Monday, May 26, 2014

ஈழப்பிரச்சினை:ஈனப்பிரச்சினை ஆக்காதீர்!

நண்பர்களே,

ராஜ பக்‌ஷேவை அழைத்திருப்பது தமிழர்களுக்கோ,ஈழப்பிரச்சினைக்கோ எதிரானது என்று கூக்குரல் இடுவது  அரைவேக்காட்டு அரசியலின்  அடையாளமே தவிர  அறிவார்ந்த,ஆரோக்கியமான  சிந்தனை அல்ல. 

எதிரியாக இருந்தாலும்கூட அவனைத் திருத்துவதற்கும் தெளிந்து கொள்வதற்கும்  உரிய ராஜ தந்திரம் தேவை.  குழாயடிச் சண்டைக்காரிகள் போல் இங்கே எதற்கெடுத்தாலும் ராஜ பக்‌ஷேவைக் ’கொல்ல வேண்டும் குதற வேண்டும்’ என்று கத்துவதும் குரைப்பதும் பண்பட்ட மனிதர்களின் இயல்பாக இருக்க முடியாது.

இப்படிப்பட்டவர்களின் ஆர்ப்பாட்ட அரசியலை மக்கள் செவிப் படுத்தாமல் குப்பைத் தொட்டியில் போட்ட பின்பும் தங்களுக்கு தமிழகமே பின்னால்  இருப்பது போல் போலிப் புளகாங்கிதம் கொண்டு அறிக்கைகள் விடும் காகிதப்புலிகளாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் செல்லாக்காசுச் சிந்தனையாளர்கள்.

இந்தப் போலிகள் தங்களை ஈழத் தமிழ் மக்களுக்காகவே வாழும் மாவீரர்களைப்போல் போஸ்டர்கள் போட்டுக் கொண்டு பூனை,ஆனை, புலி எலிகளின் படங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் அவற்றைத் தங்கள் போஸ்டர்களில் தங்கள் படங்களுடன் விதம் விதமான போஸ்களில் காட்டிக் கொண்டு சுய இன்பம் அடைகின்ற  சுத்தப் பேடிகள்.

இவர்களால் ஈழ மக்களின் துயர் ஒருபோதும் குறையவில்லை.மாறாக பிரச்சினைகளைப் பெரிதாக்கி ஊதி ஊதிப் பெரிதாக்கி அதில்  குளிர்காயும் குயுக்தியாளர்களாகவே அரசியல் செய்கின்றவர்கள். இவர்களின் சுயநல,குள்ள நரித்தனமான  அவல நிலையை  உணர்வோர் மிக மிகக் குறைவு.

‘தமிழ் அறிஞர்கள்’ என்றும் ’கவிஞர்கள்’ என்றும் ’இன உணர்வாளர்கள்’ என்றும் தங்களைக் கதைத்துக் கொண்டு  வேலையற்றவர்களையும் விபரீதப் புத்தி உள்ளவர்களையும் கூட்டிக் கொண்டு மண் சோறு விருந்து படைக்க முடியுமே தவிர   பாதிக்கப்பட்ட மக்களின் துயர்  போக்கும் மருந்தை ஒரு சொட்டுக் கூட தர முடியாத தறுதலைப் பேச்சாளர்கள்தான் இவர்கள்.

இத்தகையோரால்தான்  ஈழப்பிரச்சினை, ஈனப் பிரச்சினைபோல்
இழிபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப்போலிகளின் வெத்துக் கோஷத்தை விரிவு படுத்தும் உழவாரப்பணிகளில் புல்லரித்துப்போகும் மூடர்களூக்கு எடுத்துரைக்கவும் இடித்துரைக்கவும் இதற்கு மேல் நாகரிக வார்த்தைகள் இல்லை.

’ராஜரீக  நடவடிக்கையில் இந்த மோதியின் அரசு ஈடுபடும் முன்னரே ஈழப்பிரச்சினை விடிவு பெற வேண்டும்’ என்பது அரைவேக்காடுகளின் அரசியலே அன்றி வேறென்ன?

இவண்,
கிருஷ்ணன்பாலா
(முகநூல் பதிவு :24.5.2014)

No comments: