Sunday, April 20, 2014

மோதியின் வெற்றியில்...

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

1967 க்குப் பிறகு தமிழகம் திராவிடக் கட்சிகளின் கைப்பிடிக்குள்ளேயே கட்டுண்டு போய் விட்டது. ஊரெங்கும் சாராயக் கடைகளும் சினிமாத் தியேட்டர்களும் பணத்தைக் கொள்ளையடிக்கும் பள்ளிக் கூடங்களும் பொறியியல் கல்லூரிக் கடைகளும் பெருகி இருக்கிறதே தவிர,  மாநிலத்தின் எதிர்காலப் பயன்களுக்கென்று எவ்விதத் திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

மக்களுக்குச் சுய அறிவும் சுதந்திரமான தொழில் முயற்சிகளும் ஏற்பட்டு விட்டால் தங்கள் சாயம் வெளுத்து விடும் என்பதற்காகவே இங்கு சாராயக் கடைகளும் சினிமாக்களும் மக்களை மாக்களாகவே வைத்திருக்கின்றன. இதில்தான் ஆசி செய்வோரின் கவனம் எல்லாம்.

மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சிந்தித்து எண்ணுவோரும் எழுதுவோரும் மிக மிகக் குறைவு.

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் கொண்ட எழுத்துக்களில் பொழுது போக்குவோர் இங்கு மலிந்து விட்டனர்.ஆட்சியாளர்களின் குற்றங்களையும் குறைகளையும் நிமிர்ந்து நின்று சுட்டி எழுதுவாரில்லை. வெறும் காமெடியும் கிண்டலுமாக எழுதித் தங்கள் எழுத்துத்திறமையில் தாங்களாக மயங்கிக் கொண்டிருப்போரே இங்கு நிறைந்து கொண்டிருக்கின்றார்கள்.

காமமும் காதலும் களிவெறி கொண்டவர்களாகவே காட்சி அளிக்கும் இவர்களின் காட்டு மிராண்டி எழுத்துக்களால், என்ன பயன்? என்பதைச் சிந்திப்பார் இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை  தேர்தல்கள் வருகின்றன;ஆட்சி மாற்றங்களும் வருகின்றன;ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தில் வளம் மட்டும் வருவதில்லை.

என்ன சொல்லி ஆட்சிக்கு வருகிறார்களோ, அதை அடுத்த தேர்தல் வரும்போது, ‘ஏன் சொன்னதைச் செய்யவில்லை? என்று பாமர மக்கள்தான் கேட்பதில்லை என்றால் படித்தவர்களும் தட்டிக் கேட்பதில்லை.

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு சிந்தனை சிறந்தோரின் எண்ணிக்கை கூடுவதற்குப் பதிலாக, இழிந்த சிந்தனைகளை விளம்பரப் படுத்திக் கொள்கின்ற ’வக்கிரப் புத்தியாளர்களின்’ வரிசைதான் பெருகி நிற்கிறது.

இங்கே ஆளாளுக்குக் கட்சி கட்டிக் கொண்டு வம்பளப்பதைத் தவிர, நாட்டின் வளமார்ந்த வளர்ச்சிக்காக  வரிந்து கட்டிக் கொண்டு வாதிடுவோர்   அரிதாகி விட்டனர்.

எந்தக் கோபத்தில்,2011ல் கலைஞர் ஆட்சியைக் காட்டுக்கு அனுப்பி, மேடம் ஜெயலலிதா அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட்டார்களோ, அந்தக் கோபத்தைத் தீர்க்கின்றவாறு நாட்டில் புதிய திட்டங்களோ தொழில் மறுமலர்ச்சியோ  ஏற்படவில்லை.

தோற்றபிறகு ‘ஏன் தோற்றோம்? என்பதை மட்டுமே ஆராய்ந்து நொந்துகொள்கிற வழக்கம் நமது அரசியல்வாதிகளின்  மாறாத இயல்பு என்றாகி விட்டது.

எனவே, தேர்தல்கள் என்பது மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் மாறி மாறி ஆட்சியில் அமர்கின்ற திருவிழாக்களாக இல்லாமல் கடந்த ஆட்சியின் தவறுகளிருந்து மீண்டு, மக்களுக்காகவும் நாட்டின் உயர் பெருமைக்காகவும் ஆட்சி நிர்வாகத்தை நடத்துகின்றவர்களை அடையாளம் காணுகின்ற திருப்பு முனையாக இருக்க வேண்டும்.

சென்ற 2011ல் நடந்த மாநில சட்டமன்றத்துக்கான தேர்தலில் தி.மு.க தோற்று,அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது நான் இங்கு எழுதின கட்டுரை ஏனோ என் நினைவுக்கு வந்தது.

அதை மறுபடியும் வாசக நண்பர்களின் பார்வைக்கு மீள்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.(காண்க: இதே வலையில் ‘நட்புடனும் நடுநிலையுடனும்’ தேதி:14.5.2011 / http://ulagathamizharmaiyam.blogspot.in/2011/05/blog-post.html )

வரும் நாடாளுமன்றத்தேர்தலில் மோதியின் வெற்றி உறுதியான ஒன்று என்பது நாட்டுப்பற்றுள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்றாலும் மோதியின் ஆட்சியில் ’எல்லோரும் ஓர் நிறை;எல்லோரும் ஓர் விலை’ என்ற சமத்துவப் பார்வையோடு வலிமை மிக்க ஆட்சி நேர்மையான நிர்வாகம் புரிந்து நீடிக்க வேண்டும்’ என்ற கவலையும் இருக்கிறது.

’மோதிக்கு ஓட்டுப்போடாதவர்களும் மனம் வருந்தி மோதியை வாழ்த்தும் வகையில் இந்த நாடு நல்லதோர் மாற்றத்தைக் காண வேண்டும்’ என்பதே என் போன்றோரின் எதிர்பார்ப்பு.

பி.ஜே.பி தலைவர்களும் அதன் தொண்டர்களும் இதனைக் கருத்தில் கொண்டு சிந்திப்பார்களானால் அதுதான் மோதியை ஆட்சியில் அமர்த்தி மகிழ்வதிலுள்ள உண்மையான  அர்த்தம்.

தேசத்தைச் சத்தான எதிர்காலம் எதிர்கொள்ளட்டும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
20.04.2014

Thursday, April 17, 2014

மோதி முன்னூறு பிளஸ்!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

இந்தியா முழுவதிலும் எதிரொலிக்கின்ற மக்களின் குரல்: ’மத்தியில் மாற்றம் வேண்டியே எங்கள் ஓட்டு’

ஆம்.
நரேந்திர மோதியின் அரசு அமைய வேண்டும் என்பதில் அனைத்துத்தரப்பு மக்களிடமும் ஏகோபித்த எண்ணம் வலுவாக இருக்க, மோதியை எதிர்ப்போர் ஓரணியில் இல்லை என்பதும் அவர்கள் தங்களுக்குள் ’யார் பலசாலி?’ என்று காட்டிக் கொள்வதில் அணிகளாகப் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் வீழ்த்திக் கொள்வதிலும்தான் வெறிகொண்டிருக்கின்றனர்.

இதன் மூலம் மோதியின் ஆதரவு ஓட்டுக்கள் சிதறாமலும் அவருடைய எதிர்ப்பாளர்களின் ஓட்டுக்கள் சிதறியும் போவதால் அவருடை வெற்றி சர்வ நிச்சயமாகிறது.

சொல்லப்போனால்,மோதியை எதிர்ப்பதில் ஒற்றுமை இல்லாத எதிர்க்கட்சிகள் காணாமல் போக வெண்டிய காங்கிரசை மத்தியில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தப் போராடுகின்றன.

90 சீட்டுக்களைக் காங்கிரஸ் தாண்ட முடியாது. மம்தா,முலயாம்,நிதிஷ்.மாயாவதி,ஜெயலலிதா ஆகியோரின் தலைமையிலான மாநிலக் கட்சிகளும் காம்ரேடுகளும் 120 ஐத் தாண்ட வழியே இல்லை. உதிரிகள் 10க்குள்.

கணக்குப்போடுங்கள்:
மோதிக்கு எதிரான கட்சிகளின் மொத்த எண்ணிக்கையே 220 ஐ மையமாகக் கொள்ளும்போது மோதி அணி 300 பிளஸ் என்பதுதான் நிதர்சனம்.

இதைப் ’பல மாதங்களுக்கு முன்பே கணக்குப் போட்டுச் சொல்லியிருக்கிறேன்’ என்பதைத்தான் நமது வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.4.2014

Wednesday, April 16, 2014

வெற்றி நிச்சயம்!


அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
இந்தியா முழுவதிலும் காங்கிரஸின்பால் ஏற்பட்டிருக்கும் ’வெறுப்பே’ நரேந்திரமோதியின்பால் ’ஆதரவுப்பேரலை’ என மக்களை விருப்புக் கொள்ள வைத்திருக்கிறது என்பதுதான் அறிவுப் பூர்வமான உண்மை.

இதில்,நரேந்திர மோதியின்பால் தேசமெங்கும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பின் அளவை ஊடகங்கள் ஆட்டும், மாநில கட்சிகள் ஆகட்டும் குறிப்பாகத் தமிழ் நாட்டின் பி.ஜே.பி தலைவர்கள் ஆகட்டும் குறைத்தே மதிப்பீடுகள் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸின் குடும்பச் சர்வாதிகாரமும் ஊழல் மலிந்த,வெட்கமற்ற ஆட்சிச் சறுக்கலும்  நரேந்திர மோதியை மக்களின் நாயகனாக உயர்த்தி  இருக்கிறது.

அதற்கான தகுதித் தேர்வில் குஜராத்  மாநிலத்தை 12 ஆண்டுக்காலம் முழுமையாக ஆண்டு மக்களின் ஏகொபித்த ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார் அவர்.

நரேந்திர மோதியின் வெற்றி என்பது காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மற்றும் குடும்பச் சர்வாதிகாரச் சுரண்டலின் தோல்வி என்றுதான் அமையப்போகிறது.

சொல்லப்போனால் இந்தியா முழுவதிலும் உள்ள கட்சிகள்  ஊழலுக்கு எதிராக, நியாயமான நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்பதற்காக  ஓரணியில்  ஒன்றுபடவில்லை என்பதும் உண்மையில் காங்கிரஸுக்கு எதிரான அலையைத் தங்கள் ஓட்டு வங்கிக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்காக அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டுச் சுயநல நோக்கோடுதான் அணி சேர்ந்திருக்கின்றன என்பதும் வெட்கப்படவேண்டிய ஒன்று.

தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில்  நரேந்திர மோதியை மையப்படுத்தி பி.ஜே.பி தனித்து நின்றிருந்தால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி  மற்ற கட்சிகளைவிட அதிக வாக்குகள் பெற்றிருக்கும்.

ஆனால் இங்குள்ள பி.ஜே.பித் தலைவர்களின் சுய நலமும் பழக்கப்பட்ட அவர்களுடைய வாக்கு வங்கி குறித்தான அச்சமும்  மோதியை நம்புவதற்குப் பதிலாக மக்களின் வெறுப்புக்கு ஆட்பட்ட கட்சிகளின் தயவை நோக்கித் தவம் கொள்ள வைத்து மோதியின் தனிப்பட்ட செல்வாக்கைத் தடுத்திருக்கிறது. இதைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்தான் உணர முடியும்..

இதன் மூலம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த மோதியின் அலை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தடைபட்டுப்போனதுடன், கூட்டணிக்குள் குழப்பமும் நம்பகத்தனமை கெட்டும் மக்கள் ஆதரவு மேலும் வளரமுடியாமல் போயிருக்கிறது.

நரேந்திர மோதியை மட்டும் மையமாக்கி தமிழ்நாட்டு பி.ஜே.பி தனித்து நின்று தேர்தலில் அரைகூவல் விட்டிருந்தால் இன்று தமிழ்நாட்டுக் கட்சிகளிடம் மக்கள் கொண்டிருந்த வெறுப்புக்களும் தேசிய நீரோட்டத்தில் மக்கள் காட்டுகின்ற அக்கறையும் மெஜாரிட்டி ஓட்டுக்களாக மாறி இருக்கும்.

பிற கட்சித் தலைவர்களிடம் புரையோடிப் போயிருக்கும் பதவி ஆசை, தமிழக பி.ஜே.பித் தலைவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அதன் விளைவே இங்கு ஏற்பட்டிருக்கும் குழப்பல் கூட்டணி.

இதையும் மீறி தமிழ்நாட்டில் பி.ஜே.பி  வியப்பான வெற்றியை ஈட்டும் , மோதி என்ற மந்திரச் சொல்லால்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
16.4.2014

Wednesday, March 26, 2014

ஊழல் அரசியலின் உச்சக் கட்டம் (அரசியல் அரங்கம்:9)


’காங்கிரஸை அதன் மதச் சார்பற்ற கொள்கைக்காக மன்னிப்போம்” என்று கலைஞர் திடீரென்று இன்று (26.3.2014) சென்னை தேர்தல் பிரச்சார மேடையில்  அறிவித்துள்ளார்.

’நரேந்திர மோதி’என்ற மந்திரச் சொல் நாடெங்கிலும் மக்கள் மனதில் நாளுக்கு நாள் கவ்வத் தொடங்கி மோதியின் எதிர்ப்பாளர்கள் மற்றும் மோதி பிரதமராக வரக் கூடாது;குழப்பக் கூட்டு மூலமாவது தாங்கள் பிரதமாரகி விட வேண்டும்’ என்று பகல் கனவு காண்பவர்கள் எல்லோரும் தலை தொங்கிப்போய்,நாளுக்கு நாள் தங்களுடைய ஈன ஸ்வரத்தில் இளகிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸ் இல்லாத தி.மு.க கூட்டணிக்கு இருந்த பலமும் போய். அழகிரியால் இருக்கின்ற பலமும் குன்றிய நிலையில் அதன் வெற்றி மிக மிகக் குறுகிப்போய் விட்டது.

அ.தி.மு.க வுக்கோ தனித்து நிற்பதாலும், கம்யூனிஸ்டுகளைக் கை கழுவி விட்டதாலும்  ஆட்சி நிர்வாகம் குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவுவதாலும், கட்சிக்காரர்களிடையே கசப்பும் வெறுப்பும் அதிகரித்துள்ளதாலும் அதன் வாக்கு வங்கி சிறுத்துப் போய் இருக்கிறது.

அ.தி.மு.க அமைச்சர்களையும் கட்சி நிர்வாகிகளையும்  பதவிகளைக் காட்டி ’அடிமைகள் போல் ஆக்கி, பரப்பப்படும் ‘அம்மா புராணம்’ எதிர்மறையான விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். இதை, இந்தத் தேர்தல் மூலம் நாம் காணப் போகிறோம்.

ஆம் ஆத்மி கட்சி என்பது பிறந்ததும் செத்துப்போன குழந்தையாகி விட்டது.

“படைத்தவனே பறித்துக் கொண்டாண்டி’ என்ற பாட்டுக்கேற்ப உயர்ந்த லட்சியங்களைத்  தனது மாய்மால அரசியலுக்குப் பயன் படுத்தி, வெற்று ஆர்ப்பாட்டங்களில் மீடியாக்களில்  ஆரவாரம் செய்து காட்டி, அதன் மூலம் புது டில்லியில் படித்தவர்களையும் பாமரர்களையும் ஒரே தட்டில் வைத்து ஏமாற்றிய ’அரைவேக்காட்டு’ அரவிந்த் கெஜ்ரிவால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாலறுந்த நரியாக ஊளையிடப்போகிறார்.

நரேந்திர மோதியின் உறுதி மிக்க தலைமையை இந்தியாவின் பாமரன் முதல் படித்தவர்கள்வரை விரும்புவதால் அவருக்காகவே வாக்களிக்கும் மக்களின் உணர்வு அலை சுனாமியாக வீசப்போகிறது.

உட்கட்சிப் பூசல், உளுத்தர்களின் பதவிப் பித்து மற்றும் ஒவ்வாத கட்சிகளின் கட்சிகளின்  கோமாளித்தனக் கூட்டு இவற்றால் மோதிக்குச் சின்னச் சறுக்கல்போல் தோன்றினாலும் ‘மோதி’என்ற மந்திரச் சொல்லுக்காக கண்ணை மூடிக் கொண்டு தாமரைத் தடாகத்தில் குதிப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் கணக்குப் போடத்தெரியாதவர் அல்ல கலைஞர்.

அழகிரியால் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும்  சிதைவும் தமிழக மக்களிடையே மோதிக்கு ஏற்பட்டிருக்கும் பேராதரவுப் பேரலையும் தி.மு.கவை 3 ஆம் இடத்துக்குக் கொண்டுபோய் விடும் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டு விட்டது.

அதனால்தான்  காங்கிரஸ் உதவாக்கரை கட்சி என்று முடிவெடுத்து,மோதியின் கூட்டுக்காக திரை மறைவுத் தூதுகள் அனுப்பித் தோல்வியுற்று ‘சீச் சீ,இந்தப்பழம் புளிக்கும்’ என்ற நரியின் கூற்றாக பா.ஜா.க. மதச் சார்புக் கட்சியாக வர்ணித்தும் காங்கிரஸை மதச் சார்பற்ற கட்சியாக வர்ணித்தும்  தேர்தல் திரைப்பட வசனத்தை எழுதுகிறார்.

தேர்தலுக்குப் பிறகு முன்புபோல் காட்சி மற்றம் செய்து, ‘மத்தியில் ஆட்சிப் மாற்றத்தில் பங்கு வகிக்கும் கலைஞரின் கனவு, இனி நிறைவேற வாய்ப்பே இல்லை’ என்பதாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கேனும் தன் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நப்பாசை அவருக்குள் ‘நறுக்’கென்று இப்போது தோன்றி இருக்கிறது.

காங்கிரஸோ தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாஸிட் பறி போகும் நிலையில் இருக்கிறது.

கந்து வட்டிக்கடைக்காரன்போல் நாட்டைச் சுரண்டி, இந்திய ஜனங்களின் வயிற்றில் அடித்து, ’வரி வரி’யாக மக்கள் வசைபாடும் அளவுக்கு வரி வசூல் அறிஞரைப்போல் காட்டிக்கொண்ட வேட்டி கட்டிய தமிழன் ‘பானா சீனா, தேர்தல் அறிவிப்பு வரும்வரை வீர வசனம் பேசிக் கொண்டிருந்தார்.  எப்படியாவது தி.மு.வுடன் கூட்டணியை ஏற்படுத்தும் ராஜ தந்திர வேலைகள் அனைத்தும் செய்து, தன்னிடமிருந்த முனை மழுங்கிப் போன அத்தனை அஸ்திரங்களையும் எடுத்து எடுத்து வீசிப்பார்த்து வீழ்ந்தும் போனார்.

காங்கிரஸும் கடைசிவரை தமிழகத்தில் தி.மு.கவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஏதோ ஒரு வகையில் பேரம் படியாமல் போய், தேர்தலும் நெருங்கி விட்ட சூழ்நிலையில், தன் முயற்சியில் தலை தொங்கிப் போகாத வேதாளம் போல். குயுக்திகள் மூலம் எப்படியும் 100 சீட்டுக்களையாவது வெல்ல வேண்டும்’ என்று காங்கிரஸ் தப்புத்தாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காகச் சூடு.சுரணை,மானம், வெட்கம் இவற்றைத் தூக்கி எறிந்து விட்டுத் தன் பழைய கூட்டாளிகளையெல்லாம் விடாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் விளைவாகத்தான் கலைஞர்  ‘காங்கிரஸைசை அதன் மதச் சார்பற்ற கொள்கைக்காக மன்னிப்போம்’ என்கிறார்; இதற்கான துணிவு ஏற்கெனவே பலமுறை, தமிழர்களை முட்டாள்கள் ஆக்கிய அனுபவத்தில் இருந்துதான் தோன்றி இருக்கிறது.

இவரது திடீர் வசனத்தைக் கேட்கும்போது தமிழ்நாட்டில் கடைசித் திருப்பு முனையாக காங்கிரஸுக்குக் குறைந்த பட்சம் 5 தொகுதிகளைவிட்டுக் கொடுத்து, தனது கட்சிக்கும் கொஞ்சம் வாக்கு வங்கியைக் கூட்டிக் காட்டவும் காங்கிரஸ் டெபாசிட்டையாவது காப்பாற்றிக் கொண்டு தமிழ் நாட்டில் ‘கோமா நிலையில் இருந்து எழுந்து உட்கார்த்துக் கொள்ளும் வாய்ப்பைத் தரவுமான அயோக்கியத்தனமான கூட்டணி அரசியல் நிகழ்வுகளை நாம் கண்டாலும் வெட்கப்பட முடியாது.

’தி.மு.க வின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் கடைசி நிமிடம் வரைகூட மாறுதலுக்கு உட்பட்டது’ என்று கலைஞர் சும்மாவா சொல்லி இருப்பார்?.

அவர்தான் ’சொன்னதைச் செய்வார்;சொல்லாததையும் செய்பவர் ஆயிற்றே!

வடக்கில் காங்கிரஸ் ஊழலில் நாடறிந்தவர்களை மீண்டும் தனது வேட்பாளர்களாக அறிவித்திருப்பதும் மீண்டும் தி.மு.கவின் நட்பை நாடுவதும் ஒரே கோட்டில் உணர்த்தப்படும் ஊழல் அரசியலின் உச்சக் கட்டம்தான்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
26.3.2014

Tuesday, January 14, 2014

பொங்கலின் பெருமை




பொங்கலின் பெருமையை உணர்ந்திங்கு
போற்றிக் கருதிக் கொண் டாடி
எங்கும் தமிழர்கள் நிமிர் நடையில்
இவ்வுல காண்டிட வாழ்த்து கின்றேன்!.

ஏருக்குப் பின்னே தான்உலகு;
ஏரில்லை என்றால் ஏதுணவு?
பாருக்கு இதனைப் பளிச்சென்று
பகன்றவன் வள்ளுவப் பெருந்தகையோன்!

பொங்கல் என்பது ஏர்உழவின்
பொய்யா நிலைக்கு அருளுகின்ற
செங்கதிர் தன்னை, நன்றியுடன்
செந்தமிழ் மக்கள் வணங்கும் விழா.

நன்றிக்கு வித்து நல்லொழுக்கம்;
நானிலத்தில் அது, நம்வழக்கம்;
என்றும் எதிலும் இம்மண்ணில்
இன்னுயிர் மேலாய்ப் போற்றுகின்றோம்!

அதனால் தமிழனின் .அடையாளம்
அகிலம் முழுதும் நிலைத்திருக்க
உதவும் காரணி பொங்கல் என
உலகம் முழுவதும் போற்றுகின்றோம்!

உழவில் லாமல் உலகில்லை;
உலகின் முதல் தொழில் விவசாயம்;
உழவன் உலகின் எஜமானன்;
உண்மை: உழவன் தமிழ்க் குடிதான்!

அறுவடை முடிவில் நோன்பெடுத்து
ஆதவன் கருணையை உலகறிய
இறை நினைவோடு வணங்குவது
என்றும் தமிழர் பண்பாடு!

தைத் திருநாளை நம்முன்னோர்
தமிழரின் சிறந்த நோன்பாக
வைத்தனர்;அதுதான் தைப்பொங்கல்;
வாழ்த்திடுவோம் இதை நெஞ்சார!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.1.2014

Friday, January 3, 2014

பரிதாபத்துக்குரிய மன்மோகன் சிங்


அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
 
‘செத்தவன் கையில் வெத்திலையைக் கொடுத்தது போல்’என்ற ஒரு சொலவடை நம் நாட்டில் உண்டு.

‘அது எப்படி இருக்கும்?’ என்பதை இன்று (3.1.2014) பிரதமர் மன் மோகன்சிங்,
புது டில்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியைத் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பார்த்தவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

அபத்தமும் அருவெறுப்பும்  உண்மை என்பது கடுகளவேனும் இல்லாததுமான  பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின்  இந்தப் பேட்டி,  தலைக் குனிவுமிக்க காங்கிரஸ் பிரதமரின் பரிதாப நிலையையும் அவமானத்துக்குச் சற்றும் வெட்கப்படாத  சோனியா அவர்களின் தலையிலான காங்கிரஸின் சொரூபத்தையும்  உலகம் முழுவதும் இன்று ஒளி பரப்பி இருக்கின்றது.

நிருபர்கள் முன்னிலையில் பிரதமர் மன் மோகன் சிங் அவர்கள் பேட்டி என்ற பெயரில் திருவாய்மலர்ந்த  அபத்தங்களின் சாராம்சம் வருமாறு:

1.ராகுல் பிரதமராக இருப்பதற்கு முழுத் தகுதி
   படைத்திருக்கிறார்.

2. தான் மூன்றாவது முறையாக இருக்க விரும்பவில்லை.

3.எனது ஆட்சியில் சிறப்பான முடிவுகள் எடுக்கப் பட்டன;
  சோனியா தனது தலைமையில் சிறப்பான நிர்வாகம்
  நடப்பதற்கு திறமையான  ஆலோசனைகளை வழங்கினார்.

4.பிரதமர் பதவியில் முழு நிறைவோடு
  செயல்பட்டிருக்கிறேன்: யாரும் தனக்கு எந்த
  வகையிலும் நிர்ப்பந்தம் தரவில்லை.

5.பிரதமர் பதவிலிருந்து ராஜினாமா செய்யும்படி தன்னை
  யாரும் வற்புறுத்தவில்லை.

6.வரும்நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய
  முன்னணியின் சார்பிலேயே பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

7.மோதி பிரதமர் ஆக முடியாது. ஒருவேளை மோதி
   பிரதமராகி  விட்டால் நாடு மிகப்பெரும் பேரழிவைச்
   சந்திக்கும்.

இந்த அபத்தங்களில் ஒன்று கூட யாதார்த்த நிலைக்குப்
பொருந்துவதாக  இல்லை, ராகுலை ஐக்கிய முன்னணியின்பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப் போகும்  அவலமொன்றைத்தவிர.

ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும் ராகுலைப் புகழ்ந்து அவரை இப்போதே பிரதமராக அறிவிக்கச் செய்யும் தந்திரத்தையே முன் வைப்பதாகவும் தான் அவரது இந்தப்பேட்டி இருக்கிறது.

‘கடந்த ஆட்சி காலத் தோல்விகளுக்கும் ஊழல்களுக்கும் ஊழல் குற்றச் சாட்டுகளுக்கும் ராகுலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பே இல்லை’   என்பதைக் காட்டுவதற்காகவும் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் மக்கள் முன் வாக்குக் கேட்கவும்; ராகுலை மக்கள் நலச் சிந்தனையாளர்போல் காட்டிக் கொள்ளவுமான உத்தியில் தன்னைப் பலி கடாவாக முன் நிறுத்திக் கொண்டுள்ளார்.

‘முழு நிறைவோடு பிரதமராக இருந்தவர், பிறகு ஏன் மூன்றாவது முறையாகப் பிரதமராக இருக்க விரும்பவில்லை?

நாடு இன்று எல்லாவகையிலும் பின்னோக்கிச் சென்று விட்டதும் ஊழல் மலிந்து போய், நாடே நாறி போய்க் கிடந்ததும்தான் சிறப்பான நிர்வாகமென்று கொஞ்சமும்வெட்கமின்றித் தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்கிற  அவலத்தில் முகம் சுருண்டு போய்க் காட்சி அளிக்கின்றார்.

‘தனது ஆட்சியின் அவலங்களுக்கும் கேவலமான ஆட்சி நிர்வாகத்துக்கும் சோனியாவோ ராகுலோ காரணமில்லை’ என்று மக்கள் நம்ப வேண்டுமென்பதற்காக  ஆட்டுவிக்கப்படும் கூத்தாட்டுப்பொம்மைபோல் இப்போதோ தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும்  கேவலத்தில், தான் அடைந்த பதவி சுகத்துக்கு விசுவாசம் காட்டிக் கொள்பவராகத்தான்  தயாராகிக் கொண்டிருக்கிறார்’என்பதை அவரதுபேட்டின் பின்புலம் நமக்கு உணர்த்துகின்றது..

உண்மையிலேயே செத்தவன் கையில் வெத்திலையைக் கொடுத்த நிலையாகத்தான்  அவரது பேட்டியும் அவரது முக பாவமும்  இருந்தது.

‘புன்னகைத்துக்கூடப்  பேட்டி அளிக்கும் நிலையில் அவர் இல்லை’     என்பதற்கும்   ‘முகம் இறுக்கமாக, மனச்சாட்சியே இல்லாமல்தான் பேட்டிகொடுக்கிறோம்’ என்ற  உணர்வு அவரைக் கொன்று சிதைத்துக் கொண்டிருக்கிறது’ என்பதற்கும் நாடே கவனித்துக்  கொண்டிருந்த அவரது அவரது  பரிதாபத்துக்குரிய பேட்டி  சாட்சி  கூறியது உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை.

பாவம்.
‘கஷ்டப்பட்டு பத்தாண்டுகளாகப் பாரம் சுமந்தவர், இனி,  தான் பாரம் சுமக்கப் போவதில்லை’ என்பதை இப்படியா, காட்டிக் கொள்ள வேண்டும்?


இவண்-
கிருஷ்ணன்பாலா
3.1.2014

Monday, December 30, 2013

அரசியல் அரங்கம்:8

படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவியர்,இணையத்தில் உலா வரும் எண்ணிக்கை மிகுந்த சமூக அக்கறையாளர்கள்  இவர்களுக்கெல்லாம் ஜாதி, மதம்,இன உணர்வுகளுக்கு அப்பால் ’இந்தியாவின்  எதிர்காலம் வளமாகவும் வலிமையாகவும்  இருக்க  வேண்டும்’ என்ற எண்ணமே மிகுந்துள்ளது.

அதை உருவாக்கித் தரக்கூடிய திறமைமிக்க பிரதமராக நரேந்திர மோதியே வர வேண்டும்’ என்ற  தீர்மானம் அவர்களின் மனதில் படிந்து விட்டது.

எனவே, மோதியின் தலைமை இந்தியாவுக்கு அமைய வேண்டுமென்ற உறுதியைக் கொண்ட கட்சிகளை மட்டுமே மோதியின் உள்ளரங்கு அறிஞர் குழு கூட்டணி வைக்க ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், கூட்டணி பற்றிய கொள்கை முடிவுகளுக்குக் கட்சியின் நிர்ப்பந்தமோ கட்சித் தலைவர்களின் அபிலாஷைகளோ எடுபட முடியாது போகலாம்.

காரணம்,ஆம் ஆத்மி பார்ட்டி எப்படி படித்தவர்களையும் நடுத்தர வர்க்கத்தையும் ஈர்த்து, ஓட்டு வங்கியைக் குவித்ததோ அப்படி  இம்முறை நரேந்திர மோதியின் தலைமை இந்தியாவின் இளைஞர்களையும் படித்தவர்களையும் ஈர்க்கும்  வகையில் இந்த நாடாளுமன்றத்தேர்தல் அமைய உள்ளதால் நரேந்திர மோதியின் ThinkTank எனப்படும்  அறிவார்ந்த வட்டம் அதற்கேற்ப தமிழகத்தில் கூட்டணியை உருவாக்கும்   வியூகத்தை வகுக்கப்போகிறது.

இதில் பெரியண்ணன் வேலைகளெல்லாம் எடுபடப்போவதில்லை.

அதேபோல் தான் பெரிய ஓட்டு வங்கியை வைத்திருப்பதால் எனக்கு இவ்வளவு சீட் கொடுத்தால்தான் உங்களோடு கூட்டணி என்று தலைக்கனம் காட்டும் கட்சிகள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்.

நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மோதி கூட்டணிக்கு ஒப்புக் கொண்டால்  ‘வாஜ்பேயி பட்ட அவமானத்தைத்தான் படநேரிடும்’ என்பது மோதியின் Think Tank க்குத் தெரிந்தே இருக்கிறது.

-கிருஷ்ணன்பாலா
30.12.2013

Sunday, December 29, 2013

அரசியல் சதுரங்கம்-7

டில்லி மாநில சட்ட மன்றத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம்  என்பது, இதுவரை மக்களை வெறுப்பும் கோபமும் விரக்தியும் கொள்ள வைத்த காங்கிரஸின் ஊழல் ஆட்சிக்கு எதிரான  வாக்குக்களே அன்றி ‘ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்கக் கிடைத்த வாக்குகள் அல்ல. எனினும் ஜனநாயத்தின் நிர்பந்ததம் அதை ஆட்சிக் கட்டில் ஏற வைத்திருக்கிறது.

அதே சமயம் பாரதீய ஜனதா கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது  அக்கட்சி மீதும்  டில்லி வாக்காளர்கள் முழு நம்பிக்கை கொள்ளவில்லை என்பதன்  எதிரொலி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

’பா.ஜ.க. என்பது புனிமான கட்சி  அல்ல’ என்ற  உண்மையானது, கடந்த காலங்களில் நாட்டில் உணர்த்தப்பட்டுள்ளதுதான்.

ஆனால்,மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும்  தேசநலனையும் முக்கியமாகக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக நிர்வகித்துக் காட்டிய  நரேந்திர மோதியின் திறமையில், தெளிந்த லட்சியத்தில் இந்திய மக்களில் பெரும்பான்மையோர்     ‘அவரே பாரதப் பிரதமராகும் தகுதி படைத்தவர்’ என்று  அணிதிரளத் தொடங்கியிருக்கின்றார்கள்.

எடியூரப்பா  போன்ற இரக்கமற்ற பதவிப் பித்தர்களின்  ஊழல் நடத்தைகளையும் பொறுத்துக் கொண்டு நரேந்திர மோதியின் பின்னால் அணி வகுத்துள்ளார்களென்றால் அது நரேந்திர மோதியின் தனிப்பட்ட  அரசியல் ஒழுக்கமும் அரசியல் வெற்றியைக் கொண்டு பதவி மூலம் துணிவோடு மக்கள் பணி செய்கின்ற பண்பும்தான் காரணம்.

குஜராத் முதல்வராக இருந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய சாதனைகள் நிரூபணமாகி,  நரேந்திர மோதி அவர்களின் தலைமையின்கீழ், இந்தியா ஊழல் அற்ற நிர்வாகத்தையும் இந்தியாவின் கௌரவத்தையும் அதன் இறையாண்மையின் பாதுகாப்பையும்,  தொழில் முன்னேற்றத்தையும் நாடு காணும்’என்ற ஆழமான நம்பிக்கை இன்று மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது.

எனினும் ‘மோதி அலை’ தேசமெங்கும்  வீசிக் கொண்டிருந்த நிலையில் தலை நகர் டில்லியில் மட்டும் சற்று சிவப்புக் கோடு போடப்பட்டிருக்கிறது.

இதுவும்கூட நன்மைக்கே.

இதன் மூலம் இரண்டு உண்மைகளை நாம் உணர வேண்டும்.

ஒன்று:
கவர்ச்சியான வாக்குறுதிகளும்; மாய்மால அறிக்கைகளும்
மேடை வசனங்களுமாக, இதுவரை ‘தேர்தல்  பிரகடனம்’ என்ற பெயரில் உதார் விட்டுக்கொண்டிருந்த  தேசியக் கட்சிகளுக்கும்  மாநிலக் கட்சிகளுக்கும்  படித்தவர்களும்  விஷயம் தெரிந்தவர்களுமாக
அதிகம் வாழும் டில்லி மக்கள் சூட்டுக்கோலை எடுத்து சரியான சூடு போட்டிருக்கிறார்கள்.

பித்தலாட்டமான அரசியலுக்கும் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுக்கும் டில்லி மக்கள்  ஓட்டுப் போடவில்லை;வேட்டுப் போட்டிருக்கின்றார்கள்.


இதன் எதிரொலி, இனி நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்குமென்பதில் ஐயமில்லை.

இரண்டு:
மோதி அலை நாடெங்கும் பேரலையாக வீசிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் போதிய மெஜாரிட்டியை, டில்லியில்  பா.ஜ,க. பெறத்தவறியதால், தனக்குக் கிடைத்திருக்கும் அதிக இடங்களைக் கணக்கில் கொள்ளாது, எதிர்க் கட்சியிலிருக்கும் எம்.எல்.ஏக்களைக் குதிரைப் பேரத்தில் இறங்காது ஜனநாயகத்தின் மேலான கண்ணியத்தைக் காக்கும் விதத்தில்
‘தேவையான மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் தான் ஆட்சி அமைக்க இயலாது’ என  அது அறிவித்திருப்பது.

இதன் மூலம்,நரேந்திர மோதியின் நம்பிக்கைமிக்க நல்லாட்சிக்கு அட்சாரமாக, டில்லியில் குறுக்கு வழியில் சென்று ஆட்சி அமைக்க முன் வராதது  இங்கு கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற  ஜன நாயக உயர்பண்புகளைக் கட்டிக்காத்து நரேந்திர மோதி தலைமையில் அமையப் போகும் நாளைய மத்திய ஆட்சி நீண்ட பாரம்பரியத்தை  கட்டிக்காக்கும் என்பதற்கு உத்தரவாதமாக, கட்டுப்பாடும் ஒழுக்கமும் பண்பட்ட ஜன நாயகப் பெருமையும்  நிறைந்த  நிலைப்பாட்டைக் கையகப்படுத்திக் காட்டும்  துணிவை அது வெளிப்படுத்தியிருக்கிறது.

அரசியல் அதிகாரம், பதவி  மோகம் இந்த இரண்டும்தான் ஊழலின் ஊற்றுக் கண்.

அதிகாரத்துக்காகவும் பதவிக்காகவும்  எந்தப் பித்தலாட்டத்தையும் செய்யத் துணிந்த அரசியல் நாடகங்களைத்தான் இதுவரை நாடு கண்டு வந்தது.

இப்போதுதான் ’முதன் முறையாக,போதிய மெஜாரிட்டி இன்றி,டில்லியில் ஆட்சி அமைக்க நாங்கள் தயாராக இல்லை’ என்ற குரல் இந்தியத் தலை நகரில் ஒலித்திருக்கிறது. அதுவும் பா.ஜ.க.விடமிருந்து.

ஆரோக்கியமான அவசியமான,அதிசயமான மாற்றம்.

இப் பண்பு வளர்ந்தால், அரசியல் கட்சிகளிடம் தொடர்ந்தால் ஊழல் ஒழிப்பின் பாதிக் கட்டத்தை நாடு கடந்து விட்டதாகிவிடும்.

-கிருஷ்ணன்பாலா
29.12.2013

Saturday, December 28, 2013

அரவிந்த் கெஜ்ரிவால் லட்சியம் வெல்க!



உண்மையிலேயே மைனாரிட்டிதான்.

ஊழலை ஒழிக்கக் குரல்கொடுப்பதில்; நேர்மையான ஆட்சியைத் தரவேண்டும் என்பதை மக்கள் முன்னிலையில் ஓங்கி ஒலிப்பதில். எளிமையாக இருந்து மக்கள் சேவை செய்வோம் என்று சபதம் செய்வதில்.

உண்மையிலேயே மைனாரிட்டிதான்.
அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி பார்ட்டி சகாக்களும்.
 

‘கேஜ்ரிவாலின் சபதத்தைத் தோற்கடிப்போம்’ என்று இன்று காங்கிரஸும் சொல்லமுடியாது;பி.ஜே.பி.யும் சொல்ல முடியாது. நாட்டுக்கு இன்று தேவைப்படும் செயல்திட்டங்களைத்தான்  அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது கவர்ச்சியான வாக்குறுதிகளா? உண்மையிலேயே இந்திய அரசியலரங்கை வியப்பிலாழ்த்தும் வாக்குறுதிகளா?

அரவிந்த் கேஜ்ரிவால் டில்லியின் புதிய முதல்வரகாப் பதவி ஏற்றுக் கொண்டு நிகழ்த்திய உறுதிமொழிகள் நிறைவேற்றப் படுவதைப் பொறுத்து, வரும்நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெறப்போகும் கட்சியின் வாக்குறுதிகளின் எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே இருக்கும்.

போதிய மெஜாரிட்டி இல்லாமலேயே,அதுவும்தன்னை வலிய வந்து ஆதரிக்கும ’காங்கிரஸின் ஊழலை விசாரிப்போம்’ என்று அறிவித்து விட்டு, மன உறுதியுடன் டில்லியின் முதல்வராகாப் பொறுப்பேற்றிருக்கும் அரவிந்த கேஜ்ரிவாலை வாழ்த்துவோம்:

எடுத்துக் கொண்ட லட்சியத்தில் அவர் வெல்லட்டும்!

Wednesday, December 25, 2013

மோதியின் முன் நிற்கும் பிரச்சினை!




அறிவார்ந்த நண்பர்களே,

ஆம் ஆத்மி கட்சியின் அறிவிப்புக்களும் அதிகாரப்பற்றும்  ‘அரசியலரங்கில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்பதை விட ‘இருக்கின்ற கட்சிகளை ஒழிக்க வேண்டுமென்பதாகவே இருக்கிறது.

நடைமுறையில்இப்போதைய சூழ்நிலையில் நிறைவேற்ற முடியாத அறிவிப்புக்களை அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு முன் வெளியிடுவது ஒரு அதிரடி விளம்பரமாகவும் தன்னை எப்படியும் மக்கள் மனதில்  உயரத்தில் வைக்கின்ற உத்தியாகவுமிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் முன்வரைவுகள் வரவேற்கப்படக் கூடியவை என்றாலும் அவற்றை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளையும் அவர் உணர்ந்து கொண்டு  சிந்திப்பதாகத்  தெரியவில்லை.

இதுவரை, இந்தியாவை ஆண்ட காங்கிரஸாகட்டும் சரி; சிறிது காலம் ஆண்ட பி.ஜே.பியாகட்டும் ஊழலை ஒழித்து நேர்மையான நிர்வாகத்தைத் தர முடியவில்லை.

அரசியலே மாசுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழ்நிலையில், ஒரு வாஜ்பேய் அல்லது ஒரு அரவிந்த கெஜ்ரிவால் நினைத்தாலும் ஊழலற்ற நிர்வாகத்தைத் தர முடியாது.

மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்தலில் நிற்பவர்களும் வெல்பவர்களும் ஊழலுக்கு எதிரானவர்களாக இருந்தாலொழிய ஆட்சியில், நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது இயலாது.

ஆகவே, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோதிக்கு இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருப்பதால் அவர், தனது வேட்பாளர்களாக நிற்பவர்களை ஒழுக்கமும் உயர் நோக்கங்களும் உள்ளவர்களாகவும்  நிஜமாகவே மாற்றத்தைக் கொண்டு வருவதில்  லட்சியமுள்ளவர்களாகவும்இருப்பவர்களையே தேர்தலில் நிற்க வைக்க உறுதி கொள்ள வேண்டும்.

பதவி சுகத்தை அனுபவிப்பதில் தங்கள் உரிமையை நிலைநாட்ட முனைவோரை ஒதுக்கி வைக்கும் துணிவை அவர் கையாள வேண்டும்.

தேசத்தைப் புனர் அமைப்பதில் ஆர்வமும் வேட்கையுமுள்ளோரை  கட்சித் தகுதிகளைப் பார்க்காமல் தனிப்பட்ட யோக்கியதாம்சங்களின் அடிப்படையில் தனது வேட்பாளராக நியமிப்பாரானால்,மிகப்பெரும்வெற்றியைத் தர மக்கள் தயாராக  இருக்கின்றார்கள்.

இதுதான் மோதியின் முன் நிற்கும் இன்றைய முக்கியப் பிரச்சினை.

இதில் மாற்றுக் கருத்துள்ளோர் உண்மையில் மோதியின் ஆதரவாளராக இருக்க முடியாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.12.2013

அரசியல் சதுரங்கம்:6

ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைக்க விடாமல்  காங்கிரஸ் பின் வாங்குவதாக இன்றிரவுச் செய்திகள் பரபரப்புக் காட்டுகின்றன.

பாவம், அரவிந்த கெஜ்ரிவால்.

தலையும் புரியவில்லை;வாலும்புரியவில்லை.

‘அரசியலில் கோஷமிடுவது வேறு; வேஷமிடுவது வேறு’ என்ற அரசியல்
பால பாடத்தைக் காங்கிரசிடமிருந்து கற்றுக் கொண்டு, கர்ஜிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்.

இதன் மூலம் அரசியல் லாபம் பி.ஜே,பி.க்குத்தான் என்பது போகப் போகப்புரியும்:காங்கிரசுக்கு

காங்கிரஸைக் கை கழுவத் துடிக்கும் பல முன்னணித் தலைவர்களுக்கும் காங்கிரஸின் கயமைத் தனமான  அரசியல் கணக்கைக் கண்டித்துக் காறி உமிழ்ந்து வெளியேற வலிய முன்வந்து பாதை அமைக்கின்றது போலும்?

-கிருஷ்ணன்பாலா
25.12.2013

Tuesday, December 24, 2013

நடுத்தர மக்களின் மனச் சாட்சி!




ஆம் ஆத்மி கட்சி என்பது ஒரு விபத்தன்று; அது படித்த நடுத்தர வர்க்கத்தின் மனச்சாட்சி; நியாயத்தின் நடுகல்.

வீரமும் தீரமும் மிக்க இளைஞர்களை விழித்து நோக்கிய சுவாமி விவேகாந்தரின் வேட்கைக் கனவு.

இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ்-பிஜே.பி.என்று இரு பிளவுகளில்தான்  இந்திய வாக்காளர்கள் பற்று வைத்துள்ளனர்.

ஆனால், உண்மையான தேசப்பற்றும் 'மக்களுக்கு உண்மையாகவே அரசியல்பணி புரிய வேண்டும்' என்ற லட்சியமும் அதிகார அரசியலுக்கு அஞ்சாமல் துணிந்து எதிர்த்து நிற்கும் உறுதியும் கொண்ட ஒருவர் முன் வருவாரானால்  அவர்பின்னே அணிதிரள நடுத்தர வர்க்கம் தயாராக இருக்கிறது' என்பதற்கு ஆம் ஆத்மி கட்சியும் அதன் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஓர் எடுத்துக் க்காட்டு.

‘அரவிந்த கேஜ்ரிவால் எப்படி ஆட்சி செய்வார் பார்ப்போம்?’ என்று கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு, தூங்காமல் இருப்பதை விட,  அவர் எப்படியும் தனது லட்சியங்களையும் உறுதி மொழிகளையும் நிறைவேற்றும் வகையில் ஆட்சி புரிய ஒத்துழைப்பது காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. கட்சிகளின் அரசியல்கடமை.

அரவிந்த் கெஜ்ரிவால் தோற்றுப் போவாரானால், அது அவருடைய தோல்வியாக இருக்க முடியாது; நமது நாட்டின் ஊழல் அரசியல்வாதிகளின் வெற்றியாகவே அது பார்க்கப்படும்.

அத்தகைய தோல்வியில் பி.ஜே.பி. யோ காங்கிரஸோ குளிர்காய முற்பட்டால் இந்த நாட்டுக்கு விமோசனம் என்பது இந்த நூற்றாண்டில் இல்லை என்றாகி விடும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.12.2013


Thursday, December 19, 2013

ரகசியங்களின் ராஜ்யம்!

தேவ்யானி கோப்ராகடே கைது விவகாரத்தில் வெளியே தெரிந்த விஷயங்களும் விவாதங்களும் மிக மிகச் சொற்பம்.

வெளியே தெரியாத விஷயங்களும் அலசி ஆராயத் தக்க விஷயங்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் இணையதளங்களிலும் மிக அதிகம்; அவை பல்வேறு வகையில் உலா வருகின்றன.

உண்மைகள் உண்மையாகவே  வெளிவருமானால் தேவ்யானியின் பின்புலம்  காங்கிரஸ் பெரும்புள்ளிகளின் கரும்புள்ளியாகவே வெளிப்படும் என்பது மட்டும் உணரப்படுகிறது.

இவரைப் பற்றிய எனது கட்டுரையைப் படித்த வாசகர் ஒருவர் ’தேவ்யானி கைதுக்குக் காரணமான சங்கீதா அமெரிக்க உளவுத்துறையின் கைப்பாவை என்று கருத இடமிருக்கிறது’ என்று கூறி அது பற்றிய Link ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார்.

அப்படியானால் இரண்டு கேள்விகள் நம்முன் எழுகின்றன.:

1. சங்கீதா அமெரிக்க உளவுத்துறையின் கைப்பாவை என்றால் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தச் சென்ற தேவ்யானி கோபரகடே IFS யார்?அவரும் மறைமுகமாக  குருவிபோல் செயல்பட்டிருப்பவர்தானே?

2,சங்கீதாவைத் தங்கள் உளவாளியாகப் பயன் படுத்திய அமெரிக்க அரசு  சங்கீதாவை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்த தேவ்யானியைக் கைது செய்து நிலைமையை மோசம் அடையச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இதற்கிடையில்-
புதிதாகக் தகவல் ஒன்றை எனது நீண்டகால நண்பரும் முது பெரும்பத்திரிகையாளருமான ஒருவர்  என்னிடம்சொன்னார். அது:

கோபர்கடே என்று மகாராஷ்ட்ராவில் சுமார் 25,30  ஆண்டுகளுக்கு முன் குடியரசுக் கட்சியின் எம்.பி யாக இருந்தார். அவர் ஒரு தலித்.

அவரிடம் அளவுக்கு மிஞ்சிய  சொத்துக்கள் சேர்ந்து விட்டன. அவை, பணமாகவும் அசையாச் சொத்துக்களாகவும்  இருந்தன..

தனது மரணத்தின்போது அத்தனை சொத்துக்களையும் கோப்ராகடேயின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கவும்  உயர் பதவிகளை அடையவும் ஒரு Trustஐ ஏற்படுத்தி, அதன் உதவியை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள வகை செய்திருக்கிறார்.

அந்த Trustன்  முழு உதவியால் படித்து ஒரு IFS அதிகாரியாக ஆனவர்தான் தேவ்யானி கோபராகடே, மறைந்த குடியரசுக்கட்சி எம்.பி,கோபர்கடேயின் குடும்ப உறவினர்.

இப்போதுள்ள உள்துறை மத்திய  அமைச்சரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான திரு சுஷில்குமார் ஷிண்டே தலித் என்பதுடன் மறைந்த முன்னாள் முன்னாள் எம்.பி கோபர்கடேயின் நெருங்கிய சகா;முன்னாள்குடியரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்து காங்கிரஸுக்கு வந்தவர்.;வந்தவர் 30 ஆண்டுகளுக்குள் சோனியாவின் முன்னணி மூத்த தலைவராக முன்னேற்றம்கண்டு விட்டவர்.

தேவ்யானியின் தந்தை அண்மையில் ஓய்வு பெற்ற  ஒரு IAS அதிகாரி. மறைந்த குடியரசுக் கட்சி எம்.பி கோபர்கடேயின் உறவினர்.இப்போது,காங்கிரஸ் சார்பில் ராஜ்ய சபா எம்.பி ஆவது என்ற லட்சியத்துடன்  காய்களை நகர்த்தி வருபவர்;
சுஷில்குமார் ஷிண்டேவின் பூரண மதிப்பு பெற்றவர்.

இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர்: இந்திய அரசியல் சட்ட அமைப்புக்  குழுவின் தூண் டாக்டர் அம்பேத்காரின் பெயரனும் அரசியல் காரணங்களுக்காகக் காங்கிரஸின் செல்லப் பிள்ளையுமான  பிரகாஷ் அம்பேத்கார்.

இப்போது சுற்றி வளைத்துக் கணக்குப் போட்டுப் பாருங்கள்:

தேவ்யானி கோபராகடேவுக்காக சகலவிதமான  ஆயுதங்களையும் எடுத்துக் கையாளத் துடிக்கும் காங்கிரசின் உள் நோக்கம் விளங்கும்.

அதுசரி, ரகசியங்களின் ராஜ்யமான பலநூறு கோடி கோபர்கடேயின் Trust இப்போது எவருடைய கைகளுக்குள் இருக்கிறதோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.12.2013

தேவ்யானி: காங்கிரஸின் கயமை அரசியல்


அமெரிக்காவுக்கான  இந்தியத் தூதரகத்தின்  துணைத் தூதர் திருமதி ‘தேவ்யானி கோப்ராகடேயை  ‘கோப்ரகடே’ என்று சிலர் உச்சரிக்கின்றார்கள்;  
நான் ‘தேவ்யானி கோப்’ரா’கடே’ என்று  விளித்திருந்தேன்.

இப்பொழுது இவரைச் சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களும் நடந்துள்ள  விஷயங்களும்  விஷத்தன்மைமிக்க ‘கோப்ரா’வின் கொத்தலாகவே இருப்பதால், இவரை ’கோப்ரா’கடே என்று நான் விளித்தது சரியாகத்தான் இருக்கிறது..

’தேவ்யானி கோப்ராகடே’  செய்த குற்றங்களின் அடிப்படையில் அவரை அமெரிக்கக் காவல்துறையினர், நடு ரோட்டில் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றது, இந்தியாவுக்கு அமெரிக்கா இழைத்த, தாங்கிக் கொள்ள முடியாத அவமான’மென  இங்குள்ள தேசபக்தர்கள் பலரும் பலவிதத்தில் பலவிதத்தில் பாசாங்குக் கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் ’தேவ்யானி செய்த மாபெரும்  குற்றங்கள் பின் தள்ளப்பட்டு, அவரது பதவியின் முக்கியத்துவம்  மட்டுமே பேசப்படும் அவலம் இங்கே அரங்கேற்றப்பட்டிருக்கிறது’ என்பதை முன்பே எழுதி இருந்தேன்.

’தேவ்யானி, தனது பணிப் பெண்னை அமெரிக்காவுக்கு அழைத்துச்  
சென்றதில் அமெரிக்காவுக்கான ’விசா’ விதிகளை  மீறி இருக்கிறார்’  என்பதும்  ‘அவர் அக்’கறை’யோடு அழைத்துச் சென்ற பணிப்பெண்ணை  உரிய சம்பளம் தராமல் அரட்டி, மிரட்டி வேலை வாங்கி இருக்கிறார்’ என்பதும் அமெரிக்கக் காவல் துறையினரிடம் அளிக்கப்பட்டிருக்கும் புகார்.

அதனால்தான், அப்பணிப்பெண் அங்கு திடீரென்று காணாமல்போய், காவல் துறையிடம் புகார் செய்திருக்கிறார் என்பது இப்போது தெரிய வருகிறது.

‘குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும்’ என்பதுதான் தர்மத்தின் தீர்ப்பாக இருக்க முடியும்.

ஆனால், ’இங்கு தர்மமும் நியாயமும் தட்டி வைக்கப்பட்டு, ஒரு இந்தியத் தூதரக அதிகாரியை நடு ரோட்டில் வைத்துக் கைது செய்ததன்மூலம்  இந்தியாவின் கௌரவத்தையும் தன்மானத்தையும்  கேவலம் செய்து விட்டது அமெரிக்கா; அதற்கு அது மன்னிப்புக் கோர வேண்டும்; அந்த அதிகாரிமீதுள்ள குற்றப் புகாரை வாபஸ் செய்து குற்றங்களிலிருந்து  விடுதலை செய்ய வேண்டும்’ என்கிறது சோனியாவின் காங்கிரஸ் அரசு.

‘தேவ்யானிக்கு எதிரான சதிச்செயல்களுக்கு அமெரிக்கா துணைபோயிருக்கிறது’என்ற பயங்கரமான குற்றச்சாட்டை இபொழுது இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் விவகாரமாக்கி இருக்கிறார்.

இக்குற்றச் சாட்டைக் கடைசிவரை நின்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தனக்குள்ளது என்பதை உணர்ந்துதான் இப்படிப் பேசி இருப்பார் என்று நம்பலாமா?
 
‘அமெரிக்கா,என்ன மாதிரியான  குற்றங்களை, ‘அமெரிக்கா-இந்திய தூதரகச் சட்டவிதி’களை மீறிச் செய்திருக்கிறது?  ஒரு IFS  அதிகாரியாக இருந்து கொண்டு தேவ்யானி கோபராகடே என்ன மாதிரியான  ’விசா’ மோசடிகளைச் செய்திருக்கிறார்?

என்ற -

இந்த இரண்டு தரப்பு விஷயங்களையும் ஆராயாது’ தேவ்யானியை நடுரோட்டில் விலங்கிட்டு அழைத்துச் சென்றதும் அவரது ஆடைகளைக் களைந்து சோதனை இட்டதும் இந்தியாவுக்குப் பெருத்த அவமானம்; இதைச் செய்த அமெரிக்கா மன்னிப்புக் கோர வேண்டும்’  என்று பார்லிமெண்ட்வரை  பலரையும் பேசவைத்து, இந்தியாவின் மானத்தைக் காப்பதில் அமெரிக்காவை மிகப்பயங்கரமான எதிரிபோல் காட்டத் துணிந்திருக்கிறது , சோனியாவின் சுட்டு விரலுக்குச் சுழலும் மன்மோகன் அரசு.

இது ஒரு அரசியல்மோசடிக்கான நாடகமே அன்றி, நிஜமான இந்தியக் கௌரவத்துக்கான எழுச்சி அல்ல.

‘தேவ்யானிக்கு நடு ரோட்டில் கைவிலங்கிடவில்லை’ என்பதையும் 
அவர் உரிய முறையில் கௌரவமாகத்தான் நடத்தப்பட்டிருக்கின்றார்’ என்பதையும்  அமெரிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரி இப்பொழுது கூறி இருக்கிறார்.

எனவே,

அமெரிக்காவில்நடந்தது என்ன? என்பதை முழுமையாக, முறையாக விசாரிக்காமல், உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒற்றை அதிகாரி செய்த தவறு இன்னதென விளங்கிக் கொள்ளாமல்;அல்லது விளக்கப்படாமல் அவருக்காக இந்திய அரசே அவசரப் பட்டு,ஆர்ப்பரித்து எழும் இந்த விநோதமான விபரீதமானது , வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குகான  வெட்கம் கெட்ட விளம்பரமே அன்றி விஷயமுள்ள விவகாரம்  என்பதை புத்தியுள்ளோர் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

இல்லை என்றால் அமெரிக்கக் காவல்துறையால் ’குற்றவாளி’  என்று கருத்தப்பட்டு கைதாகி, இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள தேவ்யானிக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கி,  அவரைக் குற்றம்சாட்டப்படமுடியாத உயர்நிலை அதிகாரியாகப்  பதவி உயர்வு அளித்து, ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத்தாழ்ப்பாள்’ போட்டதுபோல்  குற்றத்தை ஆய்வு செய்வதற்குப் பதில் 'மகளே உன் சமர்த்து’  என்பதாகக் காட்டிக் கொண்டிருக்குமா, இந்தக் கயமைத்தனமான  காங்கிரஸ் அரசு?

தலித் மக்கள் ஆதரவு,பெண்கள் மத்தியில் ஆதரவு, கிரிமினல் குற்றவாளிகளின் பின்பலம் இவை மூன்றையும் ஒரே கல்லில் வீழ்த்த  வெட்கப்படாமல்  தேவ்யானிக்கு பதவிப் புரமோஷன்  தந்து நீதியைத் தலை குனிய வைக்கும் அதிகாரச் செயல் இது.

இதனிடையே-

அமெரிக்காவுக்கான  இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியான தேவ்யானி கோப்ராகடே IFS காட்டிய ஆசை வார்த்தைகளை நம்பி, பிழைப்புக்காகவும் தனது எதிரகாலம் சிறப்பாக அமையுமென்ற கனவை நனவாக்கவும் அவர் சொல்படி, அவர்பின் கைகட்டிச் சென்ற  சங்கீதாவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து விசனப்படும் சமூக நோக்கர்களும் பெண்ணியவாதிகளும் பார்லிமெண்ட்  எம்.பிக்களும்  மத்திய அரசும் நமது நாட்டின் செய்தி ஊடகங்களும் ஏன் முன் வரவில்லை? என்பதே எனது கேள்வி.

பணிப்பெண்சங்கீதாவின் பின்னணியும் விரிவாக நமக்குத் தெரிந்தாக வேண்டுமல்லவா?

அதிகாரத்தில் உள்ளவனுக்கும் அதிகப் பணம் வைத்திருப்பவனுக்கும்   
அதிகம் சலுகைகளை வழங்கத் துடிக்கும்  நமது இந்திய அரசியவாதிகளின் அவமானத்துக்குரிய இந்த எழுச்சியைக் கண்டு நேர்மைமிக்க இந்தியக் குடிமகன்கள்  வெட்கமும் ரோஷமும் கொள்கிறார்கள்.

அடிப்படைத் தவறுகளைச் செய்து அதிகாரத்தின் நிழலில் விளம்பரம் பெற்று தவறுகளிலிருந்து  தேவ்யானியை விடுவிக்கக் கோரும் மத்திய அரசு, இனி தேவ்யானியை முறைப்படி விசாரித்துத் தண்டிக்க  எப்படி முன் வரும், அவருக்காக இத்தனை ஆரவாரங்களை எழுப்பிய பின்?

அதேபோல், உண்மை நிலை இன்னதென உணராமல்-

'தேவ்யானி ஒரு பெண் என்பதால்தான் இத்தனை கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது’என்கின்றார்கள் இங்குள்ள  பெண்ணியவாதிகள்.

‘அவர் ஒரு ’தலித்’ என்பதால்தான் இப்படியெல்லாம் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார்’ என்கின்றனர் வழக்கம்போல்  தலித்தீயவாதிகள்.

அமெரிக்காவில் அறியப்படாத அவமானம் மிக்க சாதி மற்றும் பெண்ணீய உரிமைக் கோஷங்களை, இங்குள்ள கேடு கெட்ட அரசியலைப் போலவே, ’விசா’ப் பெறாமலேயே  அங்கு குடியேற்றும் முயற்சியை, நமது அரசியல்வாதிகள், முடுக்கி விட்டுள்ளார்கள் போலும்?

வேண்டுமானாலும் பாருங்கள்:

‘இந்தியாவின் தன்மானத்தை மீட்ட காங்கிரஸ் அரசு’ என்றும்
அமெரிக்காவை எதிர்த்து வென்ற  வீராங்கனை அன்னை சோனியா’  என்றும்  வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  கோஷங்களைத் தாங்கும் பதாதைகள் பவனி வரப்போவதை.

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.12.2013