Wednesday, September 14, 2011

முகநூல் முற்றம் - அறிவிப்பும் அழைப்பும்.

உலகத் தமிழர் மையத்தின் நண்பர்கள்
அனைவருக்கும் வணக்கம்.


’முகநூல் முற்றம்’ என்ற “புதிய - புதுமைக் குழுமம் ஒன்று முகநூலில் (FaceBook) தொடங்கப் பட்டுள்ளது” என்பதை இதன் வாயிலாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மகாகவி பாரதியின் நினைவு நாளில் (செப்டம்பர் 11) அவனையே ICON (அடையாளச் சின்னம்) ஆகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த ’முகநூல் முற்றம்’ ( Elite Friends in FaceBook) புதுமையும் பொறுப்பும் அர்த்தமும் மிக்க சிந்தனைகளுக்கு இடமும் மதிப்பும் அளிக்கின்ற வகையில் நேர்மையோடும் வாய்மையோடும் அதே சமயம் துணிவோடும் இது செயல்படும் என்பதற்கு உத்தரவாதம் உண்டு.


அதற்கு இங்கே இணையும் ஒவ்வொருவரும் இதன் நேர்மையையும் தூய்மையையும் முழுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும்’ என்பதுதான் ஒரே நிபந்தனை.


இதன் ”நேர்மையும் தூய்மையுமான நெறிமுறைகள் என்ன?” என்பது விரைவில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்புக்கள் அவ்வப்போது எனது முகநூல் பகுதியிலும் ’முகநூல் முற்றம்’ பகுதியிலும் இங்கு-உலகத் தமிழர் மையம் ‘வலைத்தளத்திலும்“முகநூல் முற்றம் அறிவிப்பு” என்ற தலைப்பில் வெளியிடப் படும்.


’சக்தி மிக்க இந்த சமூக வலைத் தளத்தின் சக்தி என்ன ?’ என்பதை அறியும் அறிவின்றி, “ஏதோ,இலவசமாக நமக்கு வசமாகக் கிடைத்துள்ளதே” எனக் கருதிக் கொண்டு, எண்ணற்றோர் இதனை அசுத்தப் படுத்தி வருகிறார்கள்.. “இது இலவசமாகக் கிடைத்த சுவர்தானே’ என்று கண்டதையெல்லாம் கிறுக்கி வைத்து நமது பண்பாடுகளையும் பயன்பாடுகளையும் அவர்கள் பாழ்படுத்தி ‘ஆறுவயதுக்கு மேல் அறிவு வளராத அரைகுறை மனிதர்களாய் இந்த சமூக வலைத் தளத்தின் மாண்பைச் சீர்குலைத்து வரும் நிலையில் அதற்கான எதிர் நிலையை நாம் எடுத்தாக வேண்டும்’ என்ற உந்துதல் நமக்கு ஏற்பட்டது. அந்தச் சமூகக் கடமையின் பிரதிபலிப்பே இந்த ‘முகநூல் முற்றம்”


இன்றைய உலகின் மிகப் பெரும் தகவல்,அறிவுத் தொடர்புச் சாதனமும் முகநூல் (FACE BOOK) சமூக வலைத்தளமும் ஆன அதில் அறிவுடையோரும் சிந்தனையாளர்களும், பண்பாளர்களும் சமூக ஆர்வலர்களும் அறிஞர் பெருமக்களும் ஒன்றாக அமர்ந்து உறவாடும் முற்றமாக - ஓர் பகுதியை வரைமுறை செய்தால் என்ன?


இந்த சிந்தனையின் விளவாகத் தோன்றிய இந்தச் சீர்மையை இங்கே தகுதி வாய்ந்தோர் செவி மடுக்க வேண்டும் என்பதென் விருப்பம்.


இப்போதைக்கு இம்முற்றத்தைப் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப் படுத்திப் பின்னர் தனித் தகுதி வாய்ந்த இலக்கியச் சிந்தனைகளும் படைப்புக்களும் சமூக அந்தஸ்தைப் பெறும் வகையில் இதன் செயல்முறைகள் செப்பனிட்டுச் சீராக்கி நிலைநிறுத்தப் படும்.

நமது எண்ணங்களுக்கு உறுதுணையாக அறிவு ஜீவிகளிடத்திலும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களிடத்திலும் இருந்து வரும் ஆதரவுக்கேற்ப இதனை நமது பண்பாடு,கலை,இலக்கியம், ஆன்மீகம்,கல்வி,மருத்துவம். அறிவியல் சார்ந்த உயர் நிலைப் பயன்பாட்டுக்குத் தகுந்த ஓர் ‘உயர்தரச் சான்று வழங்கும்’ பீடமாய் இந்த ’முகநூல் முற்றம்’ உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

நோபல் பரிசுகளும் ‘மக்ஸ ஸே’ பரிசுகளும்தான் இந்த உலகில் அறிவுசார்ந்தோரின் மனங்களைக் கவர்ந்து மதிப்புப் பெற்றுத் திகழ வேண்டும் என்பது விதியா, என்ன?

‘இனி ஒரு விதி செய்வோம்;அதை எந்த நாளும் காப்போம்’ என்பது அறிவுக்கும் அதன் செயல்பாட்டுக்கும் உள்ள பரிணாம வளர்ச்சி அல்லவா?

தேசியத் தரம் வாய்ந்த சமூக,இலக்கிய,பண்பாட்டு மேடையாக – தகுதியான சிந்தனைகளுக்கும் படைப்புக்களுக்கும் தரச் சான்று தரும் மையமாக – மதிப்புமிக்க பரிசுகளை வழங்கும் பீடமாக இந்த ’முகநூல் முற்றம்’உருவாக வேண்டும் என்பது எம் லட்சியம்: நாம் எல்லோரும் ஒன்றாக நினைத்தால் அது நிச்சயம்”

அதை நோக்கியே நமது சிந்தனைகள் இருக்கவும்: அதற்காகவே உங்கள் வருகையும் பதிவுகளும் படைப்புகளும் ஊக்கமும் இருக்கவும் விழைகின்றோம்.

நமது வருங்கால இளைய சமுதாயத்துக்குப் புதியதோர் திசையை காட்டும் புண்ணியத்தில் பங்கு கொள்ள நினைப்போர் அனைவருக்கும் இந்த கடிதம் ஓர் தோரண வாயில்.

தகுதியுடையோரெல்லாம் இந்த முகநூல் முற்றத்தில் இணையலாம்; தகுதியுடையவர்கள் என்று நீங்கள் கருதும் உங்களை நண்பர்களையும் இதில் இணையச் செய்யலாம்.

ஆனால் நினைவில் கொள்க:

இங்கே சின்னஞ் சிறார்களுக்கும் சிந்தனைக் கிறுக்கர்களுக்கும் இடமில்லை! இதை மாசு படுத்தப் படுவோர் தடை செய்யப் படுவார்கள்;மற்றவர்கள் மகிமைப் படுத்தப் படுவார்கள்!

உங்களின் நட்புச் சுற்றம் வளர்க!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
12.09.2011


தொடர்புக்கு:
www.Facebook.com/kishnanbalaa/  or muganoolmutram@facebook.com  or krishnanbalaa@gmail.com
Call: 00 91 944440 69234
------------------------------------------------------------------------------------


முகநூல் முற்றம்- அறிவிப்பு எண்:1/13.09.20011


நண்பர்களே,
வணக்கம்.


‘முகநூல் முற்றம்’ எனும்ஓர் குழுமம்
முளைத்துள்ளதையே காண்பீர் இங்கே!
முகநூல் நண்பர் அனைவரும் அந்த
முற்றம் தேடி வரலாம்;ஆனால்
தகவுடன் தமிழின் தனிப் பண்பறிந்து
தரவும் பெறவும் தகுதிகள் கொண்டு
திகழ்வோர் மட்டும் உறுப்பினர் ஆகத்
தேர்வாகின்ற விதிமுறை உண்டு!


விதிமுறை யாதெனப் பின்னர் இங்கே
விளக்கம் விரிவாய்ச் சொல்வோம்;
அதுவரை இதிலே அக்கறை உள்ளோர்
அனைவரும் வந்து சேர்ந்து கொள்ளலாம்!
இதுவரை சொன்னது முதல் அறிவிப்பே
இனிமேல் விளக்கம் ஒவ்வொன்றாக
மெதுவாய் மெதுவாய் அறிவிக்கப்படும்;
மேலோர் யாவரும் அறிவீர் இதனை!


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
13.09.2011

Post a Comment