Monday, May 26, 2014

இது ஒரு சத்தியப் பிரமாணம்.

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.


இதுவரையிலும் எந்தஒரு அரசியல் சார்புச் சித்தாந்ததையும் வசப்படுத்திக் கொண்டு நான் வரிந்து கட்டி எழுதியதில்லை.

முகநூலில் வந்ததிலிருந்தே தமிழர்தம் மரபு சார்ந்த கொள்கைகள்  மற்றும் தேசத்தின் சத்தான  அறிவுசார் நிலைப்பாடுகளை வலியுறுத்தியே கட்டுரைகள் எழுதி வருகின்றேன்.

அரசியல்,சினிமா,இலக்கியம்,பத்திரிகை இயல் சார்ந்த துறைகளில் எனக்குள்ள அக்கறையும் பட்டறிவும் பார்வையும் இங்கே எழுத்துக்களாகப் பரவி நிற்கின்றன.

வெறும் நட்புப் பட்டியலை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆயிரக் கணக்கானோர் எனது நட்புக் கோரி இணைந்தவர்களாக இருக்கின்றார்களே தவிர  அறிவார்ந்த சிந்தனைகளில் நாட்டம் கொண்டு கருத்துக்களை விவாதிப்போர் மிக மிகக் குறைவு.

என்றபோதும்-
எனது எண்ணங்கள் தனித் திறனோடும்  எவரையும் சார்ந்திராமல், அச்சமின்றி நேர்மைத் துணிவோடும் நிலைத்த உண்மைகளோடும்தான் இங்கே உரைக்கப்படுகின்றன.

அவை உண்மையான பாதையில் நடைபோட விரும்பும் அறிவுத்தாகம் கொண்டோர்க்கன்றி வெறும் திண்ணைப்பேச்சுக்காரர்களுக்கும் வெட்டிப் பொழுது போக்காளர்களுக்கும் அல்ல’ என்பதை இங்கே பல முறை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

நரேந்திர மோதியை நான் முழு மனதோடு முக்காடு போட்டுக் கொள்ளாமல் ஆதரிக்கின்றேன்.அதற்குக் காரணம் எனது தேசப்பற்று.

நான் பி.ஜே.பியின் பின் நிற்பவன் அல்லன்;முன் நின்றவனும் அல்லன்.

நரேந்திர மோதியின் வாழ்வும் அவரது எண்ணங்களும்  ஒரு துறவியைப் போன்றே என்னைக் கவர்கின்றன.

இந்தியாவின் வீரத்துறவியாகப் பிறந்து மறைந்த விவேகானந்தரின் மறுவடிவாகவும் வல்லபாய் படேலின் இன்னொரு பிறப்பாகவும் நரேந்திர மோதியைக் காண்கின்றேன்.

அவர் இந்தியர்கள் பெருமைப்படும் பிரதமராகச் செயல்படுவார்.
அப்படிச் செயல்பட முடியாதபடி அவரைச் சிறுமைப்படுத்தும் சித்தாந்தப்போக்கை எவர் கடைப்படித்தாலும் அவர் பி.ஜே.பியின் உயர் தலைவர்களாக இருந்தாலும் இந்தியாவில் பிறந்து இம்மண்ணின் சத்துக்களை உறிஞ்சி, உண்டு அதற்குத் துரோகம் இழைக்கின்றவர்களாகவே எனது எழுத்து எனும் சாட்டையைச் சுழற்றுவேன்.

மோதியே இடறினும்  என் எழுத்து அவருக்குச் சாட்டையாக மாறும்.

இதை உணராது,மோதியின் அரசாட்சிக்கு அச்சாரம் இடாமலேயே அவரது அணுகுமுறைகளைக் கண்டு அஞ்சுபவர்களையும் எனது எழுத்துக்களோடு எதிர்ப்பகை கொள்பவர்களும்  அரைவேக்காடுகள்’என்ற தகுதியை மட்டுமே கொண்டவர்களாகக் காண்கிறேன்.

இந்த நாட்டின் மேன்மையான விஷயங்களுக்குரிய அணுகுமுறைகளுக்கன்றி  வேறெதற்கும் நான் அஞ்சுவதில்லை; என் எழுத்துக்களைக் கண்டு எவரேனும் அஞ்சினால் அவர்கள் இந்த நாட்டின் அசல் வித்துக்களை விற்கத் துணிந்த வியாபாரிகளாகவே இருக்கின்றார்கள் என்று அர்த்தம்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
6.5.2014
.
Post a Comment