Thursday, October 9, 2014

புத்தியுள்ளோர் புரிந்து கொள்க!

அறிவார்ந்த நண்பர்களே,

றியாமையாலும் அருவெறுக்கத்தக்க அரசியல் வெறித்தன்மையாலும் அவலம்மிக்க குருட்டுப்பார்வையினாலும்  மேடம் ஜே. அவர்களை விடுவிக்கக் கோரி  தெருக்களில் இறங்கி வன்முறைகளை நிகழ்த்துவோர், நீதியைக் கொச்சைப்படுத்துவோர், அரைவேக்காட்டு அரசியல் பித்தர்கள் எல்லோரும் எத்தனை நாட்களுக்கு இந்தக் கேவலமான காட்சியில் இடம் பெற்று வருவீர்கள்?.

நீங்கள் வன்முறையில் இறங்கி வெறி கொண்டு செய்யும் செயல்கள் மேடம்
ஜெ. அவர்களின் பார்வைக்குச் சென்றால் கட்சியில் பதவியும்  பணமும் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துக்காகத்தானே இந்த ஈனச் செயல்களில் பங்கு கொள்கிறீர்கள்?

நீதியின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தி சட்டவிரோதமாக நடக்கும் உங்கள் செயல், மேடம் ஜெ. அவர்களின் பார்வைக்குச் சென்றதோ இல்லையோ? உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றம்.மத்தியப் புலனாய்வுத் துறை,  மத்திய உள்துறை என்று பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டது.

இவ்வாறு நடக்க அனுமதித்துக் கொண்டிருக்கும் மாநில அரசைக் கலைக்கவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் மத்திய அரசு ஆலோசனை நடத்தத் தொடங்கி இருக்கிறது.

வழங்கப்பட்டுள்ள நீதியை எதிர்த்து அதற்குரிய நீதிமன்றத்தில் மட்டுமேதான் வாதாட முடியும்.

அரசியல் தொண்டர்களின் உணர்ச்சிகளைக் கூட்டி அதைத் தெருவில் கொட்டி, நீதி வழங்கிய பதிகளைக் கொச்சையாக விமர்சனம் செய்து மாரடிப்பதும் வசைபாடுவதும் போஸ்டர்கள் போட்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக விசுவாசத்தை காட்டிக் கொள்வதும் பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடுவதுமாக வன்முறைகள் மூலம் நீதிபதிகளை மிரட்டுவதும் அவமானப்படுத்துவதும் பெரும் தண்டனைக்குரிய குற்றம்.

அந்தக் குற்றத்தைக் கண்டும் காணாமல் விடுவது அந்தக் குற்றங்களை எல்லாம் மேலும் மேலும் ஊக்குவிக்கின்ற செயலே ஆகும்.

இதற்கு அம்மாவின் பாதச் சுவடுகளைத் தலையில் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யும் மாண்பு மிகு பன்னீர் செல்வம் அவர்கள் தலையைக் குனிந்து கொண்டு நீதி மன்றத்துப் பதில் சொல்லத்தான் போகிறார்.

’தாங்கள் செய்வது இன்னதென அறிகிலார்;பிதாவே, இவர்களை மன்னியும்’ என்று உங்களுக்காக வாதாட எந்த ஏசு பிரானும் வர மாட்டார்.

உங்கள் செயல்களால் மேடம் ஜெ. அவர்களுக்கு மேலும் சிக்கல்கள்தான்.

ஊருக்கு நல்லது சொல்வேன்!

புத்தியுள்ளோர் புரிந்து கொள்ளட்டும்.

-கிருஷ்ணன்பாலா
9.10.2014

No comments: