Monday, May 26, 2014

ஒப்பாரிப் பாடகர்கள்!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

ந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்  இந்திய மக்களின் நலம் பேணும் வகையில்  மகத்தான கொள்கை மாற்றங்களை நரேந்திர மோதி அரசு நிச்சயம் உருவாக்கும் என நாடே எதிர்பார்க்கின்றது.

இந்திய மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று  நரேந்திர மோதி நாளை பிரதமராகப் பொறுப்பேற்கின்றார்.

சர்வதேச நல்லுறுவு எண்ணங்களின் அடிப்படையிலும் தெற்காசிய நாடுகளிடையே பரஸ்பரம் நல்லிணக்க உறவுகளை வளர்க்கும் SAARC அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்களை புதிய ஆட்சியின் தொடக்க விழாவுக்கு அழைப்பது என்பது  ராஜ தந்திர நல்லெண்ணத்தின் உயரிய வெளிப்பாடு.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உயர் பதவியான பிரதமர் பொறுப்பை ஏற்பவருக்கு  இதன் கெளரவத்தையும் மதிப்பையும் மதி நுட்பத்தையும் ராஜ தந்திர வெற்றிகளையும் நிலை நிறுத்த வேண்டியது தலையாய கடமை.

அந்தக் கடமையின் அச்சாரமாக பதவி ஏற்பு விழாவுக்கு ’சார்க்’ நாடுகளின் தலைவர்கள் என்ற தகுதியில் ராஜ பக்‌ஷேவை அழைத்திருப்பதில் என்ன தவறு?

ராஜ பக்‌ஷேயை உலக நாடுகள் கண்டித்துத் தண்டிப்பதற்கு இந்தியாவின் தன்னார்வமும் முன்னெடுப்பும் அவசியமாகிறது. அதைக் கடந்த கால காங்கிரஸ் ஆட்சி செய்யாமல் முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் ராணுவ ரீதியிலும் ஆதரவு தந்தது.

இங்குள்ள இலங்கை எதிர்ப்புப் போராளிகளும் அரசியல் கட்சிகளும் முக்கியும் முனகியும் மூண்டெழுந்தும் எள்முனை அளவும்  இலங்கை அரசின் செயல்பாடுகளைத் தடுக்க முடியவில்லை. காரணம், இந்திய அரசின் பின்புல ஆதரவு அதற்கு முழுமையாக இருந்ததுதான்.

இப்போது காங்கிரஸ் அரசுக்கு நேர் எதிரான மக்கள் அலையில் காங்கிரஸின் ஜன்ம எதிரியான பா. ஜ.க. வின் ஆட்சி நரேந்திர மோதியின் தலைமையில் தொடங்கவுள்ளது.

’நரேந்திர மோதி பிரதமராக வர வேண்டும் என்று தேர்தல் மேடைகளில் முழங்கியவர்கள், நாளைய பதவிப் பிரமாண நிகழ்வில் பெருமையோடு கலந்து கொண்டு பூரிக்க வேண்டியவர்கள்.ஆனால் ராஜ பக்‌ஷேவின் வருகையைக் காரணமாக வைத்துப் பொச்சரிப்புக் காட்டுகின்றார்கள்; விழாவைப் புறக்கணிக்கின்றார்கள்.
.
இதன் மூலம் நரேந்திர மோதியின் நம்பிக்கையை  இழந்து விட்டதோடு, இவர்கள் இலங்கைக்கு எதிரான ராஜரீதியிலான நடவடிக்கை எதிலும் விலகி நிற்பவர்களாகவே தங்களுடைய அவல அரசியலைத் தொடரத் தயாராகி விட்டார்கள்.

ராஜ பக்‌ஷே இனியும் முன்புபோல் சோனியாவின் ரகசிய ஏஜண்டாக இலங்கையில் ஆட்சி செய்ய முடியாது’. என்ற ஞானம் சிறிதும் இல்லாத அரைவேக்காட்டு அரசியலையே நரேந்திர மோதியிடம் காட்டி வெற்றுக் கோஷம் இடுகிறார்கள்.

இந்திய ராணுவத்தையும் அதன்  தளவாடங்களையும் ரகசியமாக இலங்கைக்குத் தந்து, அங்கே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவர்பின்னால் நின்றவர்களையும் அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க அத்தனை உதவிகளையும் செய்தவர் சோனியாதான் என்ற ரகசியம் அம்பலமாக்கப்பட பக்கத் துணையாக இருக்கவேண்டியவர்கள்  சோனியாவையும் மோதியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் மடமை அரசியல்வாதிகளாக இருக்கின்றார்கள்.

சுமூகமான வகையில் நட்புணர்வோடு பேசி இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர,அவர்கள் அந்த நாட்டில் சம உரிமையோடு வாழ, நரேந்திர மோதி நிச்சயம் தனது ஆட்சியின் அனைத்து வல்லறிவையும் பயன்படுத்தி, இலங்கைப் பிரச்சினையில் புதியோர் திருப்பு முனையை ஏற்படுத்துவார்.

அப்போது இன்றைய போலிப் போராட்டவாதிகள் தங்கள் முகத்தில் தாங்களே கரிபூசிக் கொண்டு தெருவில்தான் நிற்க வேண்டிவரும்.

பாவம், தங்களுக்கு  இழவு வீட்டில் ஒப்பாரி வைத்துத்தான் பழக்கமே தவிர கல்யாண வீட்டில் மங்கல வாழ்த்துப் பாடத்தெரியாதென்பதை காட்டிக் கொண்டிருக்கிறார்கள், இந்த ஈழத்தமிழ் ஒப்பாரித் தலைவர்கள்.

முகாரி மட்டுமே பாடுவதில் தொழில் திறமை பெற்ற  இவர்களுக்கு மோகனம் என்றால் என்னவென்று தெரியவில்லை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
25.5.2014

No comments: