Monday, May 26, 2014

டாக்டர் சுப்ரமணியம் சுவாமி யார்-3டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி  தமிழன்;உண்மையான இந்தியத் தமிழன்.
இந்தியாவின் அறிவுசார் சொத்து.

நான், அவர் பிறந்த இனத்தைச் சார்ந்தவன் அல்லன்;ஆயினும் தமிழன். என்னைப்போன்றோர் இந்த தேசத்தின் நலனை எப்படிக் கருதுகின்றார்களோ அப்படிக் கருதி வாழ்வு நடத்தும் டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி போன்றோரை இந்திய அரசியலின் இணையற்ற ஆசான்களில் ஒருவராகக் காண்கின்றேன்.

தனக்கு நியாயம் என்று தோன்றுவதை எந்த அரங்கிலும் அஞ்சாது உரைக்கும் ஆண்மை அவருக்கிருக்கிறது.

நாட்டுக்கு எது நன்மையோ அதைத் துணிவோடும் எவருக்கும் எதற்கும் அஞ்சாமலும் சொல்கின்ற வல்லமை இன்று இவருக்கு மட்டுமே உண்டு.

எத்தகைய எதிரிகளையும் எதிர்த்து அரசியல் செய்யவும் வீழ்த்தவும் வாழவைக்கவும் தெரிந்த சாணக்கியர்.

கையில் வைத்திருந்தால் கூர்வாள்;
அதற்கு எதிரிகள் அஞ்சுவார்கள்.

கழற்றி வைத்தால் போர்வாள்;
அதை எதிரிகள் எடுத்துக் கொள்வார்கள்.

டாக்டர் சுப்ரமண்யம் சுவாமிதான் அந்த வாள்.

அந்த வாள் மோதியின்  கைகளில் இருக்க வேண்டும்

One Man Army என்ற சொல் இவருக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய இவரை, தமிழினத்தின் பண்புசார்ந்த அறிவில்லாத பலரும் கொஞ்சமும் ஞானமின்றி விமர்சிப்பதைக் கடுமையாக எதிர்ப்பேன்.

அவர்கள் தங்கள் பேனாவில் சாக்கடையைக் கலக்காமல் எதிர்த்து எழுத முன் வரட்டும்.

சுவாமியை ஆய்ந்து அறிந்தவர்கள் அவரைத் தமிழினத்தின் விரோதி என்றும் அந்நிய சக்திகளின் கைக் கூலி என்றும் அரசியல் புரோக்கர் என்றும் கூற மாட்டார்கள்.  

இங்குள்ள அரசியல்வாதிகளைப்போல்  அவர் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில்லை என்பதுடன் பிற அரசியல்வாதிகள் ஈழத் தமிழர் பிரச்சினையை அரசியலாக்கிக் கொண்டு  பேசித் திரியும் பித்தாலாட்டதுக்கு எதிரானவர் என்பதும்  எனக்குத் தெரியாததல்ல. அவரைத் தெரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமான அரசியல் பித்துக் கொண்டவர்களுக்கும் குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு குவலய அரசியல் பேசும் அரைகுறைகளுக்கும் அவர் வேப்பங்காய் எனக் கசக்கின்றார்.

தேசியச் சிந்தனையோடும் நமது தேசத்துக்கு எது நன்மை என்ற அரசியல் தீர்க்கத்தோடும் சர்வதேச அரசியலை விரல் நுனியில் வைத்து மற்ற அரசியல்வாதிகளை மூக்கில் விரல்வைக்கச் செய்யும்  அறிவோடும் ஊழலில் கொழிப்போர்க்கும் அதிகாரப் பித்தர்களுக்கும் சிம்ம சொப்பனமாய்த் திகழ்வதால்  இவரை எனக்குப் பிடிக்கிறது.

அவருடைய அரசியல் சாகசங்களும்  சிக்கலான பிரச்சினைகளில் இவர் காட்டும் நுண்ணறிவு வழிகாட்டுதலும் இவரை தன்னிகரற்றவராய் இந்திய அரசியலில் தனிமைப் படுத்திக் காட்டுகிறது.

இன்றைய இந்தியாவின் மிகப்பெரும் ஊழலான 2ஜி  அம்பலமானதுக்கு இவர் ஒருவரே காரணம் என்பது இந்த ஊழல் அரசியல்வாதிகளின் ஊது குழல்களுக்குப் புரியவில்லை. இவரது அரசியல் பற்றி ஆய்வு செய்தால் ஐம்பது ஆராய்ச்சிப் பட்டங்களுக்கும் மேல் அரசியல்-பொருளாதாரப் பிரிவுகளில்  Ph D பெறலாம். 

இவரை முற்றிலும்  கண்மூடித்தனமாக எதிர்ப்போருக்கல்ல, இந்தப் பதிவுகள்; தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் தேர்ந்த அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ளவும் தகுதி உடையோருக்காக மட்டுமே எழுதுகின்றேன். 

நான் இவரை நுண்ணறிவு மிக்க தமிழனின் மேம்பட்ட தோற்றம் என்றுதான் கூறுவேன்  

அதற்கு மாறாக இழிநிலைச் சொற்களில் இவரை வரைய முற்படுவோரை அறிவுலகம் புறக்கணிக்கும் எள்ளி நகை செய்யும்!.

-கிருஷ்ணன்பாலா
(முகநூல் பதிவு நாள்: 23,May'2014)

Post a Comment