Friday, October 10, 2014

இந்தக் கவிதைக் கிறுக்கர்களால்...


றிவார்ந்த நண்பர்களே,

எனது நூலகத்தில் பலதரப்பட்ட நூல்கள்.
அவை சங்க இலக்கியம்,சமூக இலக்கியம்,ஆன்மீக இலக்கியம், சித்தர் இலக்கியம்,மொழியியல்,இலக்கணம், ஜோதிடம், மருத்துவம்,வரலாறு,கவிதைகள் என்ற வரம்புகளுக்குள் அணி வகுத்திருப்பவை.

ஜோதிட நூல்களில் பழம் பதிப்புக்கள் மட்டுமே அதிகம் எனது கவனத்தையும் கருத்தையும் ஈர்ப்பவை என்பதால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகளும் பண்டிதர்களும் விளக்கவுரை  நல்கிய  ஜோதிட அறிவியல் சித்தாந்த நூல்களே எனது நூலகத் தொகுப்பில் ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கின்றன.

அபூர்வமான பழம் ஜோதிடப் பதிப்புக்கள் எனது கவனத்துக்கு வந்தால் அவற்றை எப்படியும் விலை கொடுத்து அல்லது நகல் எடுத்து அவற்றை நூல்களாக அடுக்கி வைத்துக் கொள்ளும் தாகம் ஏனோ நாளுக்கு நாள் என்னுள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

கவிதை நூல்கள் என்று எடுத்துக் கொண்டால் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் படைப்புக்கள் இருக்கின்றன.

கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் பலரின் கவிதை நூல்கள் அவை.

’இலக்கியத் தேட்டமும் சமூகச் சிந்தனையும் மிகுந்துள்ளவர்களின் எழுத்துச் சித்திரத்திரங்களை அழகுபடுத்தும் தூரிகைகளைத் தாங்கி இருக்கும் தூளிகள்தாம்  நூல்கள்’  என்பதென் ஆழ்மனம் கொண்டிருக்கும் கொள்கை.

அவற்றிலிருந்து புதிய புதிய சிந்தனைப் பரிமாணங்களில் சிந்தை வடிவெடுக்கத்தான் செய்கின்றது.

சரியான கவிதையை நேசிக்கவும் யோசிக்கவும்,வாசிக்கவும் சுவாசிக்கவும் கற்றுத் தந்தவை மகாகவி பாரதியின் படைப்புத் திறம்தான்.

’எட்டாம் வகுப்பை எட்டும் முன்பே எனக்குள் கவிதா உணர்வுகள் எட்டி நின்றன’ என்றால் பாரதி எனது மானசீகமான குருவாய் உருவாகி இருந்த காரணம்தான்.

அவனது கவிச் சிந்தனைகளின் வீச்சு,என்னைக் கவியரசு கண்ணதாசனின் படைப்புத் திறனை ஆழ்ந்து சிந்திக்கவும் வந்திக்கவும் உசுப்பேற்றி விட்டது.

அவ்வை முதல்  சங்கப் புலவர்களின் படைப்புக்களும் பாரதி உள்ளிட்ட சென்ற நூற்றாண்டின் சிறந்த புலவர்களின் படைப்புக்களும்தான் எனது கவிதை இலக்கிய நாட்டத்தின் reference நூல்கள் என்று சொல்வேன்.

நவீன இலக்கிய வீதியில் பழமையின் மரபுச்சுவையைக் குன்றாமல்,குறையாமல்  நாம் பருகிட, கவிதை மற்றும் உரைநடைத் தமிழுக்குப் பெருமை சேர்த்த கவியரசு கண்ணதாசனை நவீனக் கம்பனாகவே காண்கிறவன் நான்.

’இந்த நவீனக் கம்பன்  உமர்கயாம்,ஷெல்லி,பாரதி, கவி காளமேகம் ஆகியோரின் கலவையாகவும் இருக்கின்றவன்’ என்பதில் எனது ரசனை பெருகி நிற்கிறது.

எனவே,  கவியரசு கண்ணதாசனின் படைப்புக்கள் அனைத்தும் எனது இலக்கியப் பொக்கிஷத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்பதில் ரகசியம் ஏதுமில்லை.

”பாரதியும் கம்பனும் கண்ணதாசனும் உங்கள் நூலகத்தில் இருக்க அங்கு உப்புச் சப்பில்லாத கவிதைப் படைப்பாளர்களின்
நூல்களையும் வைத்திருக்கிறீர்களே?”என்று ஒருமுறை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

அவருக்குச் சொன்ன பதிலையே, இங்கு சொல்வது மிகச் சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்:

நண்பர்களே,
புற்றீசல்போல் ’பொல பொல’ எனப் பெருகி,’கவிஞர்’ எனக் காட்டிக் கொள்வதில் கிறுக்குப் பிடித்துப் போய் அலைந்து கொண்டிருக்கிறவர்களின் அரிப்பைத் தீர்த்துக் கொள்கிற இடமாகி விட்ட இம்முக நூலில், கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் அரைகுறைத் தமிழ் எழுத்தாளர்களாகிக் கவிதையின் மாண்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலக்கணப் பண்பும் மரபும் மாறாத தமிழன்னையின் உருவம் இவர்களால்தான் சிதைக்கப்பட்டு அரைகுறை ஆடை அணிந்தவளாகவே, இன்றைய இளைய சமுதாயம் இவளைக் கற்பித்துக் கொண்டிருக்கும் அவலம் உருவாகி இருக்கிறது.

கவிதையின் மேன்மையான தரத்தை உணரமுடியாதவர்களால் உரைநடையில் சற்று முரண் தொடைகளையும் முக்கல் மொழிகளையும் புகுத்தி அதற்கு ‘புதுக் கவிதை’என்று பேரிட்டு, பின்பு அதையே வழக்கப்படுத்திக் கொண்டபிறகு  உருவான கவிஞர்களின் நூல்களை விலைக்கு  வாங்கி இங்கே மகாகவி பாரதி கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் நூல்களின் வரிசையில் வைத்துள்ளேன்.

இந்நூல்களைக் கொண்டு நான் கவிதை எழுதும் யுத்திகளைப் பின் பற்றுவதில்லை என்றாலும் இவை ஒருவகையில் எனக்குப்  பயன் தரும் நூல்கள்தாம்.

'எப்படியெல்லாம் கவிதை எழுதக் கூடாது?’ என்கிற விழிப்புணர்வைத் தருவதில் இந்நூல்களை நான் குப்பையில் எறியாதிருக்கிறேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.10.2014

மேலும் காண்க:
http://ulagathamizharmaiyam.blogspot.in/2013/06/blog-post_8300.html
Post a Comment