Wednesday, October 15, 2014

மரபு வழிச் சிந்தனை போற்றுமின்!

றிவார்ந்த நண்பர்களே,

வணக்கம்.

பலரும் படிக்கின்ற சமூக வலைத்தளங்களில்
’எதை எழுத வேண்டும்: எதை எழுதக் கூடாது’ என்ற  சமூக
அக்கறை சார்ந்த இலக்குத்தான்  சமூகச் சிந்தனையாளனின் கடமை.

அதுவே அவனுடைய எழுத்துக்கும் பெருமை.

’இலக்கு இல்லாத எழுத்து சமூகத்தின் அழுக்கு’

அந்த அழுக்கில் உருளவும் புரளவும் பொழுது போக்குவதில் ஆர்வம் கொண்டிருப்போரும் அக்கறை கொண்டிருப்போரும் திறமையைக் காட்டுவோரும் இளைய சமுதாயத்துக்கு   இன்னல் விளைவிப்பவர்கள்.

எழுத்தின் அருமையை உணராது, கண்டபடி மேயும் எருமை மாடுகளான அவர்களுக்கு,’மரபுவழிச் சிந்தனை’ என்னும் சாட்டை அடி இங்கே தேவைப்படுகிறது.

ஆம்.நண்பர்களே!,

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”
என்பது சங்கத் தமிழ் வளர்த்த அவ்வைப் பெருமாட்டியின் மரபுச் சிந்தனை.

கல்வியின் பயனே வாழுகின்ற உயிர்களுக்கு அறிவுக் கண் திறக்கும் பொருட்டே; உயிர்கள் என்ற  சொல்லுக்கு ’மனித உயிர்’ என்பதே முன்னுரிமை பெறும்.

எப்படி,’உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்றுரைக்கப்பட்டதோ, அப்படி.

அதனால்தான் வள்ளுவப் பெருமானும்-

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

என்று

மனித உயிர்களையே முன்னிலைப்படுத்திச் சுட்டினான்.

’வாழுகின்ற உயிர்கட்கெல்லாம்  எப்படி இரண்டு கண்கள் இன்றியமையாதவையோ அப்படி எண்ணும் எழுத்தும்
மனிதர்களுக்கு  கண்களைப் போன்ற அடையாளம்’ என்கிறாள் அவ்வைப் பெருமாட்டி.

அத்தகைய எண்ணும் எழுத்துமாகிய அறிவுக் கண்களைப்பெற்று வாழ்கின்றவர்களே உயர்ந்தோர் எனப்படுவர்.

உயர்ந்தோர் என்பது, இந்த உலகிற்குப் பயன் தரும் சிந்தனைகளை விதைப்பவர்களாவும் மாந்தர்களின் நலனுக்காகச் சுயநலமற்று சிந்தித்து கருத்துக்களைச் சொல்பவர்களாகவும் இருக்கின்றவர்கள்.

அநீதியான செயல்களைப் புரிவோர் எவராயினும்   அவரைக் கண்டிக்கவும் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஆனாலும் அவர்கள் பண்பற்ற வகையில் சிந்தித்தாலும் செயல்பட்டாலும்  அவர்களைத் தண்டிக்கவும் தயங்காத  நேர்மை உள்ளம் கொண்டோராகவும் இருப்பவர்கள் மட்டுமேதான் உயர்ந்தோர்’ என்று நூலோராலும் மேலோராலும் குறிப்பிடப்படுகின்றவர்கள்.

அந்த உயர்ந்தோர், இந்த உலகில் இருப்பதனால்தான் அவர்கள் பொருட்டு இவ்வுலகம்  இயங்குகிறது.

அத்தகைய உயர்ந்தோர் ஆகிய நல்லவர்களைப் பற்றி  விளக்கவே அவ்வை-

”நெல்லுக்கு இரைத்த நீர்,வாய்க்கால் வழி ஒட்டிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல்;அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை’’

என்று மிக அழகாக மூதுரைத்தாள்.

நண்பர்களே,

நாம் நெற்பயிராக இருக்கவே விழைவோம்.

நம்மைச் சுற்றி களைகளும் காளான்களும் புற்களும் மிகுந்திருப்பினும் அவற்றுக்கு வாய்க்கால் வழியே வழிந்து வரும் நீர்  பொசியுமாயினும் நெல்லாய் விளைந்து உயிர்கள் வாழ்வதற்கு உணவாய் இருப்போம்.என்றே விழைவோம்.

இல்லை யெனில்-

”கண்ணுடையர் என்பவர்  கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர்  கல்லா தவர்”

என்று வள்ளுவன் சாட்டையால் அடிப்பதுபோல்,

எழுத்தின் பயனான அறநெறிச் சிந்தனைகளில் செயல்படாமல், அந்த அற நெறிகளைக் கேலி செய்யும் வகையில்  புற வழிகளில் புத்தியைச் செலுத்தி, இங்கே எழுதுகின்ற புறக்கடைகளாக, தமிழ் மரபுச் சிந்தனைகளைச் சிதைக்கின்றவர்களாக, கண்கள் இருந்தும் அவற்றை முகத்தில் இரண்டு புண்களாகவே வைத்திருக்கின்றவர்களாக, இங்கே உலா வரட்டும்.

“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்”

என்று வள்ளுவன் காறி உமிழும் செயலைப் புரிவதில் நாட்டம் கொண்ட அத்தகையோனை -.

’பயனில்சொல் பாராட்டுவானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்’

என்ற குறளின் கோபத்தையும் புரிந்து கொண்டு புறந்தள்ளுங்கள்.

சொல்லுக, சொல்லிற் பயனுடைய; சொல்லற்க
சொல்லிற்  பயனிலாச் சொல்.

என்று வள்ளுவன் இட்டுள்ள கட்டளைபடி
பயனுள சொல்லிப் பயன் பெறுக நண்பர்களே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
15.10.2014

Post a Comment