Sunday, September 4, 2011

சிந்திப்பீர் நண்பர்களே..! (எழுதுகிறேன் - தொடர்:11)

அருமை நண்பர்களே,
வணக்கம்.


எனக்குள் ஓர் நிறைவை இங்கு, முக நூல் நண்பரும் பண்பாட்டுப் பாவலரும் முகநூலில் பல்லோரின் ஆசானுமான தோழர் இராஜ.தியாகராஜன் ஏற்படுத்தியிருக்கிறார்.

‘இது எனது இயல்பு’ என்றொரு கவிதையை இங்கு சில நாட்களுக்கு முன் நான் எழுதிப் பதிவு செய்தமைக்கு அவர் எழுதியிருந்த வார்த்தைச் சான்றிதழ்தான் அது.


அவர் இப்படி எழுதியிருந்ததை எனக்குரிய கர்வத்தோடு மீண்டும் இங்கே வாசக நண்பர்களுக்கு வெளிச்சம் இட்டுக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.அவர் எழுதினார்:


இராஜ. தியாகராஜன்): மிக நன்று சந்தக்கவிமணியாரே! உங்கள் எழுத்துகள் என்றுமே எனை ஈர்ப்பவை! காணும் காட்சிகளின் உலகியல் இயல்பு; நிறைய ஆதங்கம், உள்ளீடானத் தேடல்களுடன்; எவரிது என்று தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் வீரம்; உங்களின் படைப்புகள் நூலாக வெளியாகி உள்ளதா? (நான் 600க்கு மேல் பாடல்எழுதி இருப்பினும், வாழ்வியல் வசதிகள் இருப்பினும், இன்னும் வெளியிட நேரம் வரவில்லை!) இருந்தால் பதிப்பகம் பெயர்/முகவரி/ தொலைபேசி சொல்லுங்கள். 29 August at 21:50 ·


நான் அவருக்கு எழுதினேன்:


@இராஜ. தியாகராஜன்: அருமைத் தோழரே, உங்கள் அன்பு நிறைந்த எண்ணங்களுக்கு நன்றி.


முன்பு 1987 களில் ‘இந்த ராஜ பாட்டையில்....’ என்ற எனது புதுக் கவிதைத் தொகுப்பு வெளியாகிற்று. அதற்கு முன்பு கண்ணதாசன், கல்கி,கோகுலம், ஆனந்த விகடன்,சுதேசமித்திரன், அலிபாபா,வாழும் தமிழ் உலகம் இதழிகளிலும் பிற இதழிகளிலும் எனது கவிதைகள் நிறையப் பிரசுரம் பெற்றிருந்தன.


மரபு சார்ந்த கவிதைகளில்தான் எனது ஈடுபாடு அதிகம். எனினும் அவற்றை நூலாக வெளிக் கொணர வேண்டும் என்கிற ஆர்வம் அந்த ஒரு நூலுக்குப் பிறகு நலிந்து விட்டது.


எந்தப் பதிப்பகத்தாரையும் சென்று பல்லிளிக்கும் பண்பு எனக்கில்லை என்பது இதில் முக்கியக் காரணம். பதிப்பகத்தாருக்கும் ’என்னை ஏமாற்ற முடியாது’ என்பது தெரிந்திருக்கிறது என்பது அடுத்த காரணம். ‘ மாணிக்கத்தைக் குப்பைக்குள் போட்டுத்தான் காட்ட வேண்டும்’ என்ற பழமொழியில் எனக்கு நம்பிக்கை இல்லாது போனதால் ’பல்வேறு குப்பை நூல்களுக்கு நடுவே எனது நூலை விற்பனைக்கு வைக்க வேண்டுமா?’ ன்ற திமிர் மூன்றாவது காரணம்.


இப்போது அதைவிடப் பெரிய குப்பையாக இந்த ’முக நூல்’கிடைத்து விட்டபடியால் ’ இதற்குள் கொஞ்சம் வைரங்களையும் புதைத்து வைக்கலாமே’ என்ற ஞானம் பிறந்து விட்டது. அதனால் இப்போது பதிப்பகத்தின் ஞாபகமே இல்லாது போய் விட்டது.


இது இருக்கட்டும் தோழரே,


நல்ல நூல்களை வெளியிடும் தகுதி யாருக்கு வருகிறது என்று காத்திருக்கின்றேன்.எனக்குப் பலரைத் தெரியும். இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் சமூகப் பார்வை கொண்ட படைப்பு நூல் ஒன்றையும் வெளியிடும் அளவுக்கு விஷயக் களஞ்சியம் இருக்கிறது.


இந்த விஷயங்களுடன் உங்கள் படைப்புக்களையும் இப்போது கருத்திற் கொண்டுள்ளேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். முதலில் நாம் நேரில் சந்திக்க வேண்டும்.


இந்தப் பதிவைத் தாமதமாக எழுதுவதற்குப் பொறுத்தருள்வீர்.


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
4.9.2011


அறிவார்ந்த நண்பர்களே,நண்பிகளே,,
அருமைத் தோழர் திரு.இராஜ தியாகராஜன் அவர்கள் இந்த முக நூலின் தகுதிமிக்க பண்பாளர்;படைப்பாளர்; பாவலர்; தமிழையும் அதன் நுண்மான் செறிவையும் அறிந்தார்க்கும் அறியாதவர்க்கும் ஆசானாகி எடுத்துரைப்பவர்.
எனது பதிவுகளை அகநிறைவோடு அவர் தொட்டுச் சொல்லியிருப்பதில் உண்மையாகவே எனது எழுத்தின் இறுமாப்பு இன்னும் ஏறி நிற்கிறது என்றே சொல்வேன்.


ஏனெனில், கற்றாய்ந்த அறிவுடையோர் இங்கே மிக மிகக் குறைவு.
அரைகுறைகளே அதிகம் ஆட்டம் போடுகின்றன. கணினியைக் கையில் எடுத்துக் கொண்டு பேசுவோர் 90 சதம் இளைஞர் இளைஞிகளே.
படித்தவர்;பண்புடையோர்;;பெரியோர் என்றிருப்போரில் 90 சதவீதம் பேருக்குக் கணினியில் பேசும் ஆர்வமோ அக்கறையோ திறனோ இல்லை!
எனவே கணினியையும் முக நூல்,இணைய தளம்,போன்ற நவீனத் தொடர்புகளையும் பயன் படுத்திக் கொண்டு நமது மேன்மையான பண்புகளை மறந்து,மேலைக் கலாசாரத்தின் சீர்கேடுகளில் சிக்கிக்கொண்டு, ’உலக மயம்’ என்றும் ’உன்னதமான நாகரீகம்’ என்றும் கொண்டாடத் தலைப்பட்டுள்ள நமது இளைய சமுதாயத்தினருக்கு ’எது நல் வழி: எது நம் முன்னோர் காட்டிய உயர் வழி? பண்பாடு? எது நம் மொழியின் மாண்பு?;அதன் இனிமை;பெருமைகள் எல்லாம்’ யாதெனெச் சொல்லும் அறிவும் ஆற்றலும் கொண்டோர் இங்கே அதிகம் இல்லாதிருப்பது நிஜம்.


எனவே,இதற்கு மாற்றாக,தமிழின் உயர்தனிச் சிறப்புக்களை எடுத்துச் சொல்லவும்,நமது சமூகச் சிந்தனைகளின் முக்கியத்துவத்தை நிலை நாட்டவும்;எளிய சொற்களில் இனிய கவிதைகள் சொல்லி அதன் மூலம் நமது இலக்கைக் காட்டவும் முடிவு செய்து ஒரே நாளில் இந்த இணைய தளத் தொடர்புகளைக் கற்றுக் கொண்டேன் என்பது, தமிழின்பாலும் அதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற தணீயாத ஆர்வதினாலும்தான்.


எவருடைய துணையும் இன்றி இந்த ‘முக நூல்’ ,வலைத்தளம் முதலானவற்றை ஏற்படுத்தி,தமிழில் எழுதும் முறையையும் ஒரு அரை மணி நேரத்தில் நானாகக் கற்றுக் கொண்டது ஓர் ஆச்சர்யமான விஷயம். இதற்கு நேரிடைச் சாட்சி ;இதே முக நூலில் நண்பனாக இருக்கும் திரு.முத்தையா தயாளன்தான்.


அது ஒரு தனிக் கதை;என்ற போதும் சுவையானது;நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டியதுதான்.


சென்ற ஆண்டு நெல்லையில் SCAD என்ற குழுமங்களின் பொறியியல் கல்லூரிகளின் வேலைவாய்ப்ப்பு மற்றும்பயிற்சித் துறை இயக்குநராக நான் இருந்த சமயம், எங்கள் கல்லூரிக்கு சொற்பொழிவாற்ற எனது மதிப்பிற்குரியவரும் தமிழ்ச் சமுதாயத்தின் ‘தமிழ்க் கடல்’ எனப் போற்றப் படுபவருமான ’அய்யா நெல்லைக் கண்ணன் அவர்கள் வந்தார்கள்.


நீண்ட காலமாக அவரை நேர் நின்று பழகவும். நட்புக் கொள்ளவும் கனவு கண்டிருந்த எனக்கு அவரை வரவேற்பு செய்யும் வாய்ப்பு அமைந்தது.


‘அம் மாபெரிய சான்றோனுக்கு எதைத் தந்தால் அவர் மனம் குளிரும்’ என்று எனக்குள் பேரலையை ஏற்படுத்தியது. இருப்பதோ 24 மணி நேர அவகாசம்.


அவருக்குத் தமிழால் மாலை சூடுவதை விடப் பெரிய பரிசு வேறு எதுவும் இருக்க முடியாதென மனம் சொல்லிற்று.உடனே ’மட மட என்றொரு கவிதை நதி ஊற்றெடுத்தது. அரை மணித் துளியில் ஒரு வரவேற்புரையைக் கவிதை நடையில் எழுதி விட்டேன். எனது சக அலுவலர்கள் சிலர் அந்தக் கவிதையைப் படித்து விட்டு அற்புதம் என்றனர். எனது படைப்பின் மெருகும் பவிசும் வெகுவாகக் கூடி விட்டது.

‘சரி,இதை அழகான வடிவத்தில் கணினியின் மூலம் அச்சிட்டு அழகு படுத்த வேண்டுமே?’. அவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தில் உடனடியாகத் தமிழில் ‘டைப், செய்து தரும் திறமையுள்ள ஊழியர் அந்தச் சமயத்தில் இல்லை. இனி நெல்லையின் வீதிகளில் சென்று உரிய கடையைத் தேடி ‘டைப்’ செய்யும் மனோ நிலையோ நேரமோ இல்லை.


‘எனக்கும் வெகு நாட்களாக நமது கவிதையை நாமே கணினியில் அடிக்க முடியாத நிலை கேவலாமாக இல்லையா?’ என்று எனக்குள் ஒரு கேள்வி தொடர்ந்திருந்தது.


எனக்கு நவீன கணினி வசதிகளை SCAD நிறுவனத் தலைவர் தந்திருந்தார். இதைவிட வேறு என்ன வேண்டும்? எத்தனை நாள்தான் பிறரைச் சார்ந்திருந்து நமது தமிழைப் பிறர் பிழைபட எழுத,திருத்தும் நிலை தொடர்வது?


சிந்தித்த மனம் ,கணினியில் அமர்ந்து தமிழ் SOFTWARE ஐ இறக்குமதி செய்து அரை மணி நேரத்தில் எனது தமிழை நானே அச்சில் ஏற்றும் திறனை நிரூபித்துக் கொண்டேன்.


யாரும் நம்பவில்லை;நானே அந்த ’அற்புதமான’ வரவேற்புக் கவிதையை ‘டைப்’ செய்தேன் என்பதை. ஆனால் எனது சக ஊழியரான முத்தையா தயாளன்தான் அருகிருந்து வியந்து மகிழ்ந்த நண்பர்.


பிறகென்ன அடுத்த நாள் மேடையில் அய்யா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கு எனது வரவேற்புக் கவிதையை நீட்டிய கணமே,அவருக்கு நான் ஆயுட்கால நண்பனாக மாறிவிட்டேன்.


ஆயிரக்கணக்கான வரவேற்புப் பத்திரங்களைப் பெற்றிருக்கும் அந்தப் பெரியோன், ‘இந்தச் சிறியோனின் வாழ்த்துக் கவிதையைத் தனது அறைக்கு வருகின்ற அத்தனை பேரும் படிக்கவும் மகிழவும் இன்று மாட்டி வைத்திருப்பது ஒன்றே‘ எனது தமிழுக்கு வழங்கப் பட்டிருக்கும் தரச் சான்றிதழ் என தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றேன்


தமிழ் இலக்கியங்களிலும் அதன் பண்பாட்டுச் சிகரத்திலும் செம்மார்ந்த ஆன்மிகச் செறிவிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் அந்தத் தமிழ்க் கடல் விரும்பும் என் எழுத்துக்களைத்தான் இங்கே அரங்கேற்றி வருகின்றேன்’ என்பதைச் சொல்லவே இந்த நிகழ்ச்சியை மேற்கோள் காட்டுகிறேன்


நண்பர்களே.


எனது மதிப்பிலும் நட்பிலும் சிந்தனைகளிலும் நிறைந்திருக்கின்ற பண்பட்ட படைப்பாளர்களும் பார்வையாளர்களும் பலர் இந்த முக நூலில் இருக்கின்றார்கள்.அவர்களில் ஒரு சிலரை பட்டியலிடுவதென்றால் எனக்குப் பாயசம் சாப்பிடுவதுபோல்.

அவர்களில் தோழர் இராஜ தியாகராஜன் குறிப்பிடத் தக்கவர். எனது எழுத்தைப் பாராட்டியிருக்கிறார் என்பதாலேயே இப்படிக் குறிப்பிடுகிறேன் என்று எண்ணி விடாதீர்கள்.


எனது முக நூலைத் தொடர்ந்து படித்து வருகின்றவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

மன்னார்அமுதன்,மணிவண்ணன்,சு.போ.அகத்தியலிங்கம்.அன்புடன்பொன்னிவளவன், ஸ்ரீராம்கிருஷ்ணசாமி, சாலைமாணிக்கம்,  யமுனேஸ்வரிஆறுமுகம், ரவிசாரங்கன், தமிழாகரன்சிவம், உதயன்சத்தியானந்தன், லோகநாதன் பொன்னுசாமி மற்றும் சிலர் எழுதி வரும் எழுத்துக்கள் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் நமது உயர்பண்பாட்டுச் செறிவுக்கும் உகந்தவை; உரமானவை.


இன்னும் சிலர் இருக்கின்றார்கள்.தர வரிசைப் பட்டியலிட்டு தரம் கெட்டவர்களைக் காட்டுவது என் நோக்கம் அல்ல;இவர்களின் வரிசையில் நின்று எனக்கெனத் தனி நடையுடன் கவிதையும் கட்டுரையுமாய்த் தருகிற ’எனது நோக்கத்தின் நுணுக்கம் இங்கு பலருக்கும் பட வேண்டும்;அதுவே பரவ வேண்டும்’ என்பதே எனது விழைவு.


ஆம் நண்பர்களே, அதற்காகவே, இந்த முக நூலை ‘சிறு பிள்ளைத் தனத்துக்கு இரையாக்கி விடாமல் எழுத்தின் மாண்பினை நிலை நிறுத்தும் நோக்கோடு இங்கே பதிவுகள் செய்து வருகின்றேன்.


எனது நாவும் பேனாவும் என்றைக்குக் தடம் புரளாமல் தடம்புரள்கிறவர்களைச் சாடியும் நல்ல தடம் காட்டுகிறவர்களை நாடியும் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதை இங்குள்ள எனது நண்பர்கள் அறிவார்கள்.


இந்த முக நூல் பதிவுகளில் எவரேனும் எனது எல்லைகளில் ( எனக்கு tag செய்தோ எனது சுவற்றில் இணைப்புக் கொடுத்தோ) ‘விரசத்துடன்’ கருத்துக்களைச் சொன்னால் கண்டிக்கும் குணம் என்னை ஆட்கொண்டு விடுவதையும்;அதே சமயம் கொஞ்சம் ’ரசமான’ இலாக்கியத் தரம் சார்ந்த காதல் சிந்தனைகளை நான் எழுதும்போது எனது நண்பர்கள்..’ஸார்... நீங்களுமா?’ என்றும் ‘ அய்யோ... நம்ப முடியவில்லை ஸார்’ ” என்றும் கேட்டு,கிட்டத்தட்ட என்னை ஓர் சன்னியாசி நிலைக்கு மேல் காண்பதற்கு விருப்பபடாதவர்களாகவும் ஆன நிலையைக் காணலாம்.


ஏன்,இதைச் சொல்லுகிறேன் என்றால், இங்கே தரமான இலக்கியச்சுத்தம் நிறைந்த, சமூக நோக்கம் கொண்ட,நம் பிள்ளைகளின் நலமான எதிர்காலச் சிந்தனைகளை உள்ளடக்கிய, தமிழின் மேன்மையைப் பறை சாற்றுகின்ற படைப்புக்களைத் தரும்போது அவற்றை உள்வாங்கிக் கருத்துக்கள் வழங்குவோர் மிக மிகக் குறைவு. அப்படியே வழங்கினாலும் nice, good, aahaa, nandru என்ற சொற்களுக்கு மேல் அவர்கள் எழுதுவதற்கு விரும்புவதில்லை ஆனால் உப்பு சப்பில்லாத விஷயங்களில் தலையிட்டு மிகப் பெரிய வாதங்களே நடக்கின்றன.


ஒரு பக்கம் ’காதல் கவிதை’ என்ற பெயரில் ஒப்பாரிகள்; சாக்கடையையும் மிஞ்சும் சண்டப் ப்ரசண்டங்கள்; எங்காவது ஒரு பெண் ’தத்துப் பித்தென்று’ எதையாவது பதிவு செய்து விட்டால் அழுகிப் போன பழத்துக்கு மொய்க்கும் ஈக்களாக ஆண்கள் (?) கூட்டம்; பதிவுக்கும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லாத துப்பல்கள்; பருவக் கோளாறுகளின் பரவசப் பார்வைகள்; வெட்கங் கெட்ட விரச வரிகளையே தொடர்ந்து எழுதும் பெட்டைகளின் பித்துக் குளிப் பிதற்றல்கள் …. என்று தாராளமாகவும் ஏராளமாகவும் இங்கே சந்தைக் கடைபோல் விரிந்து கிடக்கின்றன.


அத்தகைய விஷ(ய)ங்களுக்கு நடுவே, ’விலை மதிப்பில்லா வைரங்கள்’ என வார்த்தை மணிகளை இலவசமாகக் கடை விரிக்கின்றவர்களில் நானும் ஒருவன்‘ என்பதை இங்கே முரசறைந்து முழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது,நண்பர்களே.


நல்ல பண்பாட்டை நேசிப்போரும் ’இளைஞருக்குரிய நல் வழி காட்டுதல்கள் தேவை; என்று வாசிப்போரும் இங்கு பெருக வேண்டும்.


சிறுபிள்ளைத் தனமும் சீரழிந்த சிந்தனைகளில் மூழ்கும் குணமும் நம் இளைய சமுதாயத்தினரிடையே குறைய வேண்டும்.

அதற்கேற்ற வகையில் உங்கள் கருத்தாடல்களையும் பின்னூட்டங்களையும் எழுதுங்கள். எங்கெல்லாம் எழுத்தின் மேன்மையும் உண்மையும் பதியப் படுகின்றனவோ அங்கெல்லாம் மனம் திறந்து பாராட்டுங்கள்; எங்கெல்லாம் சீரழிக்கும் சிந்தனைகளும் சிரம் குனியும் பதிவுகளும் பரப்பப்படுகின்றதோ அங்கெல்லாம் சீறி எழுங்கள்..

சிறுமதியாளர்கள் திருந்தி நல்ல எழுத்துக்களைத் தரும்படிக்கு உங்கள் கவனம் இங்கே பதிய வேண்டும்.

அதன் சின்னமாகவே அருமைத் தோழர்,பாவலர் இராஜ தியாகராஜன் அவர்களின் சான்றிதழ் இதுவெனச் சொல்ல எழுந்தது இக்கடிதம்.

சிந்திப்போர் எழுதுங்கள்;சிந்தையுடையோர் பதியுங்கள்.

உண்மையுடனும் உரிமையுடனும்-
கிருஷ்ணன்பாலா
4/9/2011


1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி ஐயா.