உணர்ந்து வாழ்கிறோம்? மனச் சான்றோடு எண்ணிப் பாருங்கள்.
 
ஊரில் கோவில் திருவிழா. ஊரில் உள்ள அத்தனை பேரும் தங்கள் பங்குக்கு ஒருபடி பசும்பாலைக் கோவில் விசேடத்துக்குக் கொண்டு வந்து ஊற்றவேண்டும் என்று கோவில் கமிட்டியினரால் சொல்லப்பட்ட பின்பு அந்த ஊரில் இருந்த ஒவ்வொரு குடும்பத்தாரும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஆள் உயர அண்டாவில் தத்தம் பங்காக ஒருபடி அளவு பாலை ஊற்றிவிட்டுச் சென்றார்கள்.
 
அந்த ஊரில் இருந்த செட்டியார் ஒருவர், பெரும் கஞ்சன். எதிலும் காசு பார்க்கும் கருமியான அவருக்கு இப்படியோர் எண்ணம் உதித்தது:

எல்லோரும் பாலை ஊற்றுவார்கள்.அதில் நாம் தண்ணீரை ஊற்றி நமது கணக்கைக் காட்டினால் போச்சு. நாம் கொட்டும் தண்ணீர் அந்தப் பாலில் தனியாகவா தெரிந்து நம்மைக் காட்டி கொடுத்து விடும்?”

 
இப்படி எண்ணம் உதித்ததும் அந்தச் செட்டியார் அப்படியே ஒரு படி தண்ணீரை அந்தப் பால் அண்டாவில் கொட்டிவிட்டுச் சென்றார்.
 
அங்கிருந்த கணக்குப் பிள்ளைஊரில் உள்ள அனைவரும் வந்து பாலைக் கொட்டி விட்டனர்என்று கணக்கு முடித்ததும் கோவில் கமிட்டியார் கூடி அந்த அண்டாவிலிருந்த பாலை பூஜைக்காக எடுத்துப் பார்த்தனர்.
அந்தோ... அண்டா முழுதும் பாலுக்குப் பதிலாகப் பச்சைத் தண்ணீரே நிரம்பி இருந்தது.

கோவில் கமிட்டியார் வெட்கித் தலை குனிந்தனர்.
 
செட்டியாரைப் போன்றே இன்றுள்ள மக்கள் ஒவ்வொருவரும்பொது வாழ்வில் நாம் மட்டும் ஒழுங்கீனமாக இருந்து விட்டால் இந்த சமூகத்துக்குக் கேடு ஒன்றும் விளைந்து விடப்போவதில்லையேஎன்று எண்னி ஒவ்வொருவருவருமே தவறு செய்கின்றவர்களாகி விட்ட நிலை உருவாகி விட்டது.

யார் தவறு செய்தால் என்ன? நாம் தவறு செய்யக் கூடாதுஎன்று ஒவ்வொருவரும் சிந்திப்பது ஒன்றே உயர்தரச் சமூகத்தின் கட்டுக் கோப்புக்காக நாம் செய்யும் ஒழுக்கச் சிந்தனை.


அதுவே ஒவ்வொருவரின் நல்லொழுக்கம்;நற்பண்பு;சமூக ஞானம்.
தனி மரம் தோப்பாகாது, ஊர் கூடி த் தேர் இழுத்தால் ஒழிய தேர் நகராது.
தனி ஒருவன் ஒழுக்கம் பற்றி உபதேசிப்பதால் மட்டும் ஒழுக்கமும் பண்பும் ஊருக்குள் புகுந்து விடாது.
 
நண்பர்களே, எல்லோரும் சேர்ந்து கை தட்டுங்கள்;இனிய நாதம் எழும்!.

இவண்,
கிருஷ்ணன்பாலா
14.6.2013

No comments: