Thursday, October 2, 2014

மகா மனிதர்

’பத்மபூஷண்’
மகாமனிதர்,டாக்டர்  நா.மகாலிங்கம்


காந்தியக் கொள்கைகளின் ஈர்ப்பினால் அரசியலுக்கு வந்தார்; அதே கொள்கைகளின் தீர்ப்பினால் போலி அரசியலைத் துறந்தார்.

கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் சர்க்கரைத் தொழிலின் சார்புத் தொழிலான சாராய உற்பத்திக்கான மூலப்பொருள்  (மொலாஸஸ் தயாரிப்பு) தொழிற்சாலையை ’வேண்டாம்’ என்று மறுத்து விட்டு, வள்ளலார்-காந்தி அறக்கட்டளையை உருவாக்கி அதைப் பல்லாண்டுகளாக நடத்தி வந்த ஒரே தொழில் அதிபர்; இந்தியாவிலேயே ஒரே ஒருவராக நாட்டுக்கு அறிமுகம் ஆனவர், ‘அருட் செல்வர்’ என்று அனைவராலும் மதிக்கப்பட்ட ‘கொங்கு நாட்டு வள்ளல்’’ ’பத்மபூஷண்’ டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள்.

வெறும் விவசாயத்தையே நம்பி இருந்த பொள்ளாச்சியில் பிறந்த நாச்சி முத்துக் கவுண்டர் அவர்களின் ஒரே செல்ல மகனாகப் பிறந்து செல்வ மகனாக வளர்ந்தும் செல்வச் சீமானாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் காந்திய நெறிகளின் தாளாளராகவே தன்னை மாற்றிக் கொண்ட மகாமனிதர் வணக்கத்துக்குரிய அய்யா டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள்..

அண்ணல் காந்தி அடிகளின் தூய்மையான அரசியல் பண்புகளையும் வாழ்வியல் நெறிகளையும் மேடைதோறும் பேசி வந்தார்.

பேசியவாறு நடைமுறையில் வாழ்ந்தும் காட்டினார்.

‘அடாது மழையிலும் விடாது குடைபிடிக்கும் கொள்கை’ போல் ஆண்டுதோறும் அக்டோபர் பிறக்கும்போது இவரது நிதியில் இருந்து வள்ளலார் காந்தி விழா சென்னையில் ஏ.வி.எம் ராஜேஸ்வரி மண்டபத்தில் தவறாமல் நடத்தப்பட்டு வருவதை சென்னைவாழ் அறிஞர் பெருமக்களும் ஆன்மீக- இலக்கிய நேயர்களும் தமிழிசைவாணர்களும் உணர்ச்சி பொங்க வரவேற்று,கலந்து இன்புற்று மகிழ்ந்து வந்தனர், இன்றுவரை.

இன்று காந்தி பிறந்த நாள். அவரது பெருமையையும் கொள்கைகளையும் மேடையில் அறிஞர்கள் பலரும் பேசி வந்ததைக் கேட்டவாறு சாய்ந்தவர், சாய்ந்தவாறே வள்ளல் பெருமானின் ஜோதியில் காந்திய ஒளியாகக் கலந்து விட்டார்.

இவரிடம் நிதி உதவி பெறாத தமிழ்ச் சொற்பொழிவாளர்களும் தெய்வீகப் பணியாளர்களும் இருக்க முடியாது. 'உதவி' என்று கோரிக்கையோடு வந்தவர்க்கு ’இல்லை’ என்று சொல்லாத நாவின் சொந்தக்காரர்.

நூற்றுக் கணக்கான மொழியியல், ஆன்மீக ஆய்வு நூல்கள், இலக்கண,இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் என்று இவரது உதவியால் வெளிக் கொணரப்பட்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் மெய்ஞ்ஞானவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரும் கல்வியாளர். இவர்தம் புகழை எழுத்தில் சொல்ல பலநூறு பக்கங்கள் வேண்டும்

இந்திய அரசியல் வரலாற்றில் காமராஜர் காலத்து காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர். மூன்றுமுறை தமிழ்நாடு சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பெரும் தொழில் அதிபராக மட்டுமின்றிச் சிறந்த தேசியப் பொருளாதாரச் சிந்தனையாளராகவும் திகழ்ந்து விவசாயம்,விவசாய உற்பத்தி, தேசிய நதிநீர்க் கொள்கைகளில் முன்னோடிக் கருத்துக்களை விதைத்தவர் இவர் என்பதை இன்றுள்ள பலரும் அறியார்.

பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து நாட்டுக்குத் தேவையான கட்டுரைகளை நூற்றுக் கணக்கில் எழுதி இருக்கிறவர்.

தேசிய நதி நீர் இணைப்பை முதன் முதலில் நாட்டுக்கும் அரசுக்கும் தெரிவித்த தீர்க்கதரிசி இவர்தான். அய்யா அருட்செல்வரின் கீழ் 1981களில் இருந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்த நானே இந்த உண்மைக்குச் சாட்சி. அன்றைய நாட்களில் அருட் செல்வர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் இதன் ஆவணங்களாக இருக்கின்றன..

நிகரற்ற மொழியியல், மானுடவியல், அறிவியல்,ஆன்மீகவியல்,அரசியல் என்று அனைத்து துறைகளிலும் மேதைமை கொண்டிருந்த மேன்மகன் இந்த ’அருட்செல்வர்’ என்பதைச் சரித்திரம் கூறும்.

ஏ.பி.டி (ABT) என்றால் இந்தியச் சாலைகள் அனைத்தும் முகமன் கூறிப் பெருமைப்படும் அளவுக்கு பொருள் போக்குவரத்துத் தொழிலுக்கே (Transport Industry) முகவரி எழுதிய இந்தக் கோமான், கொங்கு நாட்டு வெள்ளாளக் கவுண்டர்களின் .உயிரில் கலந்த சொந்தம்; உணர்வில் வாழும் தெய்வம்.

இன்று தேச வரலாற்றின் திசைகாட்டியாக மாறி விட்டார்.

”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”.            (குறள்:336)

வாழ்க நீ எம்மான்.!


இவண்-
கிருஷ்ணன்பாலா
2.10.2014

1 comment:

Raghavan - Public Administration said...

A good tribute by a loyal follower. Thanks for a lot of information about this great soul. May his soul rest in peace and his close associates continue his mission.