Thursday, August 19, 2010

காதல் அல்ல இது,காமம்!

இன்று வலைத் தளங்களில் பெரும்பாலான இளைஞர்களும் இளங் கன்னியரும்
தங்கள் காதல் உணர்வுகளைக் கவிதை என்ற பெயரில் கண்ணறாவிக் கருத்துக்களையே பதிவு செய்து வருகிறார்கள். 


நன்கு எழுதத் தெரிந்தும் சிலர், விளம்பரத்துக்காக அதை ‘ஆஹா …அற்புதம்..புதிய பாணி; புதிய சிந்தனை’என்று போற்றிப் புகழ்ந்து எழுதிவிடுகிறர்கள்.


குறிப்பாக,தாங்கள் ஏதோ,அம்பிகாபதி – அமராவதிகள் போல் எண்ணிக்கொண்டு, கவிதை கவிதையாய்ப் புலம்பித் தள்ளி, தாஜ் மஹால்களையே கட்டிவிடுகிறார்கள். விளைவு,பிண நாற்றம்…..கொஞ்ச நாட்கள் கழித்துப் பார்த்தால் தெரியும்,இன்றைய அமாரவதிகள் நாளை வேறொரு அம்பிகாபதியுடன் அல்லது இன்றைய அம்பிகாபதிகள் இன்னொரு அமராவதியுடன் ’ஜம்’மென்று ‘செட்டில்’ ஆகி இருப்பார்கள். யாராவது தெரிந்து தோழிகள் அல்லது தோழர்கள் இந்த முன்னாள் காதலைப் பற்றிக் கண்ணடித்துக் கேட்டால்,’இவர்கள்,’அது ஒரு கனாக் காலம்’என்று இன்னொரு கவிதை பாடுவார்கள்…..இதைவிடக் கண்ணறாவிக் கொடுமை என்னவென்றால், தன் பழைய காதல் கவிதையை ’இவன்’ அவளுக்குப் பாடிக் காட்டுவதும்,பதிலுக்கு ’இவள்’ அவனுக்குத் தன் பாட்டுத் திறத்தைக் காட்டுவதும் உண்டு.,


இதைப் பற்றி நாம் முகநூலில் (FACEBOOK)  நான் பதிவு செய்திருந்த கருத்தை 
இங்கே தருவது நம் வாசகர்களுக்கு ஏற்புடையதாயிருக்கு என நம்புகிறேன். 




காதல் அல்ல,இது காமம்!
---------------------------------------------


காதலில் ஏற்படும் தோல்விகளில்
புலம்புவதைத் தவிருங்கள்;


நண்பர்களே..
காதல் மட்டுமா மனித வாழ்க்கை?


காதல் கொண்ட மனது,
அதன் வசப் பட்டிருக்கும்போது'
நிற்கின்ற இடம் சேறு'
என்று கூடப் பார்ப்பதில்லை
.
காதலியையோ,
காதலனையோ
ஒருவர்
விட்டுப் பிரியும்போதுதான்,
'தான் சேற்றில் நிற்கிறோமே'
என்று புலம்பச் சொல்கிறது
மனம்!


நண்பர்களே,
காதல் என்பது எல்லோருக்கும் வருவதுதான்.
ஆனால்,
வருவதெல்லாம் காதல் அல்ல;
காமம்' என்கிற கொடுமை!
அது-


வரும்போதே கண்களைக் குருடாக்கி விடுகிறது!
பிறகு,
எங்கே நாம் பார்த்துப் பார்த்துக் காதலிக்கிறதாம்?


விழித்துக் கொண்டு காதலிக்கிறவர்களே
புத்திசாலிகள்;
அவர்கள்-
காமத்தைத் தடுத்து விடுகிறார்கள்;
காதலித்துவிட்டுப் பின் புலம்புகிறவர்களோ
புத்திகாலிகள்;
அவர்கள்-
காமத்தில் தடுக்கி விழுகிறார்கள்!


உண்மையான காதலின் தோல்வி,
நல்ல கவிதைகளாக மாறும்;


காமத்தினால் ஏற்படும் சறுக்குதலோ,
‘கவிதை' என்றபெயரில் நாறும்.


தயவு செய்து-


உங்கள் வலைத் தளங்களில்
காதலைச் சொல்லுவதாகக்
கற்பனை செய்து கொண்டு
காமத்தின் துர்நாற்றத்தைப் பரப்பாதீர்கள்!


ஆகவே,
நண்பர்களே.....!
காதலில் ஏற்படும் தோல்விகளில்
புலம்புவதைத் தவிருங்கள்!


காதல் மட்டுமா மனித வாழ்க்கை?


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
28.7.2010

1 comment:

V.Rajalakshmi said...

எழுதுங்கப்பா ஆனால் ஆண்கள் மட்டும்தான் !!