Wednesday, October 8, 2014

சுயதரிசனம் தேவை

அறிவார்ந்த நண்பர்களே,

’மேடம் ஜெ. ஊழல் செய்து பணம் சம்பாதித்துத்தான் ஆட்சி செய்ய வேண்டும்’ என்ற நிலையில் இல்லை. ’தனக்கு வாரிசுகள் ஏதுமில்லை; மக்களே எனது
சொத்து’என்று சொல்லிச் சொல்லியே பாமர மக்களைத் தன் பின்னால் அணிதிரளச் செய்தவர், ஆட்சிக்கு வந்த முதல் சுற்றிலேயே கொஞ்சமும் யோசிக்காமல் முறைகெட்ட  வழிகளில் பணம் சம்பாதித்ததை ஆவணங்களே காட்டிக் கொடுத்து விட்டன.

ஆவணப்படி சம்பாதித்த ஊழல் சொத்துக்கள் கொஞ்சம்தான;
கணக்கில்லாமல் சம்பாதித்தவை அதைவிட ஆயிரம் மடங்கு.

இவரது அரசியல் பலமும்  கொள்ளை அடிக்கும்  பலமும் கலைஞரை விடப் பல மடங்கு அதிகம் என்பது தொழில் அதிபர்கள், சர்க்கரை-சாராயத் தொழில் அதிபர்கள், பேருந்துத் தொழில் அதிபர்கள்,கல்லூரி வியாபாரிகள் கிரானைட் தொழில் அதிபர்கள், இரும்புத் தொழில் அதிபர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் முனகல்களாக இருக்கின்றது..

ஊழல் புரிவதில் ஒப்பற்றவராக இருந்தும் சட்டத்தின் பிடியில் சிக்காமல், கலைஞர் மிகச் சாமர்த்தியமாகத் தப்பி வந்துள்ள போதிலும் அவரைத்தான் ஊழல்வாதி என்று பாமரர்களும் அதிமுகவினரும் பலமாகப் பேசி ஆதாயம் அடைந்துவருவது தமிழகத்தின் விசித்திரமான அரசியல் நிலை.

கலைஞர்  மகாபுத்திசாலிதான். கெட்டிக்கார அரசியல்வாதியாக வலம் வருகிறார். கெட்டிக்காரரின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு’ என்பதுபோல் இவரது ஆட்சியின் அவலங்களும் ஊழல் விஷயங்களும் நீதியின் முன்பு அம்பலம்  ஆகும் நாள் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அம்மையாரோ, அரசியல் முதிர்ச்சி யின்மையாலும் முகஸ்திதியில் மயங்கும் பலவீனமான குணத்தாலும் கூடாநட்பின்   குருட்டுத்தனமான நம்பிக்கையாலும்இன்றைய நிலைக்கு அடித்தளம் இட்டுக் கொண்டு செய்த ஊழலுக்குத்தான்  தண்டனை அடைந்திருக்கிறார்.

இதற்கு அடிப்படை அவரைச் சுற்றி இருந்த கூட்டத்துக்கு அவர் கொடுத்திருந்த முக்கியத்துவம்தான்.

’தன்னை மீறி சட்டமும் இல்லை;நீதி மன்றமும் இல்லை’ என்ற வரம்பற்ற நம்பிக்கை அவரை வீழ்த்தி விட்டது.

சட்டத்தை மதி நுட்பத்தோடும் கண்ணியத்தோடும் அணுகி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவராகத்தான் இன்று தலை குனிந்து போயுள்ளோம்’ என்று சுய தரிசனம் கொள்வதற்க்குக் கூட அவருக்குத் தெரியாத நிலைதான் தொடர்கின்றது போலும்.

தன்னைச் சுற்றி மிகப்பெரும் மாயவலையைத் தானே பின்னிக் கொண்டதன் காரணமாகவும் அப்படிச் சூழ்ந்துள்ளவர்களின் பேராசை மற்றும் நாட்டின் மானம் மரியாதையைக் கருதாத கயமைக் குணம்  காரணமாகவும்  அவர்கள் மட்டுமே அம்மையாரை அணுகிக் காரியம் சாதிப்பவர்களாக இருக்க வைத்துக் கொண்டதன் விளைவாகவும்தான்  தனது சட்டப்போரட்டத்துக்குத் தோல்வி என்பதை அவருக்கு யார் புரிய வைப்பது?

ஆனால்,இந்தக் குற்றப்பின்னணியை ஒப்புக் கொள்ளாமல் அவரை உத்தமத் தலைவராகவும் தெய்வத் தாயாகவும் வர்ணித்து, ஒப்பாரி வைப்பதிலும் நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்துவதிலும் காட்டு மிராண்டிகள்போல் நடந்து கொள்ளும் அவருடைய  பாமரத்தொண்டர்களை எப்படிப் புரிய வைப்பது?.

அதைவிட அதிமுக வக்கீல்கள் சட்டத்தின்  தீர்ப்பை மதிக்காமல் குத்தாட்டம் போட்டு அந்தப் பாமர்களைவிடக் கேவலமாகப் போராட்டம் நடத்துவதை சகிக்க முடியவில்லை;ரசிக்க முடியவில்லை.

நீதியை அவமதித்து விட்டு நீதிக்காக வழக்காடும்  தொழிலை வைத்திருக்கும் இவர்கள் நீதித்துறையின் அவமானச் சின்னங்களாக இருப்பதைப் பார்த்து ‘ நீதி மன்றம் தண்டிக்க வழி இருக்கிறது’  என்பதைத் தெரிந்தும் கூட இப்படிப் போராட்டத்தில் தலையைக் காட்டும்  இந்த அரசியல் பித்துக்குளிகளின் கீழ்மைநிலையை என்னென்று சொல்வது?.

சுய தரிசனம் தேவை;
மேடம் ஜெ. அவர்களுக்கும் அவரது தொண்டரடிப் பொடிகளுக்கும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
7.10.2014
Post a Comment