Wednesday, May 21, 2014

விளக்குமாற்றின் பயன்!


றிவார்ந்த நண்பர்களே,
ம் ஆத்மி பார்ட்டியின்  ஆதிமூலர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று   (21.05.2014) நிதின் கட்காரி தொடுத்த மான நட்ட வழக்கில் கைதாகி உள்ளார்.

இந்தக் கைது மூலம் கெஜ்ரிவால் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக ஜாமீன் கோர மறுத்திருக்கிறார். அதன் விளைவாக திஹார் சிறைக்குத் தெம்பாகவும் சென்றிருக்கிறார்.

இது ஒருவகை சுய புகழ் பெருக்க முயற்சியே தவிர வீரத் தியாக அரசியல் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவரது முரண்பட்ட செயல்பாடுகள் முற்றிலும் அவரை அரசியல் அரங்கிலிருந்து  அழித்து, அவமானத்துக்கும் அசிங்கத்துக்கும் ஆளாக்குமே தவிர, அற்புத மனிதராகவோ அரசியல் புனிதராகவோ ஒருபோதும் உயர்த்தாது.

டெல்லியில் இரண்டாவது பெரிய கட்சியாக தேர்தல் வெற்றியைப் பெற்ற இந்தப் புதிய காந்தி அவதாரம், தனது சீடர் குழுமத்தோடு அரசியல் நுட்பம் அறியாது கொஞ்சமும் பொருந்தாத காங்கிரஸின் உதவியுடன் அவசரக் கோலத்தில் ஆட்சிக் கட்டில் ஏறியதும், அதன் மீது தவ்வித் தவ்விக் குதித்து அந்தக் கட்டிலை நார் நாராகக் கிழித்து விட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டதும் தவிர ஒரு புல்லைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

அவருக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் ஏப்பம் இட்டதைக் கண்டு டெல்லி மக்களே கொதித்துப்போனதுதான் மிச்சம்.

எல்லா அரசியல்வாதிகளும் பொய் வாக்குறுதிகள் மூலம் மக்களுக்குக் குல்லா போடுவதை ஒரு ஃபேஷனாகக் கொண்டிருக்க, இவர்  மட்டும் தனக்கும் தனது  சீடர்களுக்கும் காந்தீய பாணியில் தாங்களாகவே கட்சிப் பேரிட்ட குல்லாக்களைப் போட்டுக் கொண்டு புதுவகை பித்தலாட்ட அரசியலை அரங்கேற்ற முயன்று,  ‘இந்தியாவில் ஊழல் எதிர்ப்புக்கு ஒரே நாயகன்’என்று தன்னை (கெஜ்ரிவால்) விளம்பரப்படுத்தி கொண்டு மக்களை ஏமாற்றும் புதிய அரசியல் யுக்திகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வேஷம் விரைவில் கலைந்து வெளிச்சம் ஆனது டெல்லி சட்ட மன்றத்தேர்தல் முடிவுகளால்.

தனது திடீர் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பித்த சில மாதங்களிலேயே நடத்தப்பட்ட டில்லி சட்டமன்றத் தேர்தலில்,இந்த  ஆம் ஆத்மி கட்சியை  இரண்டாவது பெரிய கட்சியாக டில்லி மக்கள் அங்கீகரித்துக் காங்கிரஸைச் சிறுத்துப்போன சின்னக் கட்சியாக ஆக்கியபோது கெஜ்ரிவாலுக்கு ‘தலை எது? வால் எது?’ என்பது புரியவில்லை.

எந்தக் கட்சிக்கு எதிராக ஓட்டுக்களைப் பெற்றாரோ,அந்தக் கட்சியின் வெளிப்படையான ஆதரவுடனேயே இவர் டில்லி முதல்வராக ஆட்சி பீடம் ஏறி, தினம் ஒரு தெருக்கூத்து நாடகத்தை நடத்தி ஊடகங்களுக்கு விருந்து வைத்ததன்றி தான் வாக்களித்தபடி டில்லி மக்களுக்கு உருப்படியான திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை.

தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பு இல்லாதபோது அதை  அடுத்தவர்கள் மீது பழியைப்போடும் தில்லுமுல்லுகளில் சற்றும் சளைக்காத அசட்டுத் துணிச்சலை மட்டுமே மூளைத்தனமாகக் காட்டியவர் இந்த இந்தப் புதிய அரசியல் அவதார புருஷர்.

’ஊழலுக்கு எதிரான இயக்கம்’ என்று தனது கட்சியைச் சொல்லிக் கொண்டு காங்கிரஸை மறைமுகமாக வெற்றி பெற வைக்கும் சதிகாரக் கும்பலின் தலைவன்தான் இவர்’ என்பதை டெல்லி அரசியலில் கெஜ்ரிவால்  ஆட்சி அதிகாரத்தைப் பெற்றபோதே வெட்ட வெளிச்சமாகி விட்டது:

“காங்கிரஸின் கள்ளக் குழந்தைதான் ஆம் ஆத்மி பார்ட்டி” என்பது..

பாவம் அது பிறந்ததும் செத்துப்போன  சவலைக் குழந்தை என்பது இன்னமும் சில படித்த முட்டாள்களுக்குத் தெரியாமல் அதைத்தோளில் சுமந்து கொண்டு சவ ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இருந்தாலும் மறுபடியும் டெல்லி அசெம்பிளிக்கு விரைவில் மறுதேர்தல் வரப்போகிறது.

அதில் கெஜ்ரிவாலுக்கு முன்னர் வாக்களித்த டெல்லி வாக்காளர்கள் எல்லோரும் விளக்குமாற்றாலேயே இவரது கட்சியை ஓட ஓட விரட்டி அடிக்கப் போவதை நாம் பார்க்கத்தானே போகிறோம்?


அப்போது,குப்பைகளை சுத்தப் படுத்த உதவும் விளக்குமாற்றைக் கொண்டே  ஆம் ஆத்மி என்ற  அரசியல் குப்பையை நிச்சயம் அடித்துப் பெருக்கிக் குப்பைத் தொட்டியில் எறிவார்கள்,அதே டெல்லி வாக்காளர்கள்.

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
21.5.2014

No comments: