Sunday, April 20, 2014

மோதியின் வெற்றியில்...

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

1967 க்குப் பிறகு தமிழகம் திராவிடக் கட்சிகளின் கைப்பிடிக்குள்ளேயே கட்டுண்டு போய் விட்டது. ஊரெங்கும் சாராயக் கடைகளும் சினிமாத் தியேட்டர்களும் பணத்தைக் கொள்ளையடிக்கும் பள்ளிக் கூடங்களும் பொறியியல் கல்லூரிக் கடைகளும் பெருகி இருக்கிறதே தவிர,  மாநிலத்தின் எதிர்காலப் பயன்களுக்கென்று எவ்விதத் திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

மக்களுக்குச் சுய அறிவும் சுதந்திரமான தொழில் முயற்சிகளும் ஏற்பட்டு விட்டால் தங்கள் சாயம் வெளுத்து விடும் என்பதற்காகவே இங்கு சாராயக் கடைகளும் சினிமாக்களும் மக்களை மாக்களாகவே வைத்திருக்கின்றன. இதில்தான் ஆசி செய்வோரின் கவனம் எல்லாம்.

மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சிந்தித்து எண்ணுவோரும் எழுதுவோரும் மிக மிகக் குறைவு.

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் கொண்ட எழுத்துக்களில் பொழுது போக்குவோர் இங்கு மலிந்து விட்டனர்.ஆட்சியாளர்களின் குற்றங்களையும் குறைகளையும் நிமிர்ந்து நின்று சுட்டி எழுதுவாரில்லை. வெறும் காமெடியும் கிண்டலுமாக எழுதித் தங்கள் எழுத்துத்திறமையில் தாங்களாக மயங்கிக் கொண்டிருப்போரே இங்கு நிறைந்து கொண்டிருக்கின்றார்கள்.

காமமும் காதலும் களிவெறி கொண்டவர்களாகவே காட்சி அளிக்கும் இவர்களின் காட்டு மிராண்டி எழுத்துக்களால், என்ன பயன்? என்பதைச் சிந்திப்பார் இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை  தேர்தல்கள் வருகின்றன;ஆட்சி மாற்றங்களும் வருகின்றன;ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தில் வளம் மட்டும் வருவதில்லை.

என்ன சொல்லி ஆட்சிக்கு வருகிறார்களோ, அதை அடுத்த தேர்தல் வரும்போது, ‘ஏன் சொன்னதைச் செய்யவில்லை? என்று பாமர மக்கள்தான் கேட்பதில்லை என்றால் படித்தவர்களும் தட்டிக் கேட்பதில்லை.

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு சிந்தனை சிறந்தோரின் எண்ணிக்கை கூடுவதற்குப் பதிலாக, இழிந்த சிந்தனைகளை விளம்பரப் படுத்திக் கொள்கின்ற ’வக்கிரப் புத்தியாளர்களின்’ வரிசைதான் பெருகி நிற்கிறது.

இங்கே ஆளாளுக்குக் கட்சி கட்டிக் கொண்டு வம்பளப்பதைத் தவிர, நாட்டின் வளமார்ந்த வளர்ச்சிக்காக  வரிந்து கட்டிக் கொண்டு வாதிடுவோர்   அரிதாகி விட்டனர்.

எந்தக் கோபத்தில்,2011ல் கலைஞர் ஆட்சியைக் காட்டுக்கு அனுப்பி, மேடம் ஜெயலலிதா அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட்டார்களோ, அந்தக் கோபத்தைத் தீர்க்கின்றவாறு நாட்டில் புதிய திட்டங்களோ தொழில் மறுமலர்ச்சியோ  ஏற்படவில்லை.

தோற்றபிறகு ‘ஏன் தோற்றோம்? என்பதை மட்டுமே ஆராய்ந்து நொந்துகொள்கிற வழக்கம் நமது அரசியல்வாதிகளின்  மாறாத இயல்பு என்றாகி விட்டது.

எனவே, தேர்தல்கள் என்பது மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் மாறி மாறி ஆட்சியில் அமர்கின்ற திருவிழாக்களாக இல்லாமல் கடந்த ஆட்சியின் தவறுகளிருந்து மீண்டு, மக்களுக்காகவும் நாட்டின் உயர் பெருமைக்காகவும் ஆட்சி நிர்வாகத்தை நடத்துகின்றவர்களை அடையாளம் காணுகின்ற திருப்பு முனையாக இருக்க வேண்டும்.

சென்ற 2011ல் நடந்த மாநில சட்டமன்றத்துக்கான தேர்தலில் தி.மு.க தோற்று,அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது நான் இங்கு எழுதின கட்டுரை ஏனோ என் நினைவுக்கு வந்தது.

அதை மறுபடியும் வாசக நண்பர்களின் பார்வைக்கு மீள்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.(காண்க: இதே வலையில் ‘நட்புடனும் நடுநிலையுடனும்’ தேதி:14.5.2011 / http://ulagathamizharmaiyam.blogspot.in/2011/05/blog-post.html )

வரும் நாடாளுமன்றத்தேர்தலில் மோதியின் வெற்றி உறுதியான ஒன்று என்பது நாட்டுப்பற்றுள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும் விஷயம் என்றாலும் மோதியின் ஆட்சியில் ’எல்லோரும் ஓர் நிறை;எல்லோரும் ஓர் விலை’ என்ற சமத்துவப் பார்வையோடு வலிமை மிக்க ஆட்சி நேர்மையான நிர்வாகம் புரிந்து நீடிக்க வேண்டும்’ என்ற கவலையும் இருக்கிறது.

’மோதிக்கு ஓட்டுப்போடாதவர்களும் மனம் வருந்தி மோதியை வாழ்த்தும் வகையில் இந்த நாடு நல்லதோர் மாற்றத்தைக் காண வேண்டும்’ என்பதே என் போன்றோரின் எதிர்பார்ப்பு.

பி.ஜே.பி தலைவர்களும் அதன் தொண்டர்களும் இதனைக் கருத்தில் கொண்டு சிந்திப்பார்களானால் அதுதான் மோதியை ஆட்சியில் அமர்த்தி மகிழ்வதிலுள்ள உண்மையான  அர்த்தம்.

தேசத்தைச் சத்தான எதிர்காலம் எதிர்கொள்ளட்டும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
20.04.2014

No comments: