Wednesday, March 25, 2015

’கிரிகெட் கிறுக்கை’வளர்க்காதீர்!

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம். 

இந்திய கிரிகெட் அணி வெற்றிகளைக் குவிப்பதில்தான் இந்தியாவின் பெருமையும் ஆற்றலும் உலக அரங்கில் இருப்பதாகக் கருதிக் கொள்ளும் பேதைமை ’ஆறாங்கிளாஸ்’ ’ஏழாங் கிளாஸ் ‘பசங்களுக்கு இருப்பதில் பிழை இல்லை. 

ஆனால் சமூக விழிப்புணர்வுக்குரிய ஆன்மீகம், அரசியல் இலக்கியச் செய்திகளை எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளும் பலருக்கும் இந்தப் பேதைமை இருப்பதுதான் நமக்குள் ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிடம் பாகிஸ்தான்  தொடர்ந்து தோற்று வருவதில் கிரிக்கெட்டில் பித்துக் கொண்டிருக்கும் பலரும் எதிரியை அடித்துத் துவைத்து கிழித்தெறிந்து விட்டதுபோல் புளகாங்கிதம் கொண்டு ஆரவாரம் செய்வதும்  

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் இந்தியா தோற்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய அணிக்கு ,ஊக்கம் தருவதாக எண்ணிக்கொண்டு ஆஸ்திரேலியா அணியை மட்டம் தட்டி எழுதியும் பேசியும் மகிழ்ச்சி காண்பதும் 

’பேதைமையான  குதூகலிப்புக்கள்’ என்பதை இவர்கள் உணர்வதில்லை.

விளையாட்டை விளையாட்டாய் ரசிக்கத் தெரியாமல் ஏதோ இரு நாடுகளும் யுத்தக் களத்தில் நேருக்கு நேர் நிற்பதுபோல் கற்பித்துக் கொண்டு,அறிவற்ற ரசிகர்களாக, எதிரி  நாட்டு வீரர்களோடு கற்பனை யுத்தம் செய்யும் அற்ப மானிடராய் நம்மில் பலர் ஏன் மாறிப்போனார்கள்? 

’கிரிக்கெட்’ என்பது வீர விளையாட்டு அல்ல; அது விளையாட்டு என்ற பெயரால் சூதாட்டத்தின் சூட்சும மையமாகிப் போன சோம்பேறிகளின் சொர்க்கம் என்பதைக் கடந்த காலங்களில் நிரூபித்துக் கொண்ட விளையாட்டு.

இந்தியாதான் ,உலக அரங்கில் பணம் கொழிக்கும் பந்தய பூமிக்குள் கிரிக்கெட் பந்துகளை எறியச் செய்து இன்று பத்துப் பன்னிரெண்டு நாடுகளின் விளையாட்டு ரசிகர்களை ஈர்த்த பெருமைக்குரியதாகி இருக்கிறது. 

எப்படியாவது இந்தியாவை இந்த விளையாட்டில் தோற்கடித்து விட்டால் காஷ்மீர் .மாநிலத்தையே பாகிஸ்தானுடன் சேர்த்து விட்ட பெருமையை அந்நாட்டு ரசிகர்கள்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்குத் தந்து விடுவார்கள்; 

எப்படியும் தோற்காமல் வெற்றியே பெற்று வந்தால் நம் வீரர்கள் பாகிஸ்தானைக் காஷ்மீர் பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாமல் செய்து விட்டது போல் இவர்கள் கொண்டாடுவார்கள்.

இப்படித்தான் இந்தக் கிரிக்கெட் விளையாட்டில் நம் தேசபக்தி  பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. 

இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னால் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கால் இறுதியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணியை அப்படி, இப்படி என்று இல்லாமல் ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேரணியாய்ச் சிலாகித்துப்பேசிக் கொண்டிருந்தார் என் நண்பர் ஒருவர்..

”உங்கள் தேசபக்திக்கு வாழ்த்துக்கள்; எதிர் வரும் போட்டிகளில் இந்திய அணி தோற்றுவிட்டால் எப்படி இருக்கும் உங்கள் விமர்சனம்?” என்று கேட்டேன்.

கொதித்துப் போனார் நண்பர்; ”உங்களுக்கெல்லாம் தேச பக்தியே இல்லை’ இந்தியாதான் இறுதிவரை வெற்றியை நாட்டும்; பாருங்கள் கோப்பை இந்தியாவுக்கே”  என்று என்னை ஒரு முறை முறைத்து விட்டு எக்காளமிட்டார்.

’நாளை நி்யூஸிலாந்துதான் கோப்பையை வெல்லும்’ என்று என் மனம் ஊகிக்கிறது. அப்படியே ஆனாலும்  ‘என் நாடு இந்தியா’ என்கிற செருக்கில் என் தலை தாழ்ந்து போகாது’ வேண்டுமானால் பாருங்கள்’ என்றேன். 

நண்பர்களே,

இப்பொழுதும் சொல்கிறேன்; இந்தியாவின் கவுரவமும் பெருமையும் அதன் கிரிக்கெட் வெற்றியில் இல்லவே இல்லை; கிரிக்கெட் ஒரு வீர விளையாட்டல்ல;அது ஒரு மூளைத்திறன் சார்ந்த விளையாட்டுத்தான் (Mind Game)

இதை விளையாட்டாகவே ரசிக்கப் பழகுங்கள்!

இந்தியா தோற்றுப் போனால் அதனால் அதன் மானமும் கவுரவமும் இந்திய கிரிக்கெட் வீரர்களால்  கவிழ்ந்து போனதாகவோ அவர்களால்தான் இந்தியாவின் கவுரவம் பாழாக்கட்டுவிட்டதாகவோ  சுனாமியாகச் சீறாதிருங்கள்!

புகழ்மிக்க பிரிட்டீஷ் சிந்தனையாளரான பெர்னார்ட் ஷா ஒருமுறை சொன்னதை இந்தக் கிரிக்கெட் கிறுக்கர்கள் நினைவு கொண்டு  நிமிர்ந்து கொள்வது நல்லது:

“மைதானத்தில் 11 முட்டாள்கள் ஆடுவதை  11 ஆயிரம் முட்டாள்கள் ரசிக்கின்றார்கள்”

இந்தக் கிறுக்குப்பிடித்த கிரிக்கெட் பைத்திய முட்டாள்களை திருத்துவதற்குப் பதில் உற்சாகப்படுத்தி எழுதும் முட்டாள் தனத்தை மூளை உள்ளோர் செய்ய மாட்டார்கள். 

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.3.2015

No comments: