Wednesday, May 21, 2014

இமயப் புகழில் எழுந்து நிற்க!


றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

நரேந்திர மோதியின் தனிச் சிறப்பு மிக்க ஆட்சி மத்தியில் தளிர்த்திட கோடிக்  கணக்கான மக்களின் கரவொலிகளுக்கிடையே நமது  நல்வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக் கொள்கின்றோம்.

முறைப்படி பிரதமராவதற்காக, நேற்று அவர் ஆளும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்  தேசத்தின் தலைமை குறித்து மனம் உருகிக் கண்ணீர் பெருகிட நாத் தளு தளுக்க ஆற்றிய உரை, அனைவரையும் உருக வைத்திருக்கிறது.

வீரமும் விவேகமும் தீரமும் தெளிவும் மிக்க நாட்டின் தலைவராகப்  பொறுப்பேற்று ஆட்சியை நடத்துவதில் மக்கள் அமோக ஆதரவை அளித்திருக்கும் போது, இனி அவர் எவரும் குற்றம் சாட்ட முடியாத நல்லாட்சியைத் தருவார் என்று நாடே எதிர்பார்க்கும் இவ்வேளையில்  அவரது ஆட்சி முழுமையான வெற்றிகளைக் குவிக்கவும் அவர் தலைமையில் இந்தியா  உலக அரங்கில்  முதன்மை மிக்க நாடாய்  மலர்ந்திடவும் நாம்  வாழ்த்துவோம்!

இவ்வேளையில் அமையப்போகும் மோதியின் அமைச்சரவை சகாக்கள் குறித்துப் பல்வேறு யூகங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நரேந்திர மோதி, தனது எண்ணங்களுக்கு மாசு கற்பிக்கும் நிர்பந்தம் எதற்கும் அடிபணியாது அரசியல் நேர்மையையும் மக்களின் தீர்ப்பின் மகத்தான நோக்கத்தையும்  நிலை நிறுத்த தீரமிக்க நிர்வாகத்தை உருவாக்குவார்’ என்பதை  நேர்மையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதை இங்கே குறிப்பிடக் காரணம், ’மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களை ஆட்சி அதிகாரத்தில் வைக்க மாட்டேன்’ என்று தேர்தலுக்கு முன் உறுதிபடத் தெரிவித்திருக்கும் நரேந்திர மோதிக்குச் சோதனையான நேரம் போலும்’ என்று எண்ணத்தக்கவாறு  அருண் ஜேட்லிக்கு மத்தியில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்ற ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதுதான்.

திறமை மிக்கவர்களையும் நேர்மையும் தூய்மையும் நிறைந்த வல்லவர்களையும் அவர் தன் அமைச்சரவையில் நிரப்ப  எந்த  நிர்பந்தமும் குறுக்கீடாக இருக்கக் கூடாது.

‘தன் அமைச்சரவை சகாக்கள்’ என அவர் அமைக்கவுள்ள குழுவில் ’யார் யார் இடம் பெறுவது? யார் யார் தேவையில்லை?’ என்று முடிவெடுப்பது  நரேந்திர மோதியின்  உரிமை. அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் அந்த உரிமையின்  அடிப்படையில் அவரது நிர்வாகம்  சுதந்திரச் செயல்பாடாக இருக்கும்போதுதான் ஆட்சியின் சிறப்புக்கும் வலிமைக்கும் அடித்தளம் இட்டதாக அமையும். 

அப்போதுதான் ஆட்சியின் வெற்றி தோல்விகளுக்கு பிரதமர் என்பவர் முழுப்பொறுப்பாக. நெஞ்சம் நிமிர்ந்து நிற்க முடியும்.

மன்மோகன் சிங்கின் தவறுகளுக்குப் பின் புலமாக  இருந்த சக்திகள்போல் கட்சி மேலிடமோ ஆர் எஸ் ஏஸ் இயக்கமோ இயங்குமானால்  காங்கிரஸ் செய்த அதே தவறு புதிய வடிவில் தொடர்வதுபோல் ஆகி மீண்டும் மீண்டும் நாட்டுக்குக் கேடு தொடர்வதாகி, புதிய மொந்தையில் பழைய கள் என்ற கேலிக்கு ஆளாக நேரிடும்.

நரேந்திர மோதியின் அலையில் வடநாடெங்கும் வாரிச் சுருட்டிய வெற்றியை அமிர்தசரஸில் மட்டும்  அருண் ஜேட்லி ஏன் இழந்து விட்டார்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட  ஒருவரை  நரேந்திர மோதி  தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது என்பது முதல் கோணல் என்றாகிவிடும்.
 
அருண் ஜேட்லியை இப்போதைக்கு அமைச்சரவைக்குக் கொண்டு வராமல் அடுத்து ஏதேனும் இடைத்தேர்தல் மூலம் வெற்றிபெறச் செய்து அதன் பிறகு அமைச்சராக்கும் நேர்மையை மோதி அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்;கடைப்பிடிப்பார்’ என்று நாடு எதிர்பார்க்கின்றது.

 
’சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடில்லாத நேர்மைமிக்க பிரதமர் நரேந்திர மோதி’  என்று  அவர் பெயர் எடுக்க வேண்டும்’அது அவர் காலம் முழுமைக்கும் நிலைக்க வேண்டும்.

‘துணிவும் தூய்மையும் நேர்மையும் நிஜமுமான பிரதமர்’ என்ற புகழில் நரேந்திர மோதி  இமயமென எழுந்து நிலைக்க வேண்டும்.

மாறாக, பத்தோடு பதினொன்றாக பிற அரசியல்வாதிகள்போல், வெற்றியின் மமதையில் கட்சியோ மக்களுக்கு அளித்த அவரது வாக்குறுதிகளோ வீழ்ந்து விடக்கூடாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
21.5.2014

No comments: