Tuesday, March 17, 2015

இது சாபமல்ல: எச்சரிக்கை!





இது சாபமல்ல: எச்சரிக்கை!

நம் முன்னோர்கள் வாழ்ந்த முறைமையும் அவர்கள் நமக்கெல்லாம் சொல்லிவைத்த பண்பாட்டு ஒழுக்க நெறிகளும் இன்றைய தலைமுறையினருக்கு அந்நியமாகிப் போய் விட்டன.

முன்னோர் சொன்ன நெறிகளையெல்லாம் ’பத்தாம் பசலிக் கொள்கை’  எனப் பரிகசிக்கும் அவர்களைப் பரிதாபப்பட்டுத்தான் பார்க்கின்றேன்.

உண்மையில்-
குடும்பம் சமூக மரியாதை கட்டுப்பாடு மிக்க ஒழுக்கவியல் இவற்றை நமது சந்ததிகள் முன்னே வாழ்ந்து காட்டும் வைராக்கியம் இன்றி, சந்தர்ப்பத்துக்கேற்ப  வளைந்து கொடுத்து போலி சுகங்களுக்காகவும்   பொய்யான ஆடம்பரங்களுக்காகவும் பிழைபட்டு நின்று வாழ்கின்றவர்களாய் நாம், நமது பண்பாட்டியலைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைய தலை முறையினருக்கு நமது முன்னோர் வாழ்ந்த கட்டுப்பாடு மிக்க ஒழுக்கமும் உயர் நெறிகளும்  கற்கால மனிதர் வாழ்வுபோல் காட்டப்பட்டுள்ள அவலம் கண்டு உண்மைத் தமிழ் உள்ளங்கள் ஊமையாகிக் கையறு நிலையில் கண்ணீர் சிந்துகின்றன.

’உலக மயமாக்கல்’ என்ற காட்டாற்று வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி அதனை பண்பாட்டு வாழ்வெனும் பயன் மிக்க வயலுக்கு உரமாக்கும் பாசனமாய்க் கொள்ளும் திறன் இன்றி  அந்த வெள்ளத்தில் உருண்டோடும் பாறைகள் போல் நமது மரபும் ஒழுக்கவியலும் ஆகி விட்டன.

’உலகமயமாக்கல்’என்பது மனித அறிவின் பரிணாம வளர்ச்சி; ஆனால் அதை உணராது ‘உலகமயமாதல் என்பதில் மகிழ்கின்ற/பெருமைப்படுகின்ற நிலையை என்னென்பது?

`அறிவின் வீழ்ச்சி’ தான் அது.

அதைத்தான் இன்றைய தலை முறையினர்  ஆரவாரம் செய்து கொண்டாடுகின்றனர்.

இந்தப் பாகுபாட்டை உணராது, செல்லுலாயிட் சுகங்களிலும் சிந்தனையற்ற  நாகரிகங்களிலும் நாம் நம் பயணத்தைச் செலுத்திக் கொண்டிருப்போமானால் நம் கண் முன்னமேயே, நமது பிள்ளைகள் நம் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் போய், இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளில் உண்மைத் தமிழனின் அடையாளம் அவனுக்கே அந்நியப்பட்டுப்போகும்!

இது சாபமல்ல: எச்சரிக்கை!

தமிழா விழி;
அது -
‘உனக்காக இல்லாமல், உனது பிள்ளைகளுக்காக’
என்றிருக்கட்டும்!  .

No comments: